தொறும் வெவ்வே றடைபெற்று வழங்கும். அத்தகைய பெயர்கள் அடையடுத்த பலபொரு ளொருசொல்லாம்.எ-டு: அரசு, ஆற்றரசு, பூவரசு; வேம்பு (அல்லது நல்லவேம்பு), நாய்வேம்பு, கறிவேம்பு, நிலவேம்பு; நெல்லி, கீழ்வாய்நெல்லி; பருத்தி, வேலிப்பருத்தி; தாழை, கற்றாழை; வாழை, கல்வாழை; புலி, வரிப்புலி (வேங்கை), சிறுத்தைப்புலி, கழுதைப்புலி, ஈப்புலி. சில பொருள்களின் இனத்தியன்மையை அல்லது ஒப்புமை யைக் குறிக்க, அவற்றின் தொகுதிப்பெயர் அல்லது பொதுப்பெயர் தொகைபெற்று வழங்குவதுண்டு. அத்தகைய பெயர்கள் தொகை பெற்ற பலபொரு ளொருசொல்லாம்.எ-டு: முந்நிரை ஆடு மாடு எருமை என்னும் மூன்றன் மந்தை அல்லது கூட்டம். முக்கடுகம் சுக்கு மிளகு திப்பிலி என்பன. அடையடுத்ததும் தொகை பெற்றதுமான பலபொரு ளொரு சொற்கள், ஓரினந் தழுவியவாயு மிருக்கலாம்; வேறினந் தழுவியவாயு மிருக்கலாம். பலபொரு ளொருசொற்கள் ஒருபொருட் பலசொற்களைப் போல மொழிவளத்தை யுணர்த்தாவிடினும், தொகுத்தறிவும் பகுத்தறிவிற்கு வழிகாட்டுதலின், அவ்வளவில் மக்கள் பண்பாட்டை யுணர்த்துவனவேயாம் என அறிக. |