தமிழில் வழங்காத வெதிர் (மூங்கில்) என்னும் சொல், தெலுங்கிலும், “நூக்கு’, “நொய்ம்மை’, “குறங்கு’, “தவ’ முதலிய இலக்கியச் சொற்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உலக வழக்காய் வழங்குவதை நோக்குமிடத்து, சொற்கள் வழக்கினாலேயே எளிய தன்மையும் அஃதின்மையாலேயே அரிய தன்மையும் அடைகின்றன என்பது தெற்றென விளங்கும்.1 வடமொழிச் சிறப்பெழுத்துகள் போன்ற வல்லொலி யெழுத்துகள் தமிழிலின்மையால், தமிழ்ச்சொற்களில் எதையும் பலுக்க (உச்சரிக்க) முடியாத கடுமையுடையதென்று கொள்வதற்கிடமில்லை. அகத்தியம் (அவசியம்), ஆவலாதி (முறையீடு), இலக்கு (குறிப்பிட்ட இடம்), அரங்கு (அறை), அலுவல் (உத்தியோகம்), குதாவிடை (தடை), துப்புரவு (சுத்தம்), நரல் (ஜனம்), மேலாவு (மேலதிகாரிகள்) முதலிய பல சொற்கள், தென்னாட்டில் தொன்று தொட்டு உலக வழக்காக வழங்கி வருகின்றன. அவை தென்னாட்டார்க்கு எளிய சொற்களாயினும், ஏனையோர்க்கு அரிய சொற்களே. இதனால், சொற்கள் எண்சொல்லும் அருஞ்சொல்லு மாவதற்கு, அவற்றின் வழக்குண்மையும் இன்மையுமே காரணமென்பது வலியுறுதல் காண்க. அழகான தென்சொற்களிருக்க, அவற்றிற்குப் பதிலாக வேண்டாத அயற்சொற்களை வழங்குவதினால், தமிழின் தன்மையும் தூய்மையும் வளமுங் கெடுவதுடன், பல தென்சொற்கள் பொருளிழக்கவும் நேர்கின்றன. எ-டு: ‘உயிர்மெய்’ என்பது பழங்காலத்தில், உயிரையுடைய மெய் என விரிந்து, பிராணிஎனப் பொருள்பட்டது. பிராணிபோல உயிரும் மெய்யுஞ் சேர்ந்த எழுத்தை உயிர்மெய் என்றது உவமையாகுபெயர். ஆனால், பிராணி என்னும் வடசொல்லை வழங்கியபின், உயிர்மெய் என்னும் தென்சொல் வழக்கிறந்ததுடன் பொருளுமிழந்து விட்டது. இனி, பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவது போல, வடசொற்களோடு கலந்த பல தென்சொற்களும் 1. தள்ளுவதை நூக்குதல் என்பது வடார்க்காட்டு வழக்கு; தொடையைக் குறங்கு என்பது இராமநாதபுர வழக்கு; காளிக்கு ஆட்டுத் தொடையைப் படைத்தலை ‘அம்மனுக்குக் குறங்கு கொடுத்தல்’ என்பது அம் மாட்டத்தார்; சின்ன என்பதை நொய்ய என்பது குடந்தை வழக்கு; இளம்பிஞ்சைத் தவப் பிஞ்சு என்பது திருச்சிராப்பள்ளி வழக்கு; குறங்கு மட்டை என்பது தஞ்சை வழக்கு. |