பக்கம் எண் :

81

கனவு, தூக்கம், பயிற்சி, வெள்ளி முதலிய தென்சொற்க ளிருப்பவும், சொப்பனம் நித்திரைஅப்பியாசம் நக்ஷத்திரம் முதலிய வடசொற்கள் வீணே உலவி வருகின்றன.

எழுநாட்பெயர்களுள், அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இருநாட் பெயர்கள் வழக்குவீழ்ந்து போயின.

இரங்கும் நிலையில், ‘அளியன்!’ ‘அளியள்!’ ‘அளியர்!’ ‘அளிது!’ ‘அளிய!’ என்று சொல்லும் வழக்கு வீழ்ந்து, பாவம்! என்று சொல்லும் வழக்கு வேரூன்றியுளது.

இந்த நிலையில் தமிழிற் போதிய சொற்களில்லை என்று குறைகூறுதலும் வழக்கற்ற சொற்களைப்புதுக்கக்கூடாதென்று தடைசெய்தலும் ஒருங்கே நிகழ்கின்றன. தமிழாட்சியும் மாட்சியும் நீங்கி எத்தனையோ நெடுங்காலம் கழிந்தபின்னும், இக்காலக் கருத்துகட்கேற்ற சொற்களும் சொற்கருவிகளும் தமிழில் மலிந்துள்ளன. பல தமிழ்ச்சொற்கள் வழக்கற்றமைக்குக் காரணம் அயலாரால் புகுத்தப்பெற்ற ஏமாற்றுக்கொள்கை யாதலின், அவற்றைப் புதுக்குதல் தமிழர் கடனும் முறைமையுமாகும்.

ஒரு நாட்டுச் செல்வங்களுள் மொழியும் ஒன்றாகும். மொழித் துணையின்றி ஒரு நாட்டார் நாகரிகமாகவும் வசதியாகவும் வாழ்வ தரிது. முன்னோர் அரும்பாடுபட் டீட்டிய அறிவுச் செல்வமெல்லாம், மொழிவாயிலாகவே போற்றப்பட்டு வருகின்றன. புல் என்றொரு பொதுப் பெயரையோ, அறுகு என்றொரு சிறப்புப் பெயரையோ, வா என்றொரு வினைச்சொல்லையோ, புத்தம் புதுவதாக ஒருவர் எங்ஙனம் ஆக்குதல்கூடும்? எத்துணைச் சொற்கள் சேர்ந்து ஒரு பெருமொழியும் அதன் இலக்கியமும் அமைகின்றன! முன்னோர் வைத்துப்போன சின்னஞ் சிறுபொருள்களைக் கூடப் பொன்னே போல் போற்றுவது மக்கள் வழக்கமாயிருக்க, தொன்றுதொட்டு இன்றுகாறும் கணக்கற்ற தலைமுறைகளாய்த் தொடர்ந்தும் திரண்டும் வரும் அரும்பெருஞ் செல்வத்திரட்டாகிய மொழியை, எத்துணைக் கவனமாகவும் கண்ணியமாகவும் பேணுதல் வேண்டும்!.

இடைக்காலத் தமிழரின் பேதைமையால் பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல் சொல் எத்துணை யெத்துணை! பல கலைகளிலுள்ள சொற்றொகுதிக ளெல்லாம் சேர்ந்தே ஒரு மொழியாகும். ஒரு கலைச்சொற்களைப் பிறிதொரு கலையிலும், ஒரு