பொருள்திரி சொற்கள் உலகிலுள்ள ஒவ்வொரு பொருட்கும் மக்கள் உள்ளத்தி லெழும் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு சொல் தோன்றுவது, மொழிவசதிக்கு இன்றியமையாததாகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச்சொல் அமைவது இயலாது. ஆதலால், பழஞ்சொற்களினின்றே வேண்டும். கருத்துகள் ஒன்றோடொன்று தொடர்புற்றிருப்பதால், அவற்றைக் குறிக்கும் சொற்களும் தொடர்புற்றிருப்பது பொருத்தமே. கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்கவேண்டியிருப்ப தால், ஒரு மொழி முழுவளர்ச்சியடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன. பழஞ்சொல்லினின்று புதுச்சொல் திரிக்க வசதியில்லாவிடத்து, ஒரு சொல்லே தொடர்புள்ள பல பொருள்களைக் குறிக்க நேர்கின்றது. இங்ஙனம், பொருள் திரியினும் சொல் திரியாத பெயரே ஆகுபெயர் எனப்படும். சொற்கள் காரணம் பற்றியும், ஆட்சி பற்றியும் பொருளுணர்த்தும். காரணம் பற்றிப் பொருளுணர்த்துவதே சொல்லுக்குச் சிறப்பாயினும், பொருளுணர்த்துங் குறியே சொல்லாதலின், சிறுபான்மை ஆட்சிபற்றியும் சொல் பொருளையுணர்த்துமாறு பயன்படுத்தப் பெறும். அவ் வாட்சியும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு வேறுபடும். ஆட்சிப்பொருள், ஆள்வான் கருத்திற் கேற்றபடியும், ஆளும் சொல் குறிக்கும். பொருளின் நிலைமைக் கேற்றபடியும், (1) உயர்பு, (2) இழிபு, (3) பொது, (4) வரையறுப்பு, (5) விரிப்பு என ஐந்நிலைமைப்படும். 1. உயர்பு (Elevation) அரசனே தெய்வமாக வணங்கப்பட்ட முதற்காலத்தில், இறைவன் என்பது அரசனையும் கோவில் (அல்லது கோயில்) |