பக்கம் எண் :

95

3. அரசர் இயல்பு

அரசனுக்கும் குடிகட்குமுள்ள தொடர்பு தந்தைக்கும் மக்கட்கு முள்ள தொடர்பாகும். குடிகளை அரவணைத்துக் காப்பவனேயன்றி, அதிகாரத்தோடு ஆள்பவன் சிறந்த அரசனல்லன். அரசனைக் குறிக்கும் பெயர்களுள், காவலன் என்பது ஒன்றாகும். அரசனுக்குரிய தொழில் குடிகளைத் திறமையாய்க் காப்பதே என்னும் உண்மை, இச் சொல்லால் விளங்கும். ஓர் அரசனுடைய குடிகளை அவன் அடிநிழலார் என்று கூறுவதும் இக் கருத்துப் பற்றியே.

“ மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
   தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
   ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
   ஆனபயம் ஐந்துந்தீர்ந்து அறங்காப்பான் அல்லனோ           (திருஆரூர், 36)

என்றார் சேக்கிழார்.

அரசன் குடிகளைத் துன்பவெயிலினின்று காத்தற்கு அடையாளமாகவே, வெண்கொற்றக்குடை தாங்கியுள்ளான்.

“ கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
  வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
  குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!’’                                   (புறம். 35 19 - 21)

என்றார் வெள்ளைக்குடி நாகனார்.

“ பலகுடை நீழலுந் தம்குடைக்கீழ்க் காண்பர்
  அலகுடை நீழ லவர்’’                                                      (குறள். 1034)

என்று அரசனுடைய நாட்டைக் ‘குடைநீழல்’ என்று வள்ளுவர் கூறியதும் இக் கருத்துப்பற்றியே.

4. கணவன் மனைவியர் இயல்பு

கணவனும் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக ஒருவர்க் கொருவர் உரிமை பூண்டிருப்பதனால், இருவர்க்கும் முறையே கிழவன் கிழத்தி என்று பெயர். கிழமை பூண்டவன் கிழவன்; கிழமை உரிமை.கணவன் மனைவியர் காதல் உரிமை யெனப்பட்டமைக்கும் இதுவே காரணம். இருவரும் ஒருவர்க்கொருவர் கண்போற் சிறந்தவராதலின் கண்ணாளன் கண்ணாட்டி எனவுங் கூறப்படுவர்.

மனைவிக்கு வாழ்க்கைத்துணை என்றும், இல் இல்லாள் மனை மனைவி குடி என்றும் பெயரிருப்பதால், மனைவி