கணவனுடன் ஒத்துழைத்து அவனுக்கு அடங்கி நடத்தல் வேண்டு மென்பதும், ஆடவன் பெண் துணையின்றி வாழ்க்கை நடத்துதல் இயலாதென்பதும், ஆடவன் வெளியேறிப் பொருளீட்டிக் கொணர்ந்து கொடுக்க மனைவி இல்லத்திலிருந்து கொண்டே தன்னையும் வேண்டுமென்பதும் பெறப்படும்.1 வலவனுக் கடங்காத குதிரைக்குத் தட்டுவாணி என்றும் சண்டி என்றும் பெயர். இப் பெயர்கள் கணவனுக் கடங்காத மனைவியையுங் குறிக்கும்.2 5. ஆண் பெண் இயல்பு ஆண்மையுள்ளவன் ஆண்; பெண்மையுள்ளவள் பெண். ஆண்மை மறம்; பெண்மை விரும்பப்படும் தன்மை. நெறிப்படக் கருதிய கருத்துகளையெல்லாம் வெளியிடுதலும், இருளுக்கும் பேய்க்கும் அஞ்சாமையும், உயிர்க்கிறுதிவரினும் ஒழுக்கம் தப்பாமையும், பற்றலரைக் கண்டால் பணியாது பொருதிறத்தலும், இடுக்கண் வருங்கால் நகுதலும் ஆண்மையாம்; முகத்தழகொடு அகத்தழகும் உடைமையும் ஆணவமின்றி யமைந்திருத்தலும், கல்வியறிவு நிரம்பியிருத்தலும், நல்ல கணவனுக்கடங்கி நடத்தலும் பெண்மையாம். 6. வறுமையால் ஒழுக்கங்கெடுதல் உயர்ந்த மக்கள் வறுமையிலும் செம்மையாயிருத்தல் கூடு மாயினும், பொதுவாக வறுமையால் ஒழுக்கங்கெடுவதே மக்க ளியல்பாம். போக்கிலி என்னும் சொல் ஒரு போக்குமில்லாத ஏழையைக் குறிக்கும் சொல்.அது போக்கிரி எனத் திரிந்து, கருதியதைச் செய்துவிடும் கயவனைக் குறிக்கும். இச்சொற்றிரிபும் பொருட்டிரிபும், உணவுக் கில்லாதவன் ஒழுக்கங்கெடுவதும் வலிந்து பொருள் வௌவுவதும் திண்ணம் என்னும் பொதுவுண்மையை உணர்த்துவனவாகும். சிறு கூரைவீட்டைக் குச்சுவீடு என்றும், குச்சில் என்றும் கூறுவது வழக்கம். குடிசையில் வசிப்பவளைக் குறிக்கும் குச்சுக்காரி என்னும் சொல், ஒழுக்கங் கெட்டவளை யுணர்த்துவதும், மேற்கூறிய உண்மையை வலியுறுத்தும். 1. மனைவி வீட்டுவேலையைச் செய்ய வேண்டுமென்று இங்குக் கூறியது பெரும்பான்மைபற்றி யென அறிக. 2. Jade என்னும் ஆங்கிலச்சொல் அடங்காக் குதிரையையும் அடங்கா மனைவியையுங் குறிப்பது ஒப்பு நோக்கத்தக்கது. |