7. அகத்தழகின் சிறப்பு முகத்தழகு யாவராலும் விரும்பப்படுவதொன்று. ஆனால் அகத்தழகு அதினும் சிறந்தது. ஆதலால் அழகின்மையை யுணர்த்தும் பொல்லாங்கு பொல்லாப்பு என்னும் சொற்கட்கு, தீமை தீங்கு என்னும் பொருள்கள் ஏற்பட்டுள்ளன. பொல் என்பது அழகையுணர்த்தும் பகாச்சொல். பொன்மை அழகு; பொல்லாமை அழகின்மை. பொல் - பொன் = அழகான தாது. பொல் + அம் = பொலம். பொலம் = பொன். பொலங்கழல் = பொற்கழல். பொல் + பு = பொற்பு. பொல்லுதல் = அழகாயிருத்தல். பொற்ற = அழகிய, நல்ல. “ பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார்’’ (சீவக.885) என்றார் திருத்தக்கதேவர். பொல்லாத - பொல்லா = அழகில்லாத. “ பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே’’ என்று ஒளவையார் பாடுதல் காண்க. பொல்லாங்கு தீது; பொல்லாப்புத் தீங்கு. “ புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது’’ என்று அதிவீரராம பாண்டியரும். “உள்ளதைச் சொன்னால் கொள்ளைக் கண்ணிக்குப்பொல்லாப்பு’’ என்று பழமொழியும் கூறுதல் காண்க. பொல்லான் பொல்லாதவன் என்பன தீயவனைக் குறிக்கும் பெயர்கள். 8. தன்னலமின்மையால் கொள்கை தளராமை ஒருவர் தன்னலத்தினால் கொள்கை தளர்வதும் அஃதின் மையால் உறைத்து நிற்பதும், ஒழுக்கம் குலம் மதம் கட்சி முதலிய பல துறைகளிலும் கண்கூடாகக் காண்கின்றோம். எந்தக் கொள்கையையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டுமாயின், தன்னலமிருத்தல் கூடாது. கொள்கையென்றது இங்குப் பொதுநலக் கொள்கையை. |