இவர் கல்லாடத்தில் முதல் 37 பாடல்களுக்கும் உரை செய்துள்ளார். எஞ்சிய பாடல்களுக்கு சுப்பிரமணிய முதலியார் என்பவர் உரை வரைந்துள்ளார். இவர் தொல்காப்பியம், திருக்குறள், சில சைன நூல்கள் ஆகியவற்றிற்கும் உரைசெய்தார் என்று கூறப்படுகிறது. | நூல் : | கல்லாடம் முதல் 31 பாடல்களுக்கான உரை. |
மயிலைநாதர் (13 - நூ) இவர் நன்னூல் என்ற தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதியவர். நன்னூலுக்குவரையப்பட்ட உரைகளில் பழைமையானது இவர் எழுதிய உரையேயாகும். மயிலைநாதர் என்ற பெயர் மயிலாப்பூரில் முன்பு இருந்த சிவாலயத்தில் எழுந்தருளியிருந்த 22-வது தீர்த்தங்கரர் நேமிநாதருக்குரிய பெயராகும். இவ்வுரையாசிரியர் இப்பெயரைக் கொண்டிருத்தலானும், அருக தேவனைப் பலபடப் பாராட்டியிருத்தலானும் சைன மதத்தினர் என்பது தெளிவு. இவர் நன்னூலை ஆக்குவித்த சீயகங்கனை (கி.பி.1210) பாராட்டியிருத்தலானும், குடிப்பெயருக்கு எடுத்துக்காட்டாக ‘கங்கன்’ என்ற ஒரு பெயரைக் காட்டியிருத்தலானும் சீயகங்கன்மரபில் வந்த வள்ளலால் ஆதரிக்கப்பெற்று நன்னூலுக்கு உரை எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இச்செய்திகளால் இவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்று நினைக்க இடமுண்டு. கங்கமரபினர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்களாதலால், இவரும் அம்மண்டலத்தைச் சேர்ந்தவரேயாவர்.
|