ஆர

ஆராய்ச்சி உரை

I

1. நாடோடிப் பாடல்களின் தோற்றமும்
இயல்பும்

பேசத் தெரிந்த மனிதன்

னிதன் பேசத் தெரிந்தவன்; தன்னுடைய உணர்ச்சியையும் கருத்தையும் பிறருக்கு வெளிப்படுத்தத் தெரிந்தவன். விலங்கினங்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினாலும் மனிதனைப் போல வெளியிடும் அறிவும் ஆற்றலும் அவற்றுக்கு இல்லை. மனிதனோ தக்கது, தகாதது என்று உணரும் அறிவு பெற்றிருக்கிறான்; சிந்திக்கும் திறமை பெற்றிருக்கிறான்; பல குணங்களின் வெளியீடான உணர்ச்சியைப் பெற்றிருக்கிறான்; அவற்றை வெளியிடும் மொழியாற்றலையும் அதற்கு ஏற்பப் பண்பட்ட கருவிகளையும் பெற்றிருக்கிறான். அதனால், சில விலங்குகளிடம் சில சமயங்களில் ஒலி உண்டானாலும் மனிதனைப்போலத் தம் கருத்தை ஒலி மயமாக்கி வெளியிடும் ஆற்றலை அவை பெறவில்லை.

    காக்கை, குருவி முதலியன ஒருவாறு தம்முடைய குரிலினால் தம் கருத்தை வெளியிடுகின்றன என்றும், அவற்றிற்கும் மொழி உண்டு என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். நம் நாட்டுப் பழங் கதைகளிலும் விலங்கின் மொழிகளை உணர்ந்தவர்கள் இருந்தார்கள் என்ற செய்தி வருகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கு விலங்கு, பறவை முதலியவற்றின் மொழி தெரியுமென்றும், அவை பேசுவனவற்றை அவர் கூர்ந்தறிந்தாரென்றும், அதனால் அவருக்குக் கழறிற்றறிவார் என்ற பெயர் உண்டாயிற்றென்றும் பெரியபுராணம் கூறும்.1 ஆயினும் அந்த ஒலிகள் மிகச் சிலவே; மனிதனுடைய மொழியைப் போல நுட்பமும் விரிவும் உடையன அல்ல.

    இவ்வாறு உயிர்க் குலங்களுக்குள் பிற உயிர்களுக்கில்லாத பெரும் பேறாகிய மொழியைப் பெற்ற மனிதன் வரவர அதனை வளப்படுத்திக் கொண்டான். முதலில் பண்டங்களின் பெயர்களையும்
_____________________________________________

1. சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 14, 16.