கள

கட்டில்லாக் கவிதை

3

களில் தம்முடைய ஆற்றலைப் புகுத்தினார்கள். வளம் பெற்ற மொழியின் கலையழகு கவிகளில் மலர்ந்தன, இலக்கியம் பிறந்தது.

கட்டில்லாக் கவிதை

    நாகரிகம் வளர வளர மனிதன் தான் வாழ மாளிகையும், செல்ல வாகனமும், பூணப் பூணும், உடுக்க நுண்ணிய துகிலும், பயன்படுத்தப் பல அரிய பண்டங்களும் படைத்துக்கொண்டான். அப்படிப் படைத்துக்கொண்ட காலத்திலும் மாளிகையில் வாழாதவர்களே மிகுதியாக இருந்தார்கள்; அணிகளைப் பூணாதவர்களே பலராக இருந்தார்கள், இலக்கியத்தை நுகரத் தெரியாதவர்களே பெரும்பாலோராக இருந்தனர். அவர்களைப் பாமரர் என்று மற்றவர்கள் சொன்னார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்களுக்குப் புலவர்களின் பாடல்களும் காவியமும், பண்களும் தாளபேதங்களும் விளங்காதவை. ஆனால் அவர்களுக்கு இன்பத்தைத் தரும் வகையில் அமைந்த பாடல்கள் இல்லாமற் போகவில்லை. பழங்கால முதற்கொண்டு மனித குலம் வாய்மொழியாகப் பாடிவந்த கட்டில்லாக் கவிதையும், காலில்லாக் கதைகளும் அவர்களிடம் உலாவின. பழையவை பரவின; அவற்றிற்குப் புதிய உருவங்கள் அமைந்தன. புதியவை தோன்றின. அவர்களிடையே வழங்கிய அந்தப் பாடல்களை எழுதிவைப்பார் இல்லை; பாடம் சொல்வார் இல்லை. அவற்றுக்கு இலக்கணம் வகுப்பார் இல்லை; உரை கூறுவாரும் தேவை இல்லை.

    இருப்பினும் பெரும்பாலான மக்களிடையே அவை பரவின; வளர்ந்தன;     வேரூன்றின. புலமையும் கற்பனையும் உணர்ச்சியும் கலை நலமும் இணைந்த இலக்கியம் ஒருபால் வளர்ந்துகொண்டு வந்தது. கரையும் போக்கும் வரையறுத்த ஆறுகளாகக் கால்வாய்களாக, உரமும், பந்தலும் இட்டுப் படர்ந்த மல்லிகையாக அவ்விலக்கியங்கள் பரவின. அதே சமயத்தில் மலையிலிருந்து தானே வீழும் அருவியாக, காட்டிலே தானே மலர்ந்து மணக்கும் முல்லையாக, சோலையிலே தானே பாடும் குயிலின் இன்னிசையாக நாடோடிப் பாடல்களும் வளர்ந்து வந்தன. இருவகைப் பாடல்களிலும் இசையும் தாளமும் உணர்ச்சியும் இருந்தன.

    இலக்கியத்தில் உள்ள சொல்லமைதி நாடோடிப் பாடல்களில் இல்லாமல்     இருக்கலாம்; ஆனால் நாடோடிப் பாடல்களில் ஒருவகை மழலைத் தன்மை இருக்கிறது. இலக்கியத்தில் நுட்பம் இருக்கிறது; நாடோடிப் பாடல்களில் குழந்தை உள்ளம் பேசுகிறது.