New Page 1

குடும்பம்

47

    வெற்றிலை மடித்துக்கொடுப்பாள்
        வெறும்பேச்செல்லாம் பேசுவாள்
    கூடச்சாகி றேனென்னுவாள்
        கூந்தலை விரித்துப் போட்டு
    ஏமாந்து மோசம்போகாதே - தம்பி
        ஏமாந்து மோசம் போகாதே!1

    மேலே, தன் பெருமையை முரசடிக்கும் கள்ளன் பாட்டு இருக்கிறது. தந்தானென்கிற பாட்டுப் பாடிச் சபையில் வரும் கள்ள வேஷக்காரன்தான் அவன்; உண்மைத் திருடன் அல்ல. ஆனாலும் அவன் கோட்டை கொத்தளம் மேலே ஏறிக் கூசாமல் ஓடிடுவானாம். கொத்தவால் கண்டு பிடிக்க வந்தால் காலையும் கையையும் வெட்டி விடுவானாம்!

    எண்டப்புளி ரோட்டில் எக்குத்தப்பாய்ச் சில பேரிடம் சிக்கிக்கொண்ட திருடன் ஒருவன் தன் கதையைச் சொல்லும் பகுதி பிறகு வருகிறது. இதில் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்பு,

தாடிப்பத்திரி சீலை - இழுத்துப் போத்தடி மேலே

என்ற அடி அமைந்திருக்கிறது.

    இறுதியில் ஒரு திருடன் தன் பிரதாபங்களைக் கூறிக் கொள்வதாக 11 பாடல்கள் இருக்கின்றன. அவன் பேச்சில் பறங்கிமலை, பல்லாவரம், சென்னை, வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர், மானா மதுரை ஆகிய ஊர்கள் அடிபடுகின்றன.

7. குடும்பம்

    இந்தத் தலைப்பில் கல்யாணப் பாட்டுக்களும் மாமியார் மருமகள் சண்டையும் கோக்கப் பெற்றிருக்கின்றன. கல்யாணத்தைப்பற்றிய சில பாட்டுக்களும் கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலி பண்ணும் பரிகாசப் பாட்டும் முன்பு உள்ளன.

    பின்பு பெண்ணுக்கு அறிவுரை வருகிறது. அறிவுரை கேட்கும் பெண் சுண்டெலிப் பெண் அந்தக் காலத்தில் இளம் பருவத்திலே திருமணம் செய்துவிடுவதனால் மணப்பெண் சின்னஞ் சிறியவளாகச் சுண்டெலியைப்போல இருந்தாள். அதனால்தான் ‘சுண்டெலிப் பெண்ணே!’ என்று விளிக்கிறார்கள் போலும்!

    சுண்டெலிப் பெண்ணுக்குச் செய்யும் இந்த உபதேசம் மிக நீளமாக இருக்கிறது.
_________________________________________________

    1. ப. 187 : 56, 57.