New Page 1

46

ஆராய்ச்சி உரை

    செந்தலைப் புலிகள் அவன் பேரைக் கேட்டு நடுங்குவார்கள் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஆகியவர்கள் எட்டி எட்டிப் பார்க்கும் போதே அவன் சுவரிலேறிக் கட்டிடத்தையே தாண்டிப் போய்விடுவான்.

    பணக்காரப் பெண்கள் பழமை பேசி வழி நடக்கும்போது பதனமாக நகைகளையெல்லாம் பறித்துக்கொள்வான். லட்சாதிபதிகளை லட்சியம் பண்ணாமல் மானத்தை வாங்கி விரட்டி விரட்டி அடிப்பான். ஆயிர ரூபாயையும் அரைக்காசென்று எண்ணி ஏழைகளுக்கு அள்ளி இறைத்துவிடுவான். அன்னதானம் செய்வான். புல்லுக்காரப்பெண்கள் தன் பேரைச் சொல்லிப் பிழைக்கட்டுமென்று நல்ல நல்ல நகைகளையெல்லாம் கொடுத்துப் பூட்டிக் கொள்ளச் செய்வான். நெல்லறுக்கப் போனவளைப் பாதையிலே நிற்கவைத்து நகைகளைப் பூட்டி அனுப்புவான். கையெடுத்த பேருக்கெல்லாம் கை நிறையப் பணம் கொடுத்துப் பைகளைத் திறக்கச்சொல்லிப் பற்றாததற்குப் போட்டு நிரப்புவான். தங்கம் பொன் வெள்ளி எல்லாம் தண்ணீருக்குச் சமமாக எண்ணித் தானதர்மம் செய்வான்.

    ஆட்களை விட்டு உளவை அறிந்துவரச் செய்து பணக்காரரிடம் பணம் பறிப்பான். அவனும் அவன் மைத்துனனுமே இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

    பட்டப் பகலிலே சப் இன்ஸ்பெக்டர் சட்டையைக் கழற்றித் தான் போட்டுக்கொண்டு போவான். ராத்திரி வேளையில் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு போய்ப் போலீஸ்காரர் கும்பிட அவர்கள் ‘பீட்நோட்’டில் பென்சிலால் கையெழுத்துப் போடுவான்!

    இப்படி அவன் செய்த சாகசச் செயல்கள் பல. கடைசியில் ஒரு நாள் ராத்திரி அவனுடைய காமக் கிழத்தி காட்டிக் கொடுக்கப் போலீஸ்காரர்கள் அவனைச் சுட்டுவிட்டார்கள்.

    இந்தக் கதையைச் சொன்ன நாடோடிப் பாவலன் கடைசியில் நீதியைச் சொல்லி முடிக்கிறான்.

ஆழமான ஆற்றையெல்லாம்
        ஆனைபுலி கரடியெல்லாம்
    அஞ்சாமல்தான் நம்பலாம்
        ஆனால் பதினாறுமுழச்
    சீலைக்காரி பத்திரம் - அப்பா

        சீலைக்காரி பத்திரம்!