|
ஜம
ஜம்புலிங்கம் என்ற
கொள்ளைக்காரன் திருநெல்வேலிச் சீமையிலே முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தான்.
அவன் பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உபகாரம் செய்தவன். அதனால் ஏழைகளுக்கெல்லாம்
அவனிடம் பரிவு இருந்தது. அவனுடைய சாகசச் செயல்களை வியப்புடன் கதை கதையாகச் சொல்லிக்கொண்டார்கள்.
அவனைப் பிடிக்கப் போலீஸ்காரர்கள் பலபடியாக முயன்றும் அவன் அகப்படவில்லை. அவனுக்கு ஒரு காமக்
கிழத்தியிருந்தாள். அவள் செய்த வஞ்சகத்தால் கடைசியில் ஜம்புலிங்கம் அகப்பட்டுக் கொண்டான்.
அவள் போலீஸ்காரருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டாள்.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளில்
நாள்தோறும் ஜம்புலிங்கத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணமாக இருந்தன. மக்கள் ஆர்வத்தோடு
அவற்றைப் படித்தார்கள்.
ஜம்புலிங்கத்தின் வரலாற்றைப்
புத்தகமாக ஒருவர் எழுதினார். அவனைப் பற்றிப் பல பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒரு தொடரே
இங்கே 57 பாடல்களாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும்,
வாரார் சொக்கத் தங்கம்
- நம்ம
நாடார் ஜம்பு லிங்கம்
என்ற இரண்டடிகள் வருகின்றன.
கடைசியில் இரண்டு பாட்டுக்களில் மாத்திரம் அவை இல்லை; அங்கே வேறு இரண்டடிகள் வருகின்றன.
ஜம்புலிங்கத்தைச் சிறந்த
வீரனாகவும் தர்மவானாகவும் சித்திரிக்கிறது இந்தப் பாடல். அவனுக்கு மலையாளம், செந்தமிழ்
இரண்டும் தெரியுமாம். எம்.ஏ., பி.ஏ. படித்து இங்கிலீஷூம் பேசுவானாம். ஆளிலே அழகன்; ஆசாரபோசன்;
தோள்கள் பருத்த மன்னன். முறுக்கிவிட்ட மீசையும் முன்னம் பல் வரிசையும் மினுக்கி வைத்த கத்தியும்
கையில் வெடிகளுமாகக் காட்சி அளிப்பான். தன் வீட்டையும் தாய் பிள்ளைகளையும் விட்டு விட்டுத்
தைரியமாகத் தர்மம் செய்ய வேண்டுமென்றே இந்தத் தொழிலை மேற்கொண்டானாம்!
அவனுக்கு அத்தை
மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சட்டை பண்ணாமல் அந்நியப் பெண்களின் மேல் ஆசை வைத்துப்
போனதால் மோசம் வந்தது.
|