44

ஆராய்ச்சி உரை

    பின்பு வரும் ஓடப் பாட்டு மலைக்காட்டில் வேலை செய்யும் பெண்கள் தம்முடைய வேலையைப் பற்றிப் பாடும் வகையில் அமைந்திருக்கிறது. காட்டுக்குள் பல விலங்குகள் இருக்கின்றன. அங்கே உள்ள தோட்டத்தில் கூழ் குடித்துவிட்டு வேலை செய்யப் புறப்படுகிறார்கள் கூலியாட்கள். கங்காணியும் கணக்குப் பிள்ளையும் இருக்கிறார்கள். மழையானாலும் களை எடுக்க வேண்டும். பால் குடிக்கிற பச்சைப்பிள்ளை பாலுக்கழுதாலும் பறந்துகளை எடுக்கவேண்டும்1. பழம் பறிக்கிறார்கள் பெண்கள். பெரிய ரைட்டர் வந்து அவர்களை வெருட்டுவான். கங்காணிக்குத் தலைக்காசு கொடுக்க வேண்டும். இல்லையானால் அவன் கூச்சல் போட்டுக் குதிப்பான்.2 வெண்ணீட் என்னும் துரை வருகிறார். அவர் கங்காணிமாருக்குக் காசு கொடுக்கிறார். நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கிறார்.

    இந்தத் தொடருக்குப் பின் தோட்டவேலை சம்பந்தமாகத் தொடர்பில்லாத கண்ணிகள் இருக்கின்றன. ரைட்டரை ரைட்டன் என்று சொல்கிறாள் பாட்டுப் பாடும் பெண்!

ரயிட்டன் வந்து-ஏலேலோ-லயிட்டுப்போட்டு-ஐலசா
    சயிட்ட டிப்பான்-ஏலேலோ-நயிட்டிலேதான்-ஐலசா.3

என்பதில் ஆங்கிலமும் தமிழும் கலந்த அவியலைப் பார்க்கிறோம்.

6. கள்ளன் பாட்டு

    நாடகத்தில் கள்ளன் வேடம் போடுகிறவனைக் கண்டு ஆரவாரம் செய்து கிராம மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் திருடன் பாட்டு, கள்ளன் பாட்டு என்று பல பாட்டுக்கள் அங்கங்கே வழங்கின.

    இந்தப் பகுதியில் முதலில் ஒரு திருடன் தன் பெருமைகளைச் சொல்லிக் கொள்வதாக ஆறு பாடல்கள் இருக்கின்றன. அவன் அந்தமான் மலையிலே பிறந்தவனாம்; ஆயிரம் மெடல் பெற்றவனாம்.

காலையிலே எழுந்திரிச்சுக்
        கைகாலைச் சுத்தம் பண்ணிக்
    கால்படி கள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன்
        கழுதைக்குச் சமானம்!4

என்பது அவனுடைய சித்தாந்தம்.
________________________________________________

    1. ப. 168 : 27.   
    2. ப. 169 : 39, 40.
    3. ப. 172 : 8.
    4. ப. 175 : 6.