பக்கம் எண் :

பக்கம் எண் :12

10. சமணத் திருப்பதிகள்

தமிழ்நாட்டிலே சமண சமயம் பண்டைக் காலத்திலே நன்கு செல்வாக்குப் பெற்றுப் பரவியிருந்தது. கிராமங்களிலும் நகரங்களிலும் சமணக் கோயில்கள் இருந்தன. இப்போது, சமண சமயம் பெரிதும் மறைந்துவிட்டது. ஆகவே, அக்கோயில்களும் கிராமங்களும் இப்போது பெரிதும் மறைந்துவிட்டன. மறைந்துபோனவையும் மறையாமல் உள்ளவையும் ஆன சமணக் கோயில்களையும் ஊர்களையும் பற்றி இங்கு ஆராய்வோம். பண்டைக் காலத்திலிருந்த எல்லாச் சமணத் திருப்பதிகளையும் ஆராய்வதற்கு இடமில்லை. எமது ஆராய்ச்சிக்கு எட்டியவரையில் எமக்குத் தெரிந்த திருப்பதிகளைமட்டும் இங்குக் கூறுவோம்.

1. சென்னை மாவட்டம்

மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் சமணக்கோயில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக் கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பது. திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் இது:

‘மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா ளொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.’’

அருகக் கடவுள், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் என்னும் நூல்,

‘மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்

மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்’’

என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்னும் செய்யுள்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நேமிநாதர் மயிலாப்பூர்க் கடற்கரையில், இப்போது செந்தோம் சர்ச்சு என்று கூறப்படுகிற கிறித்துவரின் தோமையார் கோயில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒரு காலத்தில், கடல் நீர் இக்கோயிலை அழித்து விடும் என்று அஞ்சி இக்கோயிலில் இருந்த அருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒரு கல்எழுத்துச் சாசனம்,

‘‘.........வுட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)க்

குடுத்தோ. இவை பழந்தீ பரா.....’’

என்று கூறுகிறது.35 இதனால் நேமிநாதர் கோயில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமையார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப் பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக் கடவுள் உருவங்கள் இருந்தன என்று ஆர்க்கியாலஜி அறிக்கை கூறுகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்ததாயும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாயும் கூறப்படுகிறது.36

மயிலாப்பூர் நேமிநாதர் பேரால் இயற்றப்பட்ட நூல் நேமிநாதம் என்பது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதர் என்னும் சமணர் மயிலாப்பூரில் இருந்தவர் என்பர். வேறு சமணக் கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் பிஷப் வீட்டிலும் உள்ளன. இவை தோமையார் கோயில் தோட்டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவை. மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் இந்நூலாசிரியரின் நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன.

2. செங்கற்பட்டு மாவட்டம்

உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.37

ஆநந்தமங்கலம்: ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்த தீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆனந்த தீர்த்தங்கரருக்கு ஒரு யக்ஷ¤குடை பிடிப்பது போன்றும் மற்றொரு யக்ஷ¤ சாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதிரை கொண்ட பரகேசரிவர் மனுடைய (பராந்தகன் 1) 38 ஆவது ஆண்டில் (கி.பி. 945 இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும்பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம், செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.38

சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன39.

பெரிய காஞ்சிபுரம்: இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது.40 பெரிய காஞ்சி புரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது41 காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது42 யதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது43.

மாகறல்: இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன44. இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது45. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது. இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என் நண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது.

ஆர்ப்பாக்கம்: மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது46.

விஷார்: இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

குன்னத்தூதர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனம் பெரிய நாட்டுப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணப்பாக்கம் என்னும் இனாம் கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.

கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் கூறுகின்றது.47

திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள அருகக் கடவுளுக்குத் திரை லோக்கியநாதர் என்றும், திருப்பருத்திக்குன்றாழ்வார் என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுகின்றன. மல்லிசேன வாமனாசாரியார் மாணவர் பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனார்யர் என்னும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகின்றது.48 வாமனாசாரியார் மல்லிசேனாசாரியாரை இன்னொரு சாசனம் குறிக்கின்றது.49 இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேனவாமனாசாரியார் ‘மேருமந்தர புராணத்’ தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். (இந் நூல்கள் இரண்டும் பிரபல சமணப் பெரியாராகிய ராவ்சாகிப் அ சக்கரவர்த்தி நயினார் க.மு., இ.கல்.ஆ.பெ. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன.) 2000 குழிநிலம் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது.50 விஷார் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழதேவரது 13 ஆவது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது.51 கைதடுப்பூர் கிராமச் சபையார் ‘திருப்பருத்திக்குன்றத்து ரிஷிசமுதாயத்தாருக்கு’க் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயிலிலுள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி
முன்னுளது மும்முனிவர் மூழ்கியது - மன்னவன்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா.’’

இக் கோயிலைப் பற்றி நன்கறிய விரும்புவோர் அரசாங்கத்தார் வெளியிட்டுள்ள ஆங்கில நூலிற் கண்டுகொள்க.52

சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது.53 இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.54 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.

புழல்: சென்னைக்கு வடமேற்கே 9 மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் கிராமம் பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச் சிற்ப முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்ப முறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

வில்லிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உண்டு.56

பெருநகர்: (பென்னகர்) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.57

3. வடஆர்க்காடு மாவட்டம்

கச்சூர்: காளாஸ்தி ஜமீன், திருவள்ளூருக்கு வடக்கே 12 மைலில் உள்ளது. கச்சூர் மாதரபாக்கம், இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு.58

நம்பாக்கம்: காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத்தில் அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட தென்றும் கூறப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டீஸ்வர சுவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.59

காவனூரு: குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல். இந்தக் கிராமத்தில் சமணத் திருவுருவங்கள் உள்ளன.60

குகைநல்லூர்: குடியாத்தம் தாலுகா. திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல். இங்குச் சமண உருவங்கள் உள்ளன.61

கோழமூர்: குடியாத்தம் தாலுகா குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல் விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 3 மைல். இங்குச் சமணச்சின்னங்கள் காணப்படுகின்றன.62

சென்னம்பட்டு: குடியாத்தம் தாலுகா. ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இக்கிராமத்தின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.63

திருமணி: விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல். இங்குச் சமண உருவங்கள் காணப்படுகின்றன.64

பெருங்கங்கி: வாலாஜாபேட்டை தாலுகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம். இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அருகிலும், கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.65

சேவூர்: ஆரணி ஜாகீர். ஆரணியிலிருந்து வடமேற்கு 2 மைல். இங்கு ஒரு பழைய சமணக் கோயில் உண்டு.66

திருமலை: (வைகாவூர் திருமலை) போளூர் தாலுகா. போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல். வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகின்றது. 161/2 அடி உயரம். குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவசரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது. பிற்காலத்து. ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

‘‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பங்கள நாட்டு நடுவில் வகை முகைநாட்டுப் பள்ளிச் சந்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம்’’ என்று கல்வெட்டுக் கூறுகின்றது; (S.I.I. Vol. No. 98) கடைக்கோடூர்த் திருமலைப் பரவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆசாரியார், ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. ‘பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள் நல்லாத்தாள்’ என்பவர். ‘ஸ்ரீவிஹார நாயகர் பொன்னெயில் நாதர்’ (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு செய்தி கூறுகின்றது. பல்லவவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணிமங்கை என்பவரும் இக்கோயிலுடைய ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபது காசும் நிலமும் கொடுத்த செய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டு ‘கணிசேகர மருபொற் சூரியன் கலிங்கு’ என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினார் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்படடுள்ள செய்யுள் கூறுகின்றது.(S.I.I. Vol. I. No. 94) அச்செய்யுள் இது:

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்
அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்
கலைபுரியு மதிநிபுணன் வெண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்றன் றிருநாமத்தால் வாய்
நிலைநிற்குங் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.

விடால்: வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியாதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர். ‘குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும்’ பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்துக் கூறுகின்றது. இவ்வூருக்குச் ‘சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம்’ என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது67

புனதாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலுகாவில் ஆனக்காவூருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக் கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் ஆங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற. அவர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக் கோயிலைக் கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது68 இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோயில் செம்புக் கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகின்றன.69 இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச் செய்யாறு தாலுகா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தல புராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.70

திருவோத்தூர்: இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு, சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர்.71 இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோயில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற் கருகில் உள்ள குட்டையில் சமணக் கோயிலின் செப்புக் கதவுகள் முதலியன புதைந்துகிடக்கின்றன என்று கூறப்படுகிறது.72

திருப்பனம்பூர்: காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வெற்றிபெற்ற அகளங்க ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இக்கிராமத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்ட பெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக் கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இக்கிராமத்தில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இங்குச் சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இக்கரந்தைக் கோயிலில் இடிந்து சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது இக்கோயில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோபுர வாயிலில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

‘‘காவுவயல் சூழ்தடமும் கனத்தமணிக் கோபுரமும்
பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன்
மேவுபுகழ்த் திருப்பறம்பை விண்ணவர்கள் போற்றிசெய்யத்
தேவரிறை வன்கமலச் சேவடியைத் தொழுவோமே.’’

பூண்டி: வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு. இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில், ‘செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல்குன்றக் கோட்டத்து’ வேண்டிய சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர்’ என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயிலை அமைத்து, வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகின்றது.

இக்கோயிலிலிருந்த செம்பு உருவச்சிலை, ஆரணிக் கோயிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் மிகப் பழமையானது.73

வள்ளிமலை: வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம் இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு. தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்’ என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்’ என்றும், மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே’ என்றும் கூறுகின்றன.

இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத்தினால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது துணியப்படும்.74

பஞ்சபாண்டவ மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென் மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவ மலை என்று பெயர் கூறப்பட்ட போதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இலது. இதற்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது. இப் பெயர் திருப்பான்மலை என்பதின் திரிபு. இந்த மலையின் கிழக்குப் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுனையும் காணப்படுகின்றன. இக் குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை பிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஓர் ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும், ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.

‘‘நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.’’

எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி’ என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி’ யின உருவம் என்றும், அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றன.

இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் ‘கூறகன்பாடி கற்பூர விலை’ யாயும், ‘அந்நியாயவால தண்ட இறையையும்’ இக் கோயிலுக்குப் ‘‘பள்ளிச் சந்தமாகக்’’ கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி, ‘இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.................இத் தர்மத்தை ரக்ஷ¤ப்பான் பாத துளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையில்லை’ என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள ‘கூறாம்பாடி’ என்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.

இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பதற்கு இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.75

பொன்னூர்: இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ நல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக் கோயிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.- இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது. இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்புச் செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்.

தேசூர்: வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச் சமணர் உள்ளனர். (Top List. P. 170., N.A. Dt. Mannual P. 215).

தௌ¢ளாறு: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக் கோயில் உண்டு. (Top. List. P. 170).

திரக்கோல்: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 81/2 மைல். இங்குள்ள குன்றின்மேலே மூன்று சமணக்கோயில்களும் மூன்று குகைகளும் உள்ளன. (Top. List. P. 170).

வெண்குன்றம்: வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல். இங்குச் சமணக் கோயில் உண்டு. (Top. List P. 171)

4.தென்ஆர்க்காடு மாவட்டம்

கீழ்க்குப்பம்: (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோயிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும், இரு பக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.76

திருவதிகை: தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப் போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். ‘திருவதி’ என்றும் ‘திருவீதி’ என்றும் வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக் கற்களைக் கொண்டுவந்து ‘குணபரன்’ என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் ‘குணதர வீச்சுரம்’ என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.

இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃது இவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது.77 ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது.78 இதனால், இங்குச் சமணக் கோயில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற ‘நால்முகநாயனார் கோயில்’ என்பதும் சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு ‘நான்முகன்’ (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

திருப்பாதிரிப்புலியூர்: (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப் பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதி யிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380 இல் (கி.பி 458 இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysore Archaeological Report 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம் மடத்தின் தலைவராக விளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப் பெயர் பெற்றார்.79 இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக் கொண்டுபோய், திருவதிகையில் ‘குணதரவீச்சுரம்’ என்னும் கோயிலைக் ‘குணபரன்’ என்னும் அரசன் கட்டினான் என்பர்.80 இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.81 இது 4 அடி உயரம் உள்ளது.

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.82

சிறுகடம்பூர்: திண்டிவனம் தாலுகாவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப் பட்டுள்ளன.83 இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன.84 இப்பாறைக்குத் திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது. இங்கு, சந்திரநந்தி ஆசிரியரும், இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.85 இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.

மேல்சித்தாமூர்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள மல்லிநாதர் கோயிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமண மடம் உண்டு. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச் சுவடிகளும் உண்டு. சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகிய போது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.86 இங்குள்ள கோயில்களில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.86(a)

தொண்டூர்: திண்டிவனம் தாலுகா. திண்டிவனத்திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று, ‘பஞ்சபாண்டவ மலை’ என்னும் பெயருடன் உள்ளது. இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது.86(b)

இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்ததாகச் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும், இந்தத் தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பெருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது.86(c)

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள ‘பட்டா நிலம்’ என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது இக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.87

அரியாங்குப்பம்: புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஓர் ஆண்டி, ‘பிரமா’ என்னும் பெயருடன் பூசைசெய்து வருகிறார்.88 அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூஉ போலும்.

பாவண்டூர்: திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. ‘திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.90

ஒலக்கூர்: திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம், ‘பிருதிவி விடங்க குரத்தி’ என்னும் சமண ஆரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.91

திருக்கோயிலூர்: திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தாம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.92 இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது.

தாதாபுரம்: இதன் பழைய பெயர் இராசராசபுரம் (திண்டிவனம் தாலுகா.) இவ்வூர்ப் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக் கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்

மரான இராசராச தேவரது 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘குந்தவை ஜினாலயம்’ என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்.) கட்டி, அக்கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.93 வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார்.(S.I. Vol. No. 67,68.)

வேலூர்: (திண்டிவனம் தாலுகா). இங்கிருந்த சமணக் கோயிலை ஜயசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.94

வீரசேகரப் பெரும்பள்ளி: இது, வந்தவாசி தாலுகாவில் உள்ள சளுக்கி என்னும் ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.95

பெருமண்டூர்: (திண்டிவனம் தாலுகா.) இங்குள்ள சந்திரநாதர் கோயில் மண்டபத்தூணில் உள்ள சாசனம், ‘பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி’யைக் கூறுகிறது.96 இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது.97

திட்டைக்குடி: (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், ‘மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச்சந்தத்தையும்’,98 இடைச் சிறுவாய் அமணன்பட்டு99 என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

கீழுர்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள சாசனம்,

‘...................கண்ணெனக்
காவியர் கயல்பயி லாவியூ ரதனில்
திக்குடை யிவரும் முக்குடையவர்தம்
அறப்புற மான திறப்பட நீக்கி’

என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கு) உரிய நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.100

பள்ளிச்சந்தல்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள ஒரு சிறு குன்றின்மேல் சிதைந்துபோன சென்னியம்மன் கோயில் என்னும் சமணக் கோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி.பி. 1530) இல் விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘ஜோடிவரி,’ ‘சூலவரி’ என்னும் வரிப்பணத்தை, ஜம்பையிலிருந்த நாயனார் விஜயநாயகர் கோயிலுக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.101 இதில் கூறப்படுகிற ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்தலுக்கு ஒருமைலில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று, பரகேசரி வர்மன் (பராந்தகன் 1) உடைய 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘வாலையூர் நாட்டுப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது கூறுகிறது.102 இதற்கு அப்பால் ஒரு மைலில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் III உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில், ‘கண்டராதித்தப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுகிறது.103 அன்றியும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமிநாதர் என்பவரின் உத்தரவை (கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால், ஜம்பை என்று கூறப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி ‘சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்’ என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும்.

(குறிப்பு: ‘அஞ்சினான் புகலிடம்’ என்பது அடைக்கல தானத்தைக் குறிக்கும். சமணர் அகாரதானம், ஒளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம், என்னும் இந்நான்கு தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சினான் புகலிடம் என்று இந்தச் சாசனம் கூறுகின்றது.)

சோழவாண்டிபுரம்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே கீரனூர் என்னும் கிராமத்தில் ‘பஞ்சனாம் பாறை’ எனப்படும் கற்பாறைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர்.104 சோழ வாண்டிபுரத்தில் உள்ள ‘ஆண்டி மலையில்’ 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலி கொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள. ‘தேவாரத்தை’ (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர்.105 இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டிக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது. தானம் கொடுக்கப் பட்ட இவ்வூரைக் குரந்திகுணவீரபடாரரும் அவர் வழிமாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது.106

இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே, வேளிர் கொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர், சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரி குடும்பத்தில் பெண் கொண்டவர் என்றும் கூறப்படுகிறார். (ஓரி, பாரி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடை ஏழு வள்ளல்களைச் சேர்ந்தவர்.) இராஷ்ட்ரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சத்திநாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.107

இவ்வூருக்கு அருகில் உள்ள தேவியகரம், எலந்துறை என்னும் ஊர்களிலும் பார்சுவநாதர் முதலிய சமண உருவங்கள் காணப்படுகின்றன. இந்தத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சமணக் கோயில்களும் இருந்த செய்திகள் சாசனங்களால் அறியப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்:

திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக்குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், ‘பள்ளிச் சந்தமாகிய இயக்கிப்பட்டி’ குறிக்கப்படுகிறது.108 (இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷ¤க்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, யக்ஷ¤ என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்று.)

திருக்கோவலூர் அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று, ‘குளவி குழி பள்ளிச் சந்தம்’ என்னும் நிலத்தைக் குறிக்கிறது.109

சிதம்பரத்துச் சாசனங்கள், ‘திருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர்’ என்னும் ஊரையும்,110 ‘ஆற்றூரான ராஜராஜ நல்லூரில்’ இருந்த ‘பள்ளிச் சந்த’ நிலங்களையும்,111 குறிப்பிடுகின்றன. திருவண்ணா மலைச் சாசனம், ‘மதுராந்தக வளநாட்டு ஆடையூர்நாட்டு ஆடையூர்’ வடக்கில் ஏரி கீழ்ப்பார்க்கெல்லை பள்ளிச் சந்தம் மேல் பார்க் கெல்லை பள்ளிச் சந்தம் நிலங்களை’க் குறிக்கின்றது.112 இன்னொரு சாசனம், ‘தச்சூர் பள்ளிச் சந்த’த்தைக் குறிக்கிறது.113 இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.

கொலியனூர்: (கோய்லனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.114 கோலியபுரநல்லூர் என்பது இதன் பழைய பெயர்.115 ‘ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி’ என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது,116 ‘‘காளயுக்திu ஆனிமீ 10உ ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ அசுரநாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசைத் திருப்பணிக்குப் பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திராதித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும் பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன்,’117 என்று ஒரு சாசனம் கூறுகிறது.

ஜினசிந்தாமணி நல்லூர்: விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப் பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைச் தெரிவிக்கிறது.

வேடூர்: விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.118

எள்ளானாசூர்: திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்குத் தெற்கே 161/2 மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது.119

செஞ்சி: செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch Dept. Southern Circle Madras. 1912-13. P.7)

5. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உறையூர்: இதனை ‘உறந்தை’, ‘கோழியூர்’ என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது120. இதனால், கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது121. உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்துவிட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப்பரணி உரையில் கூறப்பட்டுள்ளது122. சோழ அரசன்மேல் சினங் கொண்ட சிவ்பெருமான், மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது123. இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினும் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்தபிறகு, திருச்சிராபள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.

வெள்ளனூர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன; (Arch. Rep. 1909-1910).

பழநாகப்பள்ளி: கரூர் தாலுகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ வேந்தர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்குத் திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது124. இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுகா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசசோழ தேவரது 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், ‘திருவிடைக்குடி அமுது மொழிப் பெரும்பள்ளி’ என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டள்ளது125.

புலிவல்லம்: திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில், ‘புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச்சந்தம்’ கூறப்படுகிறது126. இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.

அமண்குடி: திருச்சி தாலுகா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், அமண்குடி குறிக்கப்பட்டுள்ளது127. ஷ அரசனது 23 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் ‘உறையூர் கூற்றத்து அமண்குடி’ யைக் கூறுகின்றது128. இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.

பழைய சங்கடம்: குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி. இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன129. இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம்: குளித்தலை தாலுகா சீயாலத்தில் ‘சுண்டக்காபாறை’ என்னும் குன்றில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.130

குத்தாலம்: தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் ‘பரதேசிப் பொடவு’ என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன131.

வீரப்பட்டி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக்கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது132.

ஜம்புகேஸ்வரம்: திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரிவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், ‘கவிராஜப் பெரும்பள்ளி,’ என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது133.

திருமலைவாடி: இங்குக் குந்தவைப் பிராட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S.I.I. Vol.I.67&68) இந்த அரசியார் வடஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் சமணக் கோயில்களைக் கட்டியுள்ளார்.

பெரியம்மா பாளையம்: பெரம்பலூர் தாலுகா பெரம்பலூருக்கு வடகிழக்கே 14 மைல். இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூடுண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன134.

அம்பாபுரம்: இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாளையம் தாலுகாவில் உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இங்குச் சில சமண உருவங்கள் இருக்கின்றன135.

ஜயங்கொண்ட சோழபுரம்: உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5 மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருங்கள் உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருத் திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்136.

வண்ணம்: உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பாளையத்துக்குத் தென்மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப்பளூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது137.

லால்குடி: திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைல். இவ்வூருக்கருகில், புள்ளம்பாடிக்குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலியே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது138.

மகாதானபுரம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 13 மைலில் உள்ளது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன139.

சிவாயம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது140.

சுண்டைக்காப்பாறை: குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக்கிராமத்தில் ஒரு பாறையின் மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது141.

வெட்டுவாந்தலை: குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன142.

6. புதுக்கோட்டை

அம்மா சத்திரம்: அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள். இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனகள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளிமலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத்திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ஆளுருட்டி மலை: அம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. ‘சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு..........குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.......உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை........பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,’ என்பது இச் சாசனத்தின் வாசகம்143. சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங் களும் இங்கு உள்ளன.

நாரத்தமலை: இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது144. இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென்திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச்செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புரத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675 இல் (கி.பி. 753 இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:

”ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலை உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங் குளமும் தருவதான அச்சும் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக. இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக்கொள்க - இவை பழந்திபராய னெழுத்து - ஆண்டு 6075. இவை வில்வவராயனெழுத்து - இவை தென்னவதரையனெழுத்து145.

பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம், ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், ‘இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்’ நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா’ என்றும் கூறுகின்றது.146 இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், ‘கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார்’ பள்ளிவயல்நிலம் இரண்டுமா’ என்று கூறுகிறது.147 இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.

சமணர்திடல்: இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு. காயாப்பட்டியில் உள்ள வெண்ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல் ஒன்றில், ‘ஸ்வஸ்திஸ்ரீ. திருவெண்ணாயில் ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளித் திருவாய்த்தல் மாடம் சயவீரப் பேரிளமையான்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.148 இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. ‘‘கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.............’’ என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது.

தேனிமலை: இதற்குத் தேனூர்மலை என்றும் பெயர் உண்டு. இங்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத் துறவி தவம் செய்வதைக் கண்டு இருக்குவேள் என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது.149 அது கீழ்வருமாறு:- ‘ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேனூர் மலையில் தவஞ் செய்யக் கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச்சந்தம் நாலேகால். இவ்வறங்காத்தான் அடி நீளென் சென்னியன.’

இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின்கீழ், ‘ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி’ என்று எழுதப்பட்டுள்ளது.150

மலையகோயில்: இங்குள்ள இடதுபுறப் பாறையில் உள்ள ஒரு சாசனம் குணசேனர் என்னும் சமணப் பெரியாரைக் குறிக்கிறது.151 கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன.

சித்தன்னவாசல்: சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளது. இம்மலைமேல் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் தவஞ்செய்துவந்தனர். இம்மலையில் கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டு. இக்கோயிலின் முன் மண்டபம் வடக்குத் தெற்காக 22 அடி 10 அங்குல நீளமும் 111/2 அடி அகலமும் உள்ளது. முன்புறத்தில் இரண்டு கற்றூண்களையுடையது. தூண்கள் ஒவ்வொன்றும் 2 அடி 2 அங்குலம் சதுரமும் 6 அடி 10 அங்குலம் உயரமும் உள்ளன. இவை யாவும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டன. இம் மண்டபத்தின் வடபுறத்தின் சுவரையொட்டி, முக்குடையுடன் வீற்றிருக்கும் அருகக்கடவுளின் திருவுருவமும் தென்புறச் சுவரை யொட்டிப் பார்சவநாதர் திருவுருவமும் அழகாக அமைக்கப் பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையிலும் தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. இவ்வோவியங்கள் இப்போது சிதைந்து காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலும் இவ்வோவியங்கள் மனதைக் கவரக்கூடியனவாக உள்ளன. இந்த மண்டபத்துக்கு நடுவில் பாறையைக் குடைந்தமைக்கப்பெற்ற ஒரு சிறு கோவில் உண்டு. இதன் அகலமும் நீளமும் உயரமும் 101/2 அடி. இக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 21/2 அடி அகலமும் உள்ளது. இக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கோயிலை அமைத்தவன் பேர்போன மகேந்திரவர்மன் I என்னும் பல்லவ அரசனாகும். இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் தொண்டைமண்டலம் சோழமண்டலங்களை அரசாண்டான். இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக அமைக்கப் பட்டுள்ளது. இக்குகைக்கோயிலுக்கு வடகீழ்ப்புறத்தில் இயற்கையா யமைந்த ஒரு குகை உளது. இக்குகைக்குள் 17 கற்படுக்கைகள் பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகைக்கு ஏழடிப்பட்டம் என்னும் வழியாகச் செல்லவேண்டும்.152 இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ்செய்து வந்தனர். இங்கு, பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள் உள்ளன. இங்குள்ள சாசனம், ‘தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன். திருப்பூரணன் திட்டைச்சரணன். திருச்சாத்தன். ஸ்ரீபுராணசந்திரன், நியத்தக்கரன் பட்டக்காழி.........த்தூர்க் கடவுளன்’ என்னும் பெயர்களைக் கூறுகின்றது.153 இப்பெயர்கள் இங்குத் தவஞ்செய்திருந்த சமணமுனிவர்களில் சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன.

இன்னொரு சாசனம் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்லபன்)’ காலத்தில், மதுரையாசிரியன் இளங்கௌதமன் என்பவர் இங்குள்ள உள்மண்டபத்தைப் பழுதுதீர்த்து வெளிமண்டபம் ஒன்றைக் கட்டினார் என்று கூறுகிறது.154 மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்கவேண்டும்.

இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால், இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆலங்குடித் தாலுகா திருவரங்குளம் என்னும் இடத்தில் அரிதீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் கி.பி. 1260 இல் திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், பள்ளிச்சந்தநிலம் குறிக்கப்படுகிறது.155 இத் தாலுகா கோகர்ணம் கோகர்ணீஸ்வரர்கோவில் சாசனம் வீரபாண்டிய தேவரது 14 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், தென்கவிநாட்டுப் பள்ளிச் சந்த நிலங்கள் குறிக்கப்படுகின்றன.156 இத் தாலுகா வளவம்பட்டி அரசாங்கப் பாடசாலைக்கு அருகில் சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இத் தாலுகா புத்தாம்பூரில் மொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத் திருவுருவம் காணப்படுகிறது. இத் தாலுகா செம்பாட்டூரில் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுவதுடன் சிங்கத் தூண்களும் காணப்படுகின்றன. சிங்கத்தூண்கள் பல்லவர் காலத்தில் பல்லவ அரசர்கள் கட்டிய கோயில்களில் காணப்படுவதால், இங்குப் பண்டைக்காலத்தில் பல்லவ அரசரால் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்கவேண்டும். இத்தாலுகா திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் சாசனம் குலோத்துங்க சோழனுடைய 10 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் வளத்தாமங்கலம் பள்ளிச்செய் கூறப்படுகிறது.157 (செய் = வயல்).

திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீசுவரர் கோவில் சாசனம் ‘ஒல்லையூர் கூற்றத்துக் கொன்றையூரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பள்ளிச் சந்தம், கூறப்படுகிறது.158 இத் தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் சாசனம், ‘ஒல்லையூர் கூற்றத்துக் காரையூர் பள்ளிச் சந்த நிலத்தை’க் கூறுகிறது.159 புலாலைக் குடியில், பாறையில் அமைக்கப்பட்ட சிறு சமணக் கோயில் உண்டு. தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே.

குளத்தூர் தாலுகா குன்னாண்டார் கோயில் என்னும் குகைக்கோயில் சமணக் கோயிலாகும். இத்தாலுகா அன்னவாசல் பள்ளி ஊருணிக்கு மேற்கில் உள்ள தென்னந் தோப்பில் இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத் தாலுகா வீரக்குடிக்கு அருகில் உள்ள சமணர்மேடு என்னும் இடத்தில் சமணத் திருவுருவங்கள் பூமியிலிருந்து கிடைத்தன. குளத்தூர்த் தாலுகா திருப்பூரில் ஒரு சமண உருவம் கிடைத்தது. ஷெ தாலுகா தேக்காட்டூரில் சமணத் திரு உருவம் உண்டு. ஷெ கண்ணங் குடியில் ஒரு சமணத் திருமேனி கிடைத்துள்ளது.160 ஷெ விராலூரில் சமண உருவம் உளது. கீழைத்தனியம் என்னும் ஊரில் சில சமண உருவங்கள் சில ஆண்டு களுக்கு முன்னர்க் கண்டெடுக்கப்பட்டன. இவையெல்லாம், பண்டைக் காலத்தில் இவ்விடங்களில் சமணர் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. அம்மணங்குறிச்சி என்னும் ஊர் இங்கு உண்டு. இப்பெயர் இங்கு அமணர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

7. தஞ்சாவூர் மாவட்டம்

திருவாரூர்: இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்காலத்தில் இவ்வூர்த்திருக்குளம் மிகச் சிறியதாக இருந்தது. அச்சிறு குளத்தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும், மடங்களும், நிலங்களும் இருந்தன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்) இவ்வூரில் சைவச் சமணர் கலகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சைவர் துரத்தினர். தண்டி அடிகள், நமிநந்தியடிகள் என்னும் சைவநாயன்மார்கள் காலத்தில் இக்கலகம் நிகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது.161 இக்கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த சமணர்களின் கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக்கப்பட்டுப் பெரிய குளமாகத் தோண்டப்பட்டது. இப்போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப்பரப்பைக் கொண்டுள்ளது. இக் குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தது என்பது அறியத் தக்கது.

செந்தலை: தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்தது. இங்குள்ள சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது: ‘கோப்பர கேசரி பன்மர்க்கு யாண்டு 12-வது கா...................ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து. வடகவிர................. பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ.’162 மற்றொரு சாசனம், ‘நங்கை ஒளி மாதியார் தாயார் நக்க நீலி’163 என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் 3-உடைய II-ஆவது ஆண்டில் (கி.பி. 1227. மே. 15). எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ‘பள்ளிச்சந்தம்’. குறிக்கப்பட்டுள்ளது.164 இதனால், இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயிலுக் குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும்.

திருநாகேச்சுரம்: கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம். ‘தென்கரைத் திரைமூர் நாட்டில்,’ இருந்த ‘மிலாடுடையார் பள்ளி,’ என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட அரசனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்ததென்றும், அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேச்சுரத்துச் சைவக்கோயில் கட்டப்பட்ட தென்றும் இவ்வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்டபத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப்படுகின்றன. இவை, இவ்வூரார் கூறுவதை உறுதிப் படுத்துகின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண உருவங்கள் காணப் படுகின்றன.165 திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக்காலத்தில் ‘குமார மார்த்தாண்ட புரம்,’ என்று பெயர் வழங்கியதென்றும், இங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும் கோபுரத்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.

திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்): இவ்வூர் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்த மானீச்சுரர் கோயில் உண்டு. இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக்கோயிலின் பெயரைக்கொண்ட இது பண்டைக் காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்டுச் சைவக் கோயிலாக்கப் பட்டது. அப்பரும் சம்பந்தரும் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக் காலத்தில் இருந்தனர்.

பழையாறை: இதனைப் ‘பழையாறு,’ ‘பழசை’, என்றுங் கூறுவர். பட்டீச்சுரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது.166 167 கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோயிலும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக்கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச் செய்யுள் வருமாறு:

‘தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினை சேரா.’

‘முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்

வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல்

விண்ணன்
செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுஞ் செய
வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழத்
தொடர்ந்து நின்ற வல்வினை துறந்துபோ மாலரோ’

மருத்துவக்குடி: இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் 3 உடைய 16 ஆவது ஆண்டில் (கி.பி. 1194 இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப்பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன.168 இதனால், இவ்வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.

திருவலஞ்சுழி: இது கும்பகோணம் தாலுகாவினுல் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன.169 இதனால், இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

மன்னார்குடி: மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர். பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.170 இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.171

தீபங்குடி: நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத்திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப் பத்து,’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே ‘கலிங்கத்துப் பரணி,’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத் தீபங்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.172

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. ‘அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,’173 ‘அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளிச்சந்தம்,’174 ‘திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி,’175 ‘உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி’176 என வரும் சாசனப் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

அமண்குடி: ‘சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டை’ச் சேர்ந்த வெண்ணாடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச்சுரக் கோயில் கல்வெட் டெழுத்துக்கள் கூறுகின்றன. 177 இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்திட்டைக் குடி: (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

குகூர்: இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.178

8. இராமநாதபுர மாவட்டம்

கோவிலங்குளம்: அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில் மேடையின் மேற்கு, தெற்குப் பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன. இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ள சாசனம் நல்ல இலக்கிய நடையுள்ளது. திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 48 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம், முக்குடைநாதருக்கு (அருகக்கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும் விமானமும், முக்குடை நாதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும், தண்ணீர்ப்பந்தலும், இக்கோயில் கட்ட நிலமும் இவ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில் இவ்வூர் ‘வேம்பு வடநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த கும்பனூர்’ என்று கூறப்படுகின்றது. இங்குள்ள இன்னொரு சாசனம், இக்கும்பனூரையும், குரந்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன் சோழகோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது.179

இருப்பைக்குடி: சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கால் மைலில் உள்ள ஏரிக்கு மேற்கில் ஒரு பாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது. இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ‘இருப்பைக்குடி கிழவன்’ என்பவன் ‘பெரியபள்ளி’யைக் கட்டிப் ‘பாழிக்குளம்’ என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி கிழவனுக்கு ‘எட்டிசாத்தன்’ என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணனாக இருக்கவேண்டும் இவன் கட்டிய ‘பெரிய பள்ளி’யும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை.180

பிரான்மலை: திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மலையில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டு. இச்சாசனம். ‘கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தென்கோ நாட்டு இடையாற்றூர்’ பள்ளிச்சந்த நிலங்களைக் குறிப்பிடுகிறது.181 இங்குள்ள மற்றொரு சாசனம், ‘கூடலூரான ஐஞ்ஞூற்றுவ மங்கலத்துப் பள்ளிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது.182 பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய நிலங்களாகும்.

இளையான் குடி: பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இதனை ‘அமணசாமி’ (சமணக் கடவுள்) என்று கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப் பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர்ச் செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.183

பள்ளி மடம்: அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், ‘திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியில் பள்ளி மடை’ என்பது. இங்குள்ள கலாநாதசுவாமிகோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரத்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காகச் சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.184

அனுமந்தகுடி: இராமநாதபுரத்துக்கு வடக்கே 371/2 மைலில் உள்ளது. திருவாடானைத் தாலுகாவில் உள்ள இக்கிராமத்தில் மழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக் கோயில் உண்டு. இக் கோயிலின் எதிரில் உள்ள உடைந்து போன சாசனம் சகம் 1455 (கி.பி 1535) இல் விஜயநகர அரசன் (பெயர் காணப்படவில்லை) காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுகோட்டை’ என்னும் ஊரும், ஷ முத்தூற்றுக் கூற்றத்து ‘குருவடிமிடி...........என்னும் ஜினேந்திரமங்கலம்’ என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. ஜினேந்திரமங்கலம் என்னும் பெயர் இங்குச் சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது.185 இப்போதும் சமணக்கோயில் உளது.186 இயக்கி கோமடேசுவரர் முதலிய நான்கு செம்புவிக்கிரகங்களும் உள்ளனவாம்.

திருக்களாக்குடி: திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக்கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது.187

இந்த மாவட்டத்தில் இரணியூர், இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.188

பெரியபட்டினம்: இராமநாதபுரம் இரயில் நிலைத்திலிருந்து தென்கிழக்காகப் பத்து மைலில் உள்ள கடற்கரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.189

தேவிபட்டினம்: இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், ‘‘இடைக்குள் நாட்டுச் செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும், கிடாரமான கிடாரங் கொண்ட சோழபுரமும், கொழுவூர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலத்தில்’’ இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறுகிறது.190 இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.

கிடாரம்: இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது.191

கோவில்குளம்: இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 34 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன.192

குலசேகர நல்லூர்: (நல்லூர்) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறுப்படுகிறது. இந்தச் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் துரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர்.193

மஞ்சியூர்: இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக் கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.194

செலுவனூர்: செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 91/2 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது.195

9. மதுரை மாவட்டம்

பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயம் சிறப்படைந்திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. மூர்த்தி நாயனார் காலத்திலே இங்குச் சமண சமயம் இருந்த செய்தியைப் பெரிய புராணம் கூறுகிறது.

ஞானசம்பந்தர் காலத்திலே பாண்டி நாட்டில் சமண சமயம் மிகச் சிறப்புற்றிருந்தது. கூன்பாண்டியன் என்னும் நெடுமாறனும் சமணசமயத்தை மேற்கொண்டிருந்தான். ஆகவே பாண்டி நாட்டில் சமணசமயம் தலைதூக்கி நின்றது. இச் செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது:

‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள
பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.’’

‘‘பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவர் எங்கு மாகி
அறியும் அச் சமய நூலின்
அளவினில் அடங்கச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.’’

இவ்வாறு சமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த பாண்டி நாட்டில் ஞானசம்பந்தர் சென்று, பாண்டியனுக்கு வெப்பு நோயை உண்டாக்கிப் பின்னர் அந்நோயைத் தீர்த்துப் பாண்டியனைச் சைவசமயத்தில் சேர்த்தார். பாண்டியன் நீறுபூசிச் சைவனானான். இதனை யறிந்த நாட்டுமக்களும் நீறணிந்து சைவர் ஆனார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

‘‘தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவன் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.’’

இதனோடல்லாமல், ஞானசம்பந்தர் சமணருடன் வாதப்போர்செய்து தோல்வியுறச் செய்து அவர்களைக் கழுவில் ஏற்றினார். சமணருடைய பாழிகளும் பள்ளிகளும் தகர்த்து அழிக்கப்பட்டன.

‘‘பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளர் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக்
கிளரொளித் தூய்மை செய்தே
வாழியப் பதிகள் எல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார்.’’

என்று பெரிய புராணம் கூறுகிறது. இவ்வாறு பெரிய புரணம் கூறுவதைக்கொண்டு அக் காலத்திலேயே சமண சமயம் பாண்டி நாட்டில் அழிந்துவிட்டது என்று கருதக் கூடாது. ஏனென்றால், ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுவரையில் சமணசமயம் பாண்டி நாட்டில் இருந்த செய்தி கல்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் பாண்டிநாட்டிலே சமணசமயத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர்ப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத்தொடங்கிற்று என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளை ஆராய்வோம். மதுரையைச் சூழ்ந்து எட்டுமலைகள் உள்ளன என்றும் அவ்வெட்டு மலைகளிலும் எண்ணாயிரம் சமணமுனிவர் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றன. ஒருமலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டு மலைகளில் எண்ணாயிரம் முனிவர் வாழ்ந்திருந்தார்கள். ஆயிரம் முனிவர் என்று கூறுவது குறிப்பிட்ட தொகையையன்று; பெருந்தொகையினர் என்பது கருத்து. எட்டுமலைகளில் எண்ணாயிரவர் என்றால் எட்டுமலைகளில் தவஞ்செய்திருந்த பெருந்தொகையான சமண முனிவர்கள் என்பது கருத்து. இந்த எட்டுமலைகளில் இருந்த எண்ணாயிரம் சமணரும் கழுவேறி னார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. ‘‘எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்’’ என்பது பெரியபுராண வாசகம்.

தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன.

‘‘தேவப் பகைவர் நம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
சேதப்படும் எண்பெருங் குன்றத்
தெல்லா வசோகும் எரிகெனவே.’’ (218-ஆம் தாழிசை.)

இதற்குப் பழைய உரை இவ்வாறு கூறுகிறது. ‘‘எண் பெருங்குன்றாவன: யானைமலையும் நாகமலையும் சுணங்க மலையும், செப்புமலையும்..........வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன என உணர்க’’

இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சமணர் மலைகளின் பெயர்கள் கூறப்படுகின்றன. மூன்று மலைகளின் பெயர்கள் ஏட்டில் சிதல் அரித்துவிட்டபடியினாலே மறைந்து விட்டன. இப்பெயர்களில் சுணங்கமலை, செப்புமலை, வெள்ளி மலை என்பன எவை என்பது தெரியவில்லை. யானைமலையும் நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன.

சமணர் வழங்கிவரும் ஒருசெய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் கூறுகிறது. அச்செய்யுள் இது:

‘‘பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு.’’

இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை அல்லது சோலை மலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை. ஆயினும், கல்வெட்டுச் சான்று இலக்கியச் சான்று முதலியவற்றைக்கொண்டு எண்பெருங் குன்றங்கள் எவை என்பதை ஆராய்வோம்.

யானைமலை: இது மதுரைக்குக் கிழக்கே 6 மைல் தூரத்தில் உள்ள ஒரு குன்று. இதில் யானைகள் வாழ்ந்திருப்பதனாலே இதற்கு இப்பெயர் வந்ததென்று இப்பெயரைக்கொண்டு கருத இடமுண்டு. ஆனால், உண்மை இதுவன்று. யானையொன்று கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருப்பதுபோல இந்த மலையின் உருவம் அமைந்திருக்கிறபடியினாலே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த மலை சமணர்களின் எண்பெருங் குன்றுகளில் ஒன்று. ஞானசம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில், இந்த யானைமலையிலும் ஏனைய இடங்களிலும் சமணர் இருந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.

யானைமலையில் குகைகளும், அவற்றில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டவை என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இங்குள்ள குகைகளிலே சமண முனிவர்கள் வாழ்ந்திருந்தார்கள். பிற்காலத்திலே, ஞானசம்பந்தருக்குப் பிறகு, இந்த மலையில் நரசிங்கப்பெருமாள் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் இம்மலையிலிருந்து சமண முனிவர்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விட்டார்கள் போலும்.

இப்பொழுது யானைமலையில் நரசிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனத்திலிருந்து இக்கோயில் கி.பி. 770 இல் உண்டாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சாசனங்களில் ஒன்று வடமொழியிலும் மற்றொன்று தமிழ் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சாசனம் வருமாறு:

‘‘கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரறையன் ஆகிய மாறங் காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்கா ரோகணஞ் செய்த பின்னை அவனுக்கு அனுஜன் உத்தர மந்த்ரபதம் எய்தின பாண்டிமங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித்தான்.196

இந்தச் சாசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது என்ன வென்றால், மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் காலத்தில் அவனுடைய அமைச்சர்களாக இருந்த மாறன் காரியும் அவன் நம்பி மாறன் எயினனும் யானை மலையிலே நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர் என்பது. இந்த மலையைப்பற்றி மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவோர் எபிகிராபி அறிக்கையில் கண்டு கொள்க.197

பௌத்தக் கோயில்களையாவது சமணசமயக் கோயில்களை யாவது வைணவர் கைப்பற்றிக் கொள்வதாக இருந்தால், அந்தக் கோயில்களில் நரசிங்கப் பெருமாளை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர்கள் இருந்த யானை மலையைக் கைப்பற்று வதற்கு வைணவர்கள் அதன்மேல் நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தார்கள். பிறகு இது ‘‘இந்து’’க்களின் மலையாக மாறிவிட்டது. இந்தச் செய்திகயைப் பிற்காலத்தவர் கதையாகக் கற்பித்துப் புராணம் எழுதிவிட்டார்கள். அதுதான் திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்பது.

மதுரைமா நகரத்தை அழிக்கும் பொருட்டும் சமணர்கள் தமது மந்திரசக்தியால் ஒரு யானையை உண்டாக்கி அனுப்பினார்கள் என்றும், சோமசுந்தரக் கடவுள் அந்த யானையை நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், கொல்லப்படட அந்த யானை மலையாகச் சமைந்துவிட்டது என்றும் இப்புராணக்கதை கூறுகிறது. இப்புராணத்தின் உள்பொருள் என்னவென்றால், யானைமலையில் சமணர் இருந்தார்கள் என்பதும் அவர்கள் மதுரையில் அதிகம் செல்வாக்குடையவராக இருந்தார்கள் என்பதும் அவர்கள் செல்வாக்கையடக்க அவர்கள் இருந்த யானைமலைமீது நரசிங்கப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டதென்பதும் ஆகும்.

நாகமலை: இதுவும் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மலை. பாம்பின் உருவத்தை ஒத்திருப்பதனால் இந்த மலைக்கு நாகமலை எனப்பெயர் உண்டாயிற்று. இந்த மலையின் மேலும் சமண முனிவர்கள் பண்டைக்காலத்தில் இருந்தனர். பிற்காலத்தில் இங்கிருந்த சமணமுனிவர்களை ‘இந்து சமயத்தார்’ துரத்திவிட்டனர். பிறகு ஒருபுராணக் கதையைக் கற்பித்துக் கொண்டு, ‘‘நாகமெய்தபடலம்’’ என்ற பெயரிட்டனர். சமணர், மதுரைமா நகரத்தை அழிப்பதற்காக ஒருபெரிய பாம்பைத் தமது மந்திரசக்தியினால் உண்டாக்கி அதை மதுரை நகரத்தில் ஏவினார்கள் என்றும் சொக்கநாதப் பெருமான் அந்தப் பாம்பை அம்பு எய்து கொன்றார் என்றும் இறந்த அந்தப் பாம்பு கல்லாகச் சமைந்து விட்டது என்றும் அப்புராணம் கூறுகிறது.

யானைமலை நாகமலையைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் ‘சில புராணக் கதைகள்’ என்றும் தொடர்புரையில் காண்க.

இடபகிரி: இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. தண்டலைமைலை (தண்டலை = சோலை) என்று திருவிளையாடற் புராணங் கூறுகிறது. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. ‘‘ஓங்கிருங்குன்றம்’’, ‘‘சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்’’ என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன. இதனை எபிகிராபி அறிக்கையில் காணலாம்.198

யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மலைக்கும் ஒரு புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் மாயப்பசு ஒன்றை உண்டாக்கி அதை மதுரை நகரத்தை அழித்துவரும்படி அனுப்பினார்கள் என்றும் இதையறிந்த சொக்கநாதர் தமது இடபத்தை ஏவி அந்தப் பசுவைக்கொன்று விடச்செய்தார் என்றும், பிறகு இந்த ஞாபகார்த்தமாக இடபகிரியை உண்டாக்கினார் என்றும் இக்கதை கூறுகிறது.

பசுமலை: இதுவும் மதுரைக்கு அருகில் உள்ளது. சமணர்கள் ஏவிய மாயப்பசுவைச் சொக்கநாதருடைய இடபம் கொன்ற பிறகு, இறந்த அப்பசு மலையாகச் சமைந்துவிட்டது என்பது புராணக்கதை. இதிலும் பண்டைக் காலத்தில் சமணர்கள் இருந்தார்கள் என்று கருதப்படுகிறது.

இதுகாறுங் கூறப்பட்ட யானைமலை, நாகமலை இடபமலை, பசுமலை என்பவை மதுரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய எண்பெருங் குன்றுகளைச்சேர்ந்தவை. ஏனைய நான்குமலைகள் எவை என்பதை ஆராய்வாம்.

திருப்பரங்குன்றம்: மதுரைக்கு அருகில் இருந்த எண்பெருங் குன்றுகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. மேலே காட்டப்பட்ட சமணரால் வழங்கிவருகிற வெண்பாவில், இக் குன்றம் முதலில் கூறப்படுகிறது. இந்த மலையில் சமணத் துறவிகள் இருந்த குகைகளும், பாறையில் அமைக்கப்பட்ட கற் படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் இன்றும் காணப்படுகின்றன.199 தீர்த்தங்கரரின் உருவமும் பாறையில் அமைக்கப்பட்டுள்ளது.

சித்தர்மலை: இப்பெயர் சமண முனிவர் இங்கு இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த மலை மேட்டுப்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது. இம்மலையில் குகைகளும் கற்படுக்கைகளும் இருக்கின்றன. இவை, முற்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.200 அன்றியும் இங்கு ஏழுகடல் எனப் பெயருள்ள ஒரு சுனை உண்டு. சமண முனிவர்கள் தமது மந்திர சக்தியினால் ஏழு கடல்களையும் இந்தச் சுனையில் வரும்படி செய்து பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறுகிறார். ‘ஏழு கடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமும் உண்டு’ என்று அவர் எழுதுகிறார்; (கோயிலைப் பாடியது 70 ஆம் தாழிசை உரை) சமணர் செய்ததாகத் தக்கயாகப் பணி உரையாசிரியர் கூறுகிற இக் கதையைப் பிற்காலத்து நூல்களாகிய திருவிளையாடற் புராணங்கள் சிவபெருமான் மீது சாற்றிக் கூறுகின்றன. (சில புராணக்கதைகள் என்னும் தொடர்புரை காண்க.)

சமணமலை: மதுரைக்கு மேற்கே சுமார் 5 மைலில் உள்ளது. இந்தக் குன்றுகள் கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. தென்மேற்குக் கோடியில் இம்மலைக்கு அருகில் கீழ்குயில்குடி என்னும் ஊரும், வடமேற்குக் கோடியில் முத்துப்பட்டி அல்லது ஆலம்பட்டி என்று வழங்கப்படுகிறது. ஊரும் இருக்கின்றன. இந்தக் கிராமம் மதுரைத் தாலுகா வடபழஞ்சியைச் சேர்ந்தது. இந்தச் சமணமலையில் அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. ஆகவே இந்த மலைக்கு இந்தப் பெயர் உண்டாயிற்று. இதற்கு அமணமலை என்றும் பெயர் உண்டு. அமணர் என்னும் பெயர் சமணரைக் குறிக்கும்.201

ஆலம்பட்டி என்றும் முத்துப்பட்டி என்றும் பெயருள்ள ஊருக்கு அருகில் இந்தக் குன்றின் மேற்குக் கோடியில் பஞ்சவர் படுக்கை என்னும் இடம் இருக்கிறது. இங்குப் பாறையில் கல்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர் படுப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே பாறைக்கல் கூரைபோல் அமைந்திருக்கிறது. ஆகவே இவ்விடம் ஒரு குகைபோலத் தோன்றுகிறது. கூரைபோன்றுள்ள பாறையில் பிராமி எழுத்தில் தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டவை. இந்தக் குகையில் படுக்கைகளுக்கு அருகே ஒரு பீடத்தின் மேல் அருகக் கடவுளின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகில் பாறையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் மிகவும் அழிக்கப்பட்டுவிட்டது. குகையின் மேற்புறப் பாறையில் இரண்டு இடங்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் அவைகளின் கீழே வட்டெழுத்துச் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு எழுத்துப்போல் காணப்படுகின்றன.

சமணமலையின் தென்மேற்குப் பக்கத்தில் கீழ்குயில் குடியின் அருகில் செட்டிப்பொடவு என்னும் குகை இருக்கிறது. இந்தக் குகையின் இடதுபுறத்தில் ஒரு தீர்த்தங்கரரின் உருவம் பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவத்தின்கீழ் வட்டெழுத்துச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. குகையின் உள்ளே அரை வட்டமாகக் கூரைமேல் அமைந்துள்ள பாறையில் தனித்தனியாக அமைந்த ஐந்து உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் உருவம் நான்கு கைகளையுடைய யட்சி உருவம். சிங்கத்தின் மேல் அமர்ந்து ஒரு கையில் வில்லையும் மற்றொரு கையில் அம்பையும் ஏனைய கைகளில் வேறு ஆயுதங்களையும் பிடித்திருக்கிறது. இந்த யட்சிக்கு எதிரில் யானையின்மேல் அமர்ந்துள்ள ஆண் உருவம் கையில் வாளையும் கேடயத்தையும் பிடித்திருக்கிறது. இது சாஸ்தா உருவம் போலும் இதையெடுத்துத் தனித்தனியே மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இருந்த திருமேனிகள் கடைசியாகப் பதுமாவதி என்னும் இயக்கியின் உருவம், வலதுகாலைத் தொங்கவிட்டு இடதுகாலை மடக்கிச் சுகாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிற்பங்களில் நடுவில் உள்ள மூன்று தீர்த்தங்கரரின் உருவங்களுக்குக் கீழே மூன்று வட்டெழுத்துச் சாசனங்கள் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டுள்ளன.

செட்டிப்பொடவுக்குக் கிழக்கே சமணமலையில் பேச்சிப்பள்ளம் என்னும் இடம் இருக்கிறது. இது குன்றின் மேல் இருக்கிறது. இங்கு வரிசையாகப் பாறையில் சமண தீர்த்தங்கரர்களின உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்களின் கீழே வட்டெழுத்துச் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை கி.பி. 8ஆம் 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

பேச்சிப்பள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்துபோன ஒரு கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் தரையமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளது. இங்குப் 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப்பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு.

இந்த இடத்துக்கு மேலே குன்றின்மேல் பாறையில் விளக்கு ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்குப் பாறைக்கு அருகில் கன்னட எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதன் கடைசிவரி மட்டும் தமிழாக உள்ளது. இந்தச் சாசனம் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

சமணமலையில் உள்ள சாசனங்கள் சில வருமாறு: -

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்புநாட்டுக் குறண்டி அஷ்ட உபவாசி படாரர் மாணாக்கார் குணசேன தேவர். குணசேன தேவர் மாணாக்கர் கனகவீரப்பெரியடிகள், நாட்டாற்றுப் புறத்து அமிர்தபராக்கிரம நல்லூரான உயிர்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி 202. பள்ளிச்சிவிகையார் ரட்சை.

2. ஸ்வஸ்தி ஸ்ரீ பராந்தக பர்வதமாயின தென்வட்டைப் பெரும்பள்ளிக் குரண்டி அஷ்டஉபவாசி படாரர் மாணாக்கர் மகாணந்திப் பெரியார் நாட்டாற்றுப்புரத்து நாட்டார் பேரால் செய்விச்ச திருமேனி. சி பள்ளிச் சிவிகையார் ரட்சை203.

3. (வேண்பு)ணாட்டுக் குறண்டி திருக்காட்டாம் பள்ளிக் கனகநந்திப் படாரர் அபினந்தன படாரர். அவர் மாணாக்கர் அரிமண்டல படாரர் அபினந்தன படாரர் செய்வித்த திருமேனி204.

4. ஸ்வஸதி ஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டித்திருக்காட்டாம் பள்ளிக் குணசேனதேவர் மாணக்கர் வர்த்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி205.

5. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் தெய்வபலதேவன் செய்விச்ச திருமேனி.206

6. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேன தேவர் சட்டன் அந்தலையான் களக்குடிதன் வைகை அந்தலையான் கையாலிசைச் சார்த்தி செய்வித்த திருமேனி207.

7. (பேச்சிப்பள்ளம்) ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி ஸ்ரீ208

8. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அந்தலையான் மலைதன் மருகன் ஆச்சான் சிறிபாலனைச் சார்த்தி செய்வித்த திருமேனி ஸ்ரீ209.

9. ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூரிடையன் வேளான் சடைவனைச்சார்த்தி இன்ன மாணவாட நிட்டப்புணாட்டு நா.......கூர் சடையப்பன் செய்வித்த தேவர். இ......டனத்து......தா.......தாயார் செய்வித்த திருமேனி.210

10. ஸ்ரீ வெண்புநாட்டு திருக்குறண்டி பாதமூலத்தான அமிததின் மரைகள் கனகநந்தி செய்வித்த திருமேனி211.

11. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அரையங்காவிதி சங்கணம்பியைச் சார்த்தி செய்விச்ச திருமேனி212.

இதுகாறும் ஆராய்ந்ததில், மதுரைக்கு அருகில் உள்ள சமணருடைய எண்பெருங் குன்றுகளுள் ஏழுகுன்றுகள் தெரிந்தன. இன்னொரு குன்று எது என்பது இப்போது தெரியவில்லை.

உத்தம்பாளையம்: மதுரை மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வடமேற்கே மூன்று பர்லாங்கு தூரத்தில் பெரிய பாறைக்குன்றில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 21 சமணத் திருமேனிகள் இங்குக் காணப்படுகின்றன. இத்திருமேனிகளைச் செய்வித்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிற்பங்களுக்கருகில் தௌ¤வான நீருடைய சுனையொன்றிருக்கிறது. இந்தச் சுனையிலிருந்து இவ்வூரார் நீர் எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

10. திருநெல்வேலி மாவட்டம்

எருவாடி: நாங்குநேரித் தாலுகா. இவ்வூரில் உள்ள இரட்டைப் பொத்தைப் பாறையின்மேல் சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத் திருவுருவங்களின் கீழ் உள்ள சாசனம், அச்சநந்தி என்பவர் இத் திருவுருவங்களைச் செய்து அமைத்தார் என்று கூறுகிறது213. இந்த அச்சநந்தி என்பவர், சீவக சிந்தாமணியில் சீவகனுக்குக் கல்வி கற்பித்ததாகக் கூறப்படுகிற அச்சநந்தி ஆசிரியராக இருக்கக்கூடும் என்று கூறுவர்214. இது தவறு. அச்சநந்தி என்னும் பெயருள்ள சமண ஆசிரியர் பலர் இருந்தனர்; அவருள் இவர் ஒருவர். என்னை? சீவகன், வர்த்தமான மகாவீரர் காலத்தில், அஃதாவது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். ஆகவே, அவருடைய ஆசிரியராகிய அச்சநந்தியும் அந்தக் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். இந்த அச்சநந்தி சீவகனுக்கு ஆசிரியராக இருந்த அச்சநந்தி ஆகார்.

இங்குள்ள இன்னொரு சாசனம், பாண்டியன் மாறன் சடையனுடைய 43 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. நாட்டாற்றுப் போக்கியைச் சேர்ந்த திருவிருந்தலை என்னும் ஊரில் இருந்த அருவாளத்துப் படாரருக்குப் பள்ளிச் சந்தமாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இச் சாசனம் கூறுகிறது215.

கொற்கை: இது பண்டைக் காலத்தில் பாண்டியர்களுடைய துறைமுகப் பட்டினமாயும், பாண்டிய இளவரசன் வாழ்ந்திருந்த இடமாயும் இருந்தது. இப்போது சிறு கிராமமாக உள்ளது. இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றாக, இவ்வூருக்கு அருகில் உள்ள சாயர்புரத்துச் சாலையோரத்தில், வர்த்தமான மகாவீரரின் திருவுருவம் வீற்றிருக்கும் கோலத்துடன் காணப்படுகிறது. சிதைந்துபோன இன்னொரு சமணத் திருவுருவம், இவ்வூர் வயலில் காணப்படுகிறது216.

நிகராகரப் பெரும்பள்ளி: ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவைச் சார்ந்த பெருங்குளம் என்னும் ஊரில், இந்தச் சமணப் பள்ளிக்குரிய நிலங்கள் இருந்தன. பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானுடைய 15 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனம், இவ்வூர் மாயக்கூத்துப் பெருமான் நிலத்தை இப் பள்ளிக்குரிய பள்ளிச்சந்த நிலத்துடன் மாற்றிக்கொள்ளபட்ட செய்தியைக் கூறுகிறது217. இந்த நிலங்களுக்கு அருகில், இந்த நிகராகரப் பெரும்பள்ளி இருந்திருக்கவேண்டும்.

அருகமங்கலம்: ஸ்ரீ வைகுண்டம் தாலுகா மாறமங்கலத்தில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் சாசனம் ஒன்று, அருகமங்கலம் என்னும் ஊரைக் குறிப்பிடுகிறது.218 திருநெல்வேலித் தாலுக்காவில் அருகன்குளம் என்னும் ஊர் உள்ளது. இப் பெயர்களே இங்கு முற்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. திருச்செந்தூர்த் தாலுகாவில் ஆதிநாதபுரம் என்னும் ஓர் ஊர் உண்டு. ஆதிநாதர் என்பது ரிஷப தீர்த்தங்கரரின் பெயர் ஆகும். ஆகவே, இதுவும் முற்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும்.

கழுகுமலை: ஐயனார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இக் கிராமம். இது கோவில்பட்டி தாலுகாவில் உள்ளது. சங்கரநயினார் கோயிலுக்குக் கிழக்கே 111/2 மைலில் உள்ளது. இங்குள்ள மலைப்பாறையில் நூற்றுக் கணக்கான சமணத் திருவுருவங்கள் கற்பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான சாசனங்களும் இங்குக் காணப்படுகின்றன. இதற்கு வெட்டுவாங் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.219 பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் வெகு செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள சாசனங்கள், பல சமணப் பெரியார் களுடைய பெயர்களைக் குறிப்பிடுகின்றன. இச் சாசனங்களில் காணப்படுகிற சில சமணப் பெரியார்களுடைய பெயர்களைக் கூறுவோம். இவர்கள் இங்குள்ள சமணத் திருமேனிகளை அமைத்தவர் ஆவர்.

1. ஸ்ரீ குணசாகர படரார் சீடன் பேரெயிற்குடி சாத்தன்தேவன் செய்வித்த திருமேனி. 2. இவ்வூர் புரயன் சேந்தனைச் சாத்திய சேந்தசேரி செய்வித்த திருமேனி. 3. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்பநந்தி செய்வித்த திருமேனி. 4. மலைக்குளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமாணாக்கார் ஸ்ரீ நந்தி......5. திருக்கோட்டாற்று உத்த நந்திக் குருவடிகள் மாணாக்கர் சாந்திசேனப் பெரியார் செய்வித்த திருமேனி. 6. திருநறுங்கொண்டை பலதேவக் குருவடிகள் மாணாக்கர் கனகவீர அடிகள் செய்வித்த திருமேனி. 7. கோட்டூர் நாட்டுப் பெரும்பற்றூர் கூத்தங் காமனை சாத்தி திருச்சாணத்துக் குரத்திகள் செய்த படிமம். 8. திருநெச்சுரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம். இதுக்குக் கீழுரன் றொட்டன் திருவிளக்கு நெய். 9. திருநெச்சுரத்து சேந்தன் வேளான் செய்வித்த திருமேனி. 10. களக்குடிக் காமஞ் சிறுநம்பி செய்வித்த திருமேனி. 11. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி. 12. திருக்கோட்டாற்று விமளசந்திரக் குரு வடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் செய்வித்த படிமம். 13. திருநேச்சுரத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணான் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 14. படிக்கமண படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் செயல். 15. கடைக் காட்டூர் திருமலையார் மொனிபடரார் மணாக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி. 16. வேண்பிநாட்டு பேரெயிற்குடி தேவஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 17. பேரெயிற்குடி சேந்தங் காரியார் செய்வித்த திருமேனி. 18. புட்பநந்தி படாரர் மாணாக்கர் பெருணந்தி படாரர் செய்வித்த திருமேனி. 19. வெளற்குடி மூத்த அரிட்டநேமி படாரர் மாணாக்கர் குணநந்தி பெரியாரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல். 20. நெடுமரத் தோட்டத்து குணந்தாங்கியார் செய்வித்த திருமேனி. 21. திருநெச்சுரத்து குமரனமலன் செய்வித்த திருமேனி. இங்குக் காணப்படும் சுமார் நூறு கல்வெட்டுச் சாசனங்களில் இருபத்தொரு சாசனங்களை மட்டும் இங்குக் காட்டினேன். இச் சாசனங்களைப் பார்க்க விரும்புவோர் .(South Indian Inscriptions) என்னும் நூலிற் கண்டு கொள்க. 220 இவ்வூர் பண்டைக் காலத்தில் ‘நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம்’, என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்குப் பண்டைக் காலத்தில் சித்தாந்தம் (சமண சித்தாந்தம்) நாள்தோறும் உபதேசிக்கப்பட்டு வந்ததையும், ‘‘சிந்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹார தானமாக’’ச் சில நிலங்களைத் தானஞ் செய்திருந்த செய்தியையும் இன்னொரு சாசனம் கூறுகின்றது.

வீரசிகாமணி: சங்கரநயினார் கோயிலுக்கு வடமேற்கு 91/2 மைலில் உள்ளது இங்குள்ள பாறையில் குகைகள் உள்ளன. ஒரு குகையில், ஒரு வட்டத்திற்குள் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு குகைகயில் சில உருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூரார் இவ் வுருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கின்றனர். கயிலாசநாதர் கோயில் என்னும் ஒரு சிறு கோயிலும் இங்கு உண்டு. பஞ்ச பாண்டவர் உருவம் என்று கூறப்படுவன சமணத் திருவுருவங்களாகும் என்று கருதுகின்றனர்.221

குளத்தூர்: ஓட்டப் பிடாரத்திலிருந்து வடகிழக்கு 141/2 மைலில் உள்ளது. இவ்வூரில் உள்ள சமணத் திருமேனியை இவ்வூரார் வணங்கி வருகிறார்கள்.222

மந்திகுளம்: முந்திகுளம் என்றும் கூறப்படும். ஓட்டப்பிடாரத்திலிருந்து வடகிழக்கே 17 மைலில் வைப்பாற்றங் கரையில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.223

முரம்பன்: ஓட்டப்பிடாரத்திலிருந்து தென்மேற்கில் 5 மைலில், அஃதாவது, ஓட்டப்பிடாரத்திலிருந்து கயத்தாற்றுக்குப் போகிற சாலையில் வலதுபக்கத்தில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. இதனை இவ்வூரார் வசணர் (சமணர்) என்று கூறுகிறார்கள்.224

நாகலாபுரம்: ஓட்டப்பிடாரத்திலிருந்து வடமேற்கில் 22 மைலில் உள்ளது. இங்கு வயலில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்தது. இதைப்பற்றி அரசாங்கத்தாருக்கு கி.பி. 1873இல் தெரிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தார் இதை விலைக்கு வாங்கிச் சுவர் அமைக்கும்படி கட்டளையிட்டார்கள். பிறகு இந்த உருவம் இப்போது சென்னைப் பட்டினத்துப் பொருட்காட்சிச் சாலையில் (1878இல் கொண்டு வரப்பட்டு) வைக்கப்பட்டிருக்கிறது.225

காயல்: தென்கரை தாலுகா சிறீவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12 மைலில் உள்ளது இவ்வூர். தாம்பிரபரணி ஆற்றங்கரையில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இங்குப் பல சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை ஒரு வண்ணான் துணி வெளுக்கும் கல்லாக உபயோகிக்கிறான்.226

சிறீவைகுண்டம்: தென்கரை தாலுகா, திருநெல்வேலிக்குத் தென் கிழக்கே 12 மைலில் தாம்பிரபரணியின் வடகரைமேல் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் ஒரு குன்றில் சமண உருவம் இருக்கிறது.227

வள்ளியூர்: நாங்குநேரிக்குத் தென்மேற்கில் 8 மைலில் உள்ளது. இவ்வூர் உள்ளியூர் என்றும் வழங்கப்படும். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் சாலையின் மேற்குப் புறத்தில் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு சமணக் கோயில் இருந்தது. இக் கோயில் கற்களைக் கொண்டுபோய், இவ்வூரில் உள்ள பெரியகுளத்திற்குப் படியாகக் கட்டிவிட்டார்கள். சமணத் திருமேனி மட்டும் அவ்விடத்தி லேயே இருந்தது. பிறகு போஸ்ட் ஆபீஸ் உத்தியோகஸ்தராக இருந்த ஒரு சமணர் இந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போனார். இப்போது இந்த விக்கிரகம் பிஷப் சார்ஜண்ட அவர்களிடம் இருக்கிறதென்று நம்புகிறேன் என்று கி.பி. 1882 இல் ஒருவர் எழுதியிருக்கிறார்.228 இப்போது இது எங்கிருக்கிறதோ?

11. கொங்குநாடு: சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தின் தலைநகரம் இவ்வூர் ஆற்றங்கரையில் ஒரு சமணத் திருவுருவம் கிடக்கிறது. இன்னொரு சமணத் திருவுருவம், கலெக்டர் வீட்டுக்கும் சர்ச்சுக்கும் இடையே உள்ள வழியில் இருக்கிறது.229

அதமன் கோட்டை: தர்மாபுரி தாலுகாவில் தர்மாபுரிக்கு மேற்கே 5 மைலில் உள்ளது. இவ்வூரில் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் ஒரு சமணத் திருமேனி காணப்படுகிறது.230

தர்மாபுரி: தர்மாபுரி தாலுகாவின் தலைநகர் தர்மாபுரியின் பழைய பெயர் தகடூர் என்பது. இங்கு மல்லிகார்ச்சுனர் கோயில் இருக்கிறது. மல்லிகார்ச்சுனர் என்பது மல்லிநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரைக் குறிக்கும். இவ்வூருக்கு அருகில் உள்ள ராமக்கா குளக்கரையில் உள்ள சமண உருவங்கள் இவ்வூர் சமணத் திருப்பதி என்பதைத் தெரிவிக்கின்றன. மல்லிகார்ச்சுனர் கோவிலின் முன்மண்டபத் தூணில் உள்ள சாசனம் சக ஆண்டு 815 ஆம் மகேந்திராதிராச நொம்பன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. நிதியண்ணன் என்பவர் அரசனிடமிருந்து மூலபள்ளி என்னும் கிராமத்தை விலைக்கு வாங்கி இக்கோயில் பஸ்தியைச் செப்பனிடுவதற்காகச் சமண முனிவருக்குத் தானம் செய்ததைக் கூறுகிறது. தானம்பெற்ற சமண முனிவர் மூலசங்கத்து சேனான் வயத்து மொகரீய கணத்தைச் சேர்ந்த சித்தாந்த படாரரின் மாணவர் கனகசேன சித்தாந்த படாரர் என்பவர¢231 ஷெ தூண் கீழ்ப்புறத்தில் உள்ள சாசனம், மகேந்திர நொளம்பன் மகன் அப்பைய தேவன் காலத்தில் எழுதப்பட்டது. இதில், லோகையா என்பவர் புதுகூரு என்னும் கிராமத்தை இக் கோயிலுக்குத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.232

பஸ்தீபுரம்: கொள்ளேகால் தாலுகாவில் கொள்ளே காலுக்குத் தெற்கில் ஒரு மைலில் உள்ளது. இது முன்பு சமணக் கிராமமாக இருந்தது. இப்போதும் ஒரு சமணத் திருமேனி அமணீசுவரர் என்னும் பெயருடன் இங்கு இருக்கிறது. இங்கிருந்த பழைய சமணக் கோயிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.233 சிவன் சமுத்திரம் கொள்ளேகாலுக்கு வடகிழக்கே 9 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயிலுக்கு நெட்டைக் கோபுரம் என்பது பெயர்.

பெருந்துறை: பூந்துறை என்றுங் கூறுவர். ஈரோடு நகரத்திற்குத் தென்மேற்கு 101/2 மைலில் உள்ளது இவ்வூர். விசயமங்கலம் என்னும் சமணக் கிராமம் இதற்கு அருகில் உண்டு. இங்கு இடிந்துபோன சமணக்கோயில் உண்டு. இக்கோயில் பார்சுவநாத தீர்த்தங்கரருடையது. இங்கே சில சமண உருவங்கள் உள்ளன.234

விசயமங்கலம்: ஈரோடு தாலுகாவில் விசயமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 4 மைலில் உள்ள மேட்டுப்புத்தூரில் ஒரு சமணக்கோயில் உண்டு. இது ஆதீசுவரர் கோயில். இங்குச் சில சமண சிற்பங்கள் காணப்படுகின்றன. விசயமங்கலத்தில் சந்திரப் பிரப தீர்த்தங்கரரின் ஆலயம் உள்ளது. பெருங்கதை என்னும் காவியத்தை இயற்றிய கொங்குவேள் என்னும் சமணர் இவ்வூரில் வாழ்ந்தார் என்பர். சிலப்பதிகார உரையாசிரியாரகிய அடியார்க்கு நல்லார் என்பவரும் இவ்வூரினர் என்பர். இவ்வூரில் சமண உருவங்கள் உள்ளன.235 விசயமங்கலத்துக்கு அருகில் அரசண்ணாமலை என்னும் குன்று இருக்கிறது. இக்குன்றின் மேல் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது அக்கோயில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனைமலை: பொள்ளாச்சித் தாலுகாவில் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 71/2 மைலில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கே சமணக்கல் துர்க்கம் என்னும் ஒரு குன்று உண்டு.236 இந்தப் பெயரே இங்குச் சமணர் இருந்தவர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்குள்ள யானை மலைக்காடு என்னும் இடத்தில் ஒரு சமணக் கோயில் உண்டு.

வெள்ளோடு: மேலே குறிப்பிட்ட பூந்துறைக்கு 5 மைல் தூரத்தில் உள்ளது. ஆதிநாதர் என்னும் ரிஷப தீர்த்தங்கரரின் கோயில் இங்கு உண்டு.

திங்களூர்: ஈரோடு தாலுகாவில் உள்ளது இவ்வூர். புஷ்பநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரின் கோயில் ஒன்று இங்கு இருக்கிறது.237

முடிகொண்டம்: கொள்ளேகால் தாலுகாவில் உள்ளது இவ்வூர். முற்காலத்தில் சமணர் இங்கு இருந்தனர். முடிகொண்ட சோழபுரம் என்பது இதன் பழைய பெயர். இவ்வூர்க் குளத்தின் தென்கரைப் படியில் உள்ள சிதைந்து போன சாசனம் ஒன்று சக ஆண்டு 1031 இல் எழுதப்பட்டது. முடிகொண்ட சோழபுரத்தில் இருந்த சந்திரப் பிரபசுவாமி கோயில் என்னும் சமணக் கோயிலுக்கு ஒரு கிராமம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனம் கூறுகிறது.238 முடிகொண்ட சோழன் என்பது முதலாவது இராசராசன் பெயர் ஆகும்.

திருமூர்த்திமலை: உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் உடுமலைப்பேட்டையிலிருந்து கிழக்கே 11 மைலில் உள்ளது. ஆனைமலைக்குன்றின் அடிவாரத்தில் உள்ள ஊர், இங்குள்ள ஓர் அருவியின் பக்கத்தில் 30 அடி உயரம் உள்ள பாறையும் இப்பாறையில் ஒரு சமணத் திருமேனியும் காணப்படுகின்றன. சமணத் திருமேனியின் அருகிலே பரிவாரத்தெய்வங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இவ்வுருவங்கள் தேய்ந்து மழுங்கிக் காணப்படுகின்றன. இந்தப் பாறையானது மலையின்மேலிருந்து உருண்டு விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சாசனம் ஒன்று இத்திருமேனியை அமணசாமி என்றும் இவ்வூருக்கு அமணசமுத்திரம் என்பது பெயர் என்றும் கூறுகிறது. அமணசாமி அமணசமுத்திரம் என்னும் பெயர்களே இங்குச் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. இப்போது இந்த இடம் திரிமூர்த்திமலை என்று வழங்கப்படுகிறது.239 திருமூர்த்தி என்பது அருகக் கடவுளுக்குப் பெயர். இந்தத் திருமூர்த்தி என்னும் பெயரைத் திரிமூர்த்தி என்று மாற்றி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் திரிமூர்த்தியைக் குறிக்கிறது என்று இப்போது கூறுகிறார்கள்.

சீனாபுரம்: ஈரோடு தாலுகாவில் உள்ளது. இங்குச் சமணருடைய ஆதிநாதர் கோயில் உண்டு. இந்தச் சீனா புரந்தான் பண்டைக் காலத்தில் சனகாபுரம் என்று வழங்கப்பட்டதென்றும், இங்குப் பவணந்தி முனிவர் வாழ்ந்திருந்து நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றினார் என்றும் கூறுவர். பவணந்தி முனிவரின் சனகாபுரம் இது அன்று என்றும் அது வேறு ஊர் என்றும் வேறு சிலர் கருதுவர். (செந்தமிழ் 5 ஆம்தொகுதி காண்க).

மேட்டுப்புத்தூர்: ஈரோடு தாலுகாவில் இங்கு ஒரு சமணக் கோயில் இருக்கிறது.240

மகாபலிபுரம்: இது சமணர் திருப்பதி அன்று. ஆனால், இங்குள்ள சிற்பங்களில் ஒன்று, அஜிதநாத தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசாகரர்களின் கதையைக் காட்டுகிறது. இந்தச் சிற்பத்திற்கு இப்போது ‘‘அர்ச்சுனன் தபசு’’ என்று தவறாகப் பெயர் கூறுகிறார்கள். சகர குமாரர்கள் கயிலாய மலையைச் சூழ்ந்து அகழி தோண்டி அதில் கங்கையாற்றைப் பாச்ச அது வெள்ளம் புரண்டோடி வெள்ளத்தினால் நாடுகளை அழிக்க, பகீரதன் அந்தக் கங்கையின் வெள்ளத்தைக் கடலில் கொண்டு போய்விட்டான். இக்கதையை வெகு அழகாக இங்குச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பத்தைப்பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந்நூல் வேதாரணியம் திரு. அ.ஒ. அனந்தரஜய்யன் அவர்களால் அச்சிடப்பட்டுள்ளது. மகாபலிபுரத்திலே பல்லவ அரசர்காலத்திலே அமைக்கப்பட்டபடியால், அக்காலத்தில் இந்தச் சமணசமயக் கதை எல்லோராலும் நன்கு அறியப்பட்டிருந்ததென்பது தெரிகிறது. இதனால் அக்காலத்தில் சமண சமயக்கொள்கைகள் நாட்டில் பெரிதும் பரவியிருந்தன என்பதும் விளங்குகிறது.

_______________________________________________________________________________________________________________

35. P.74. Antiquities of St.Thome and Mylapore.

36. P.175 Antiquities of St.Thome and Mylapore.

37. S.I.Ep.Rep. 1922-23.

38. 430 of 1922. Mad. Ep. Rep. 1926-27, 1923.

39. 64 of 1923.

40. S.I.Ep. Rep. 1923, Page 84

41. M.A.R. 1898, Page 4

42. M.A.R. 1898, P.4

43. Top List P. 178

44. M.A.R. 1897, P.4, M.E.R. 1923, P.4.

45. Ep.Rep. 1923, P.129

46. S.I.Epi. Rep 1923, Page 4

47. 22 of 1934-35

48. 98 of 1923

49. 100 of 1923

50. 97 of 1923

51. 381 of 1923-24.

52. S.I.I. Vol VII No.399

53. Tiruparuttik-kunram and its temples by T.N. Rama chandran.

54. 358 of 1908

55. S.I.I. Vol VII No.540.

56. Arch Sur of S Circle. Madras. 1912-13, Page-7

57. Top List Page 91

58. Top List Page 149

59. Top List Page 151

60. Top list Page 160.

61. Top List Page 160

62. Top List Page 161

63. Top List Page 161

64. Top List Page 161

65. Top List Page 162

66. Top List Page 168

67. S.I.I. Vol III Part iii No. 92

68. Mr.Swells List of Antiquities, Vol. I Page 167

69. N.A. Dt. Manual, P201, 202 and 168

70. South Indian Epigraphy Report 1923-24 Page 6

71. Ep. Rep. 1923, P.3&4

72. North Arcot Dt. Manual P.308

73. Top List Vol I, P.56, 168

74. A Jain Rock Inscription at Vallimalai by H. Hultzsch,Ph.D.
Epigraphia Indica Vol. IV P.140-42. Top List Vol I Page 120.
ஷ கல் எழுத்திற் கூறப்படும் ‘பவணந்தி பட்டாரர்’ என்பவர் நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவராகலாம் என்பது சிலர் கருத்து.

75. Jaina Rock-Inscriptions at Panchapanda Vamalai by V.Venkayya M.A.(Page 136- 140). Epigrapia Indica. Vol IV. N.A. Dt. Manual P. 202-203, Top List P. 166.

76. South Arcot District Gazetteer, Vol. I. P.311

77. South Arcot District Gazetteer P. 318, Ep. Rep.1923-24. Ep.Rep 1921-22 P.99.

78. 416 of 1921. Ep.Rep. 1921-22, p.105.

79. பெரியபுராணம், திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் 146.

80. ’’ ’’ ’’

81. South Arcot Dt. Gazetteer, P.369.

82. South Arcot Dt. Gazetteer, P.369

83. Top Antiq. P.208.

84. South Arcot Dt. Gazetteer, P.369

85. 238 of 1904. 86. S.I. Ep.Rep. 1937-38, P.109

86a. 201, 202, 203 of 1902.

86b. South Arcot Dt.Gazetteer, P.370, Top.Antiq p.209

86c. S.I. EP. Rep. 1934-35, P.58, 83 of 1934-35.

87. S.Arcot Dt.Gazetteer P.390. Top. Antiq P.209-10.

88. S.A. Dt. Gazetteer P.405

89. Ep Rep.1901-02. 381, 382, 383, 384, 385, of 1902.

90. Top. Anti. P.211

91. 356 of 1909. Top.List. No. 407. P. 178.

92. EP.Rep. 1922. P. 98.

93. 8 of 1919.

94. I 124 of 1919.

95. 474 of 1920

96. S.I.I. Vol. VII. No. 846.(219 of 1902).

97. S.I.I. Vol. VII No. 847 (220 of 1902)

98. S.I.I. Vol. VII No. 279

99. S.I.I. Vol. VIII No. 289

100. S.I.I. Vol. VIII No. 863.

101. 449 of 1937-38. Ep. Rep. 1937-38 P. 104.

102. 446 of 1937-38.

103. 448 of 1937-38. Ep. Rep. 1937-38. P.89.

104. S.I. Ep. Rep. 1936-37. P.2.

105. S.I. Ep. Rep. 1936-37. P.60-61.

106. ” ” ” P.68.

107. S.I. Ep. Rep. 1937-38. P.67.

108. S.I.I (Texts) Vol. VIII. No. 889.

109. ” ” ” No. 890.

110. S.I.I. (Texts) Vol VIII. No. 48.

111. ” ” ” No. 51

112. S.I.I. Vol. VIII No. 67. 113. S.I.I. Vol. VIII No. 79.

114. Top. Antiq P. 209

115. Ep. Rep. 1897. P. 5

116. S.I.I.(Texts) Vol. VI. No.64 117. S.I.I. Vol. VI. No. 65

118. Top. Antiq. P. 209 119. Top. Antiq. P. 210.

120. மதுரைக் காண்டம், காடுகாண் காதை, (1-9)

121. அஜீவக வாதச் சருக்கம் 8

122. கோயிலைப் பாடியது. தாழிசை 70 உரை

123. உறையூர் அழித்த சருக்கம்

124. 258 of 1930-31

125. S.I.I. (Texts) Vol. VII No.198 P.98

126. S.I.I. (Texts) Vol. VIII. No. 557 and 572

127. S.I.I. (Texts) Vol. VIII. No. 609

128. do do No. 632

129. Trichinopoly gazetter Vol. I. P. 282

130. Top. Ins. Vol III. No. 132

131. Ep. Rep. 1912, P.57. Top. Ins. Vol.III No. 339

132. An. Rep. Arch. Dept. S. Circle, 1909-10 P.19

133. 32 of 1937-38

134. Top. List, P.263

135. Top. List P 264.

136. Top. List. P.265

137. Top. List. P.266

138. Top List, P. 267

139. Top. List, P. 269

140. Ind. Anti. 1875. Vol IV P. 272, Top. List, P. 269

141. Top. List, P. 269

142. Top. List, P. 270

143. P.S.I. No. 474. and 367 of 1904.

144. P.S.I. No. 158,

145. P.S.I. No.658 (Inscriptions (Texts) of the Pudukkottai State).

146. P.S.I. No. 158

147. P.S.I. No. 702

148. P.S.I. No. 530.

149. P.S.I. No. 9

150. P.S.I. No. 10

151. P.S.I. No. 4

152. Madras Ep.Rep. 1915, P.86 153. P.S.I. No. 7

154. S.I. Ep.Rep. 1929-30, P.74 1915, P.86

155. P.S.I. No.364

156. P.S.I. No.590

157. P.S.I. No.119

158. P.S.I. No.578

159. P.S.I. No.584

160. A Manual of Pudukkottai State, Vol.I Revised Ed.

161. இந்தக் கலகத்தைப் பற்றி இந்நூல், ‘சமண சமயம் குன்றிய வரலாறு’ என்னும் அதிகாரத்திற் காண்க.

162. Top. Ins. Vol ii (1293) S.I.I. (Toxtf) Vol VI NO.443

163. S.I.I. (Texts) Vol VI. NO. 422

164. Top. Ins Vol II (1527. 466 of 1912)

165. S.I.I. Vol III (No.91) M.E.R. 1912, p 7 and 62 S.I.I. Vol II P. 116

166. 222 of 1911 Ep. Rep. 1912 P.7

167. ‘சமண சமயம் குன்றிய வரலாறு’ என்னும் அதிகாரத்தில் இச் செய்தியைக் காண்க.

168. (392 of 1907) Ep.Rep. 1908

169. Tanjore. Dt. gazetteer, Vol. I P.223.

170. Tanjore Dt. Gazetteer Vol. I Topographical List of Antiquities P.280. List of the Antiquarian Remain in the Presidency of Madras G RobertSewell, Madras 1888. Archaeological Survey of Southern India I.

171. Ep.Rep. 1922, P.98, 99

172. Tan. Dt. Gazetteer. Vol.I (Top, List of Antiquities p.276. List of Antiquarian Remains in the Presidency of Madras Robert Sewell, 1882)

173. S.I.I. Vol II (no.4, P.43)

174. S.I.I. Vol II Part I (no.4, P.47)

175. S.I.I. Vol II (No.5, P.54)

176. S.I.I. Vol II Part II (No.31, 33, 35)

177. S.I.I. Vol II Part II (No.31, 33, 35)

178. 288 of 1917.

179. 396, 397 of 1914

180. 334 of 1929-30, S.I. Ep. Rep. 1929-30, P.72,74

181. S.I.I. (Texts) Vol. VIII No. 436 P. 228

182. S.I.I. (Texts) Vol. VIII No. 438

183. Top. Antiq. P. 296

184. Top. Ins. Vol. II No.30, P.1163

185. Top. Ins. Vol. II No.279, P.1196

186. Top. List of Antiq. P298

187. S.I. Ep. Rep. 1936-37 P.59

188. Ep.Rep. 1926 P.4

189. Arch. Rep. 1911-1912 Page 5

190. S.I.I. Vol. VIII No.404 Page 214

191. Top. List P. 299

192. Top. List P. 299

193. Top. List P. 299

194. Top. List P. 299

195. Top List P. 301

196. Epi. Indica Vol. VIII Page 317

197. Epi. Report 1907, Page 60-61

198. Epi. Report 1910, Page 8

199. Indian Antiquary Vol. XXII, Page 67

200. Arch Report S. Circle 1910-1911, Page 50-51

201. இந்தச் சமணமலைப் பாறைகள், சாலைகளுக்குச் சல்லி போடுவதற்காக உடைக்கப்பட்டன. 1952இல், ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் அரசாங்கத்தாரைக் கொண்டு இங்குக் கல் உடைப்பதைத் தடுத்துவிட்டார்.

202. 61 of 1910

203. 62 of 1910 204. 63 of 1910 205. 330 of 1908

206. 331 of 1908 207. 332 of 1908 208. 64 of 1910

209. 65 of 1910

210. 67 of 1910 211. 68 of 1910

212. 68 of 1910 213. 603 of 1951

214. Ep. Rep. 1916 P. 112-113

215. 605 of 1951 216. Ep. Rep. 1936-37, P. 54

217. 2430 of 1932-33 218. S.I.I. Vol. VIII No. 452

219. Ep. Rep. 1908, P. 57

220. S.I.I. Vol. V, PP 121 to 134

221. Top. List p 306 222. Top. List, P.307

223. Top. List. P.307 224. Top. List, P.308

225. Top. List, Tist, P.308 226. Ind. Anti. Vol. Vi, Top. List, P.312

227. Top. List, P.312

228. Top. List, P.315

229. J.A.S.E.B. XIV, Page 76 230. Top. List P. 196

231. Ep. Ind. Vol. X P.54-70, 304 of 1901

232. 305 of 1901. 233. Top. List P. 214

234. Top. List, P. 217, Madras Journal for 1918 P. 152

235. M.A.R. 1896, P.2, 1910-11, P.29, 1919-20, P.7

236. Top. List, P.221. 237. 614 of 1905. 238. 10 of 1910

239. S.I. Ep An. Rep. 1926-27. P.118.

240. Arch Rep. 1911-12, Page 39.