பக்கம் எண் :

பக்கம் எண் :13

11.   தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

 

    சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி
    சிங்கைவைகை திருப்புறம்பை அருகை தாசை
    சினகிரிவண் தீபைசித்தை வீரை கூடல்

என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத்துள்ள சமணர் ஊர்கள் கூறப்படுள்ளதெனத் தோன்றுகிறது. திரு. சாஸ்திரம் அய்யர் என்னும் சமணக் பெரியார் ஒருவர் ‘ஜைனசமய சித்தாந்தம்’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841 u) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

     ‘‘இவர்களுடைய (சைனருடைய) ஸ்தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றாமூர் என்றும், பெருமண்டூர் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சீபுரம் என்றும், திருப்பதிக் குன்றமென்றும், பெரிகுளம் என்றும், மூடுபத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், கனககிரி என்றும் இருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரியமடமுண்டு’’  

     இதனால், இவ்வூர்கள் சைனக் கிராமங்களென்பது விளங்கும்.

     ‘சமண ஊர்களின் ஜாபிதா’ என்னும் கையெழுத்து ஏட்டுச்சுவடி ஒன்று உண்டு. இந்த நூலின் இறுதியில், ‘இந்த ஜாபிதா சகாத்தம் 1738 இல் எழுதிக்கொடுத்த கய்பீத்து’ என்று காணப்படுவதால், இது கி.பி. 1819 இல் எழுதப்பட்டதாகும். அஃதாவது 138 ஆண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டது. இந்நூலில், இக்காலத்துள்ள சமணர் ஊர்களின் பெயரும் கோயில்கள் இத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. இருபிறைக் குறிக்குள் ந. கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும், இ.கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும் குறிக்கும். எண்கள் எத்தனை கோயில்கள் என்பதைக் காட்டும்.

துண்டீரதேசம் (தொண்டை மண்டலம்)

     செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சைனக் கிராமங்கள்.

     சித்தாமூர் (ந.கோ.3), தாயனூர், ஓதலபாடி, கொழப்புலியூர் (கொழப்பலூர்) (ந.கோ.1), கோனாமங்கலம், பெருங்குண நல்லூர், தூளி, தச்சாம்பாடி, எய்யல், சிண்டிப்பட்டு, மலையனூர், தொறப்பாடி (ந.கோ.1), கொசப்பட்டு, கொமியாங்குப்பம், சீயப்பூண்டி, செவளாம்பாடி, கன்னலம் (ந.கோ.1), வளத்தி, அண்ணமங்கலம், கள்ளப்புலியூர் (ந.கோ.1), மஞ்சப்பட்டு (ந.கோ.1), கொளத்தூர் (ந.கோ.1), கென்னாத்தூர் (ந.கோ.1), திருவாபாடி, சிற்றருகாவூர் (ந.கோ.1), புளிமாந்தாங்கல், தொண்டூர், அருகன்பூண்டி, வீரணாமநல்லூர், எளமங்கலம் (இ.கோ.1), அகரம், குறவன் புத்தூர், (பெரும்புகை) பெருமுகை (ந.கோ.1), சிறுகடம்பூர் (இ.கோ.1), சக்கிராபுரம் வடதரம், வயலாமூர் (ந.கோ.1), மோழியனூர், பேரணி, செண்டியம்பாக்கம்.

திருவோத்தூர் துக்கிடியில்

     கரந்தை (ந.கோ. 3), திருப்பறம்பூர் (ந.கோ.1), வள்ளை, பெருங்கட்டூர், நாகல், நறுமாப்பள்ளம், வேளிய நல்லூர், பனபாக்கம், நெல்லி, கரையூர், மேலப்பயந்தை, வாழைப்பந்தல் (இ.கோ.1), கோயிலாம்பூண்டி (இ.கோ.1), தின்னலூர்.

வந்தவாசி துக்கிடியில்

     கடனம்பாடி (இ.கோ.1), இராமசமுத்திரம், நெல்லியாங்குளம், எறமலூர், நல்லூர், வில்லிவனம், கூடலூர் (இ.கோ.1), தௌ¢ளாறு (இ.கோ.1), கூத்தவேடு (?), அகரக்குறக்கொட்டை, விருதூர், பெரியகொறக்கொட்டை, சென்னாந்தல், செங்கம்பூண்டி, புத்தூர், பொன்னூர் (ந.கோ.1), இளங்காடு (ந.கோ.1), சிந்தகம்பூண்டி, சாத்தமங்கலம் (ந.கோ.1), வங்காரம் (இ.கோ.1) அலகரம் பூண்டி, வெண்குணம், சேந்தமங்கலம் (ந.கோ.1), எறும்பூர், நல்லூர், ஆயில்பாடி, பழஞ்சூர்.

திண்டிவனம் துக்கிடியில்,

     பெருமண்டை (ந.கோ.2), வேம்பூண்டி, ஆலக்கிராமம், இரட்டணை, விழுக்கம் (ந.கோ.1), எடையாலம் (ந.கோ.1), கள்ளகுளத்தூர் (இ.கோ.1), பேராவூர் (இ.கோ.1), வேலூர் (ந.கோ.1), வெள்ளிமேடு (அபிஷேகம் இல்லாத கோயில் 1), நெமலி.

வழுதாவூர் துக்கிடியில்,

     வீடூர் (ந.கோ 1), ஆத்திகுப்பம், எழாய் கொல்லை புதுப்பட்டு, பாலப்பட்டு, மொண்டியம்பாக்கம், சிந்தாமணி, கப்பியாமூர், (கப்பியாம்புலியூர்) பிடாகம்.

திருவதி துக்கிடியில்,

     மானமாவேவி, கரடிபாக்கம்.

எலவனாசூர் துக்கிடியில்,

     திருநறுங்கொண்டை (ந.கோ.1; இ.கோ.1), ஆக்கனூர், இருவேலிப்பட்டு.

திருக்கோவிலூர் துக்கிடியில்,

     வீரசோழபுரம், விளந்தை, கூவம், சாங்கியம், முட்டத்தூர்.

திருவண்ணாமலை துக்கிடியில்,

     பென்னாத்தூர், மலையனூர், சிறுகொற்கை, சோமாசிபாடி, கொளத்தூர்.

போளூர் துக்கிடியில்,

     ரண்டேசரிபட்டு, குண்ணத்தூர் (ந.கோ.1; இ.கோ.1), காப்பலூர், மண்டகொளத்தூர், திருமலை (ந.கோ.1; இ.கோ.4).

ஆரணி சாகீர் துக்கிடியில்,

     திருமலைசமுத்திரம் (ந.கோ.1), ஆரணிப்பாளையம் (ந.கோ.1), புதுக்காமூர், நேத்தபாக்கம் (இ.கோ.1), பழங்காமூர், பூண்டி, அறையாளம், நெல்லிபாளையம், மெருகம்பூண்டி, சேரி (இ.கோ.1), தண்டு குண்ணத்தூர், அக்கிராபாளையம், சென்னாந்தல் (ந.கோ.1), விராதகண்டம், மேட்டுப்பாளையம், தச்சூர் (ந.கோ.1), பில்லூர், ஒண்ணுபுரம்.

மேலைச்சேரி சாகீர் துக்கிடியில்,

     தேசூர் (ந.கோ.1), சீயமங்கலம், தெறக்கோவில் (ந.கோ.1; இ.கோ.1)

பழைய கும்பினி சாகீர் துக்கிடியில்,

     மேலத்திப் பாக்கம் (ந.கோ.1), ஆர்ப்பாக்கம் (இ.கோ.1), பெரும்பாக்கம், பூச்சி பாக்கம், நரியம்புத்தூர், மருதம், காஞ்சீபுரம், திருப்பருத்திக் குன்றம் (ந.கோ.2), தாங்கி, (மாகறல், பொன்னகரி என்னும் கிராமங்களில் இரண்டு சமணக் கோயில்கள் பழுதுண்டு கிடக்கின்றன.)

கொலியநல்லூர் சாகீர் துக்கிடியில்,

     கஸ்பா (இ.கோ.2), கொலிய நல்லூர், அகலூர் (ந.கோ.1), (கோலிய நல்லூரில் பண்டைக் காலத்தில் சமணருக்கும் இந்துக்களுக்கும் கலகம் நடந்து சமணர் துன்பமடைந்தனர் என்று தெரிகிறது. இந் நூலில் இக்கலகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி சிதைவுபட்டுக் கிடப்பதால் முழுச் செய்தியும் தெரியவில்லை. ‘கொலிய நல்லூர் அக்கி மஹமது சாகீர் கஸ்பா கொலிய நல்லூரில் பூர்வீகம் ஜைனான்...........அந்தக் கிராமத்தில் புருஷாள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம்.........ஸ்திரிகள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம் 1...........பிரசித்தமாய் அபிஷேகம் நடந்து வருகையில் செஞ்சியில் மாதங்கள் அதிகாரம் பண்ணுகையில் ஜைன மார்க்கத்தின்பேரில் துவேஷமாயி........போது கொலிய நல்லூரில் வந்து ஜைனள்..........க்ஷ¦ணிச்ச போய் சிறு பேர்களிந்தார்கள். அந்த மாதங்கள் நாளையில் 3 ஜினாலயம்...........எடுபட்டுப் போச்சுது.........’ (என்று சிதைவுபட்ட பகுதியில் காணப்படுகிறது.)

சோழ தேசம்,

     தஞ்சாவூர், மன்னார் கோவில் (ந.கோ.1) தீபங்குடி, வேதாரணியம், அணிமதிக்கொடி (ந.கோ.1, இ.கோ.1), திருவாரூர், கீழப்படுகை, திருவையாறு, தொழுவனங்குடி, கும்பகோணம், குப்பசமுத்திரம், சிறுக்கும்பூர், ஆமூர், நாகப்பட்டணம், தோப்புத்துறை, உரத்தநாடு.

புவனகிரி துக்கிடியில்,

     சிதம்பரம், பெரிய கூடலூர்.

             *                 *            *

     தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதும் சமணர் அதிகமாக உள்ளனர். ஆர்க்காடு, போளூர், வந்தவாசித் தாலுகாக்களில் இவர்கள் அதிகமாக உள்ளனர்.

     சமணர்கள், நயினார், உடையார், முதலியார், செட்டியார், ராவ், தாஸ் என்னும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். நெற்றியில் சந்தனம் அணிகிறார்கள். அகலமான நீண்ட கோடாக அணிகிறார்கள். பூணூலும் அணிகிறார்கள். பிராமணரைவிட உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள். மாமிச உணவு புசிப்பதில்லை. இரவில் உணவுகொள்ளமாட்டார்கள். ஆகவே, சூரியன் மறைவதற்குள்ளாக உணவு கொள்கிறார்கள்.

     சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், கலைமகள் பூசை முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

     சமணக் கோயில்களின் அமைப்பு, சைவ வைணவக் கோயில்களின் அமைப்புப் போலவே உள்ளன. ஆனால், இந்தக் கோயில்கள் மிகச் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் மூலவர் என்றும் உற்சவமூர்த்தி என்றும் திருவுருவங்கள் உள்ளன. சாஸ்தா, இயக்கி முதலிய பரிவாரத் தெய்வங்களின் உருவங்களும் இக் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளவர் அனைவரும் திகம்பர சமணர் ஆகையினாலேஇக் கோயில்களில் உள்ள திருமேனிகள் திகம்பர உருவமாக (ஆடையில்லாமல்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பரிவாரத் தெய்வங்கள் ஆடை உள்ளனவாக அமைக்கப்படுகின்றன. அருகக் கடவுள் அல்லது தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் நின்ற கோலமாகவும் வீற்றிருக்கும் கோலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ, பௌத்தக் கோயில்களில் சில இடங்களில் கிடந்த (படுத்த) வண்ணமாகக் காணப்படுகிற பள்ளிகொண்ட திருவுருவங்களைப் போலச் சமணத் திருவுருவங்கள் கிடந்தவண்ணமாக அமைக்கப்படுவது இல்லை.

     சமணக் கோயில்களில நாள்தோறும் காலை மாலைகளில் பூசை நடைபெறுகிறது. அபிஷேகம், தீப ஆராதணை, அர்ச்சனை முதலியவை சைவ வைணவக் கோயில்களில் நடைபெறுவது போலவே நடைபெறுகின்றன. வடமொழியில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

     ஆண்டுதோறும் சமணக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது உண்டு. உற்சவ காலத்தில் உற்சவ மூர்த்திகளையும் பரிவாரத் தெய்வ உருவங்களையும் விமானத்திலும் வாகனங்களிலும் எழுந்தருளச் செய்கிறார்கள். சமண மூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும்போது அம்மூர்த்திகளுக்கு முன்னர்ச் தருமச் சக்கரம் எழுந்தருளும்; சைவ வைணவக் கோயில்களில் முறையே திரிசூலமும் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளுவதுபோல, ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்த முக் குடைகளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.

     பண்டைக் காலத்தில் பாடலிபுரம் (கடலூர்), ஜின காஞ்சி (காஞ்சிபுரம்) முதலிய இடங்களில் சமணர்களின் மடங்கள் இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சமண மடம் சித்தாமூரில் உள்ள மடம் ஒன்றுதான். சித்தாமூர் தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் இருக்கிறது. சித்தாமூர், வீரனாமூர், விழுக்கம், பெருமாண்டூர், ஆலக்கிராமம், வேலூர், தாயனூர் முதலிய ஊர்களில் இருக்கும் சமணர்கள் சேர்ந்து சித்தாமூர் மடத்துத் தலைவரை ஏற்படுத்துகிறார்கள். இந்த மடத்துத் தலைவருடைய பெயராவது: டெல்லி கொல்லாபுர ஜினகஞ்சி பெனுகொண்டா சதுர் சித்த சிம்மாசனாதீஸ்வர ஸ்ரீமத் அபிநவ லக்ஷ¢மீ சேனபட்டாரக பட்டாசாரிய வர்யசுவாமிகள் என்பது.

     சைனர்கள் வியாபாரிகளாகவும் உபாத்திமார்களாகவும் பயிர்த்தொழில் செய்பவர்களாகவும் உத்தியோகஸ்தர்களாகவும் பல தொழில் செய்கிறார்கள். வடநாட்டுச் சைனரைப்போலத் தமிழ்நாட்டுச் சைனர் பெருஞ்செல்வம் உடையவர் அல்லர். இவர்களில் சிலர் சைவ சமயத்தவராக மாறி வருகிறார்கள்.