சாதி
பரந்த மனித உணர்ச்சியை ஒடுக்குகிறது. அதன் கொடுமை
உச்சத்திலிருந்த காலத்தில் அதற்குப் பலியானவர்கள் அநேகர். இவர்களில்
தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களே சாதியின் சொல்லொணாக் கொடுமைகளை
அனுபவித்திருக்கிறார்கள்.
மானிட
உணர்வு மாண்புடையது. அது சாதிக்குள் ஒடுங்கிக்கிடக்க
மறுத்தபோது, பல வீரச்செயல்கள் விளைந்துள்ளன. காதல், உயர்ந்த மானிட
உணர்வு. அது சாதிக் கட்டுக் கோப்பை மீறி முளைவிட்டுத் துளிர்த்து பெரிய
விருட்சமான கதைகள் சிலவற்றை நாம் நாட்டுக்கதைப் பாடல்களில்
கேட்கிறோம்.
இக்காதல்
பாசத்தினுள் அகப்பட்டவர்களில் பலர் அதற்கெனவே
சாதியை எதிர்த்து நின்று உயிர் விட்டனர். சிலர் வெற்றி பெற்று பிற்காலத்தில்
காதலுக்காகவும் தங்கள் காதலியர் குடும்பங்களுக்காகவும் போராடித் தியாகச்
சீலர்களெனப் புகழ் பெற்று உயிர் நீத்தனர்.
மானிட
உணர்வையும், மனித உறவுகளையும் நிலைநாட்ட, தீமையையும்,
பொய்மையையும், குறுகிய வெறிகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற வீரன்
ஒருவனது சரித்திரமே முத்துப்பட்டன் கதையாகும்.
இக்கதை
நெல்லை மாவட்டத்தில் இன்றும் வில்லுப்பாட்டாகப்
பாடப்பட்டு வருகிறது.
இக்கதையை
வில்லுப்பாட்டுச் சொல்லிச் செல்லும் போக்கை
மாற்றாமலே நானும் எழுதி விடுகிறேன்.
பல வளம் வாய்ந்த ஆரிய நாட்டில்
அந்தணர் குடும்பமொன்றில்
ஏழு சகோதரர்களுக்குப்பின் முத்துப்பட்டன் பிறந்தான். இளமையிலேயே
சகல வித்தைகளிலும் வல்லவனானான். அவன் சத்தியத்தில்
பற்றுடையவனாயிருந்ததால் அண்ணன் மாரோடு ஒத்துப்போகவும் தாய்
தந்தையரோடு வாழவும் முடியவில்லை.
“சத்தியவான் முத்துப்பட்டன் தமையன்
மாரோடே சண்டை செய்து
மாதா பிதா வெறுத்து வஸ்துவகை தானிழந்து,
பிறந்த ஊர்தனைக் கடந்து பிறஊர்தனைப் போய்ச் சேர்ந்தான்.” |
|