பக்கம் எண் :

2முத்துப்பட்டன் கதை

     ஊரை விட்டு வெளியேறிய முத்துப்பட்டன் கொட்டாரக் கரைக்குச்
சென்றான். ராமராஜன் என்ற சிற்றரசனிடம் சேவகத்தில் அமர்ந்தான். சில
வருஷங்கள் சென்றன. அவனுடைய சகோதரர்கள் அவனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து விட்டுக் கடைசியில் கொட்டாரக் கரை வந்து
சேர்ந்தார்கள். அங்கே மரத்தடியில் களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.
தற்செயலாக அங்கு வந்த முத்துப்பட்டனைக் கண்டார்கள். அவனைக்
கண்டதும் அவன் சீராக வாழ்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். அவனை அழைத்துச் செல்ல விரும்பினார்கள்.

“தாயும் தகப்பனாரும் தவித்தல்லோ தேடுகிறார்.
சேஷய்யர் பெண்ணையல்லோ சிறப்பூட்டக் கேட்டிருக்கு
திரவியங்கள் உண்டுமானால் சீமைக்குப் போய்விடலாம்.”

என்று அவனிடம் சொன்னார்கள்.

     முத்துப்பட்டன் அரசனிடம் விடைபெற்று அண்ணன் மாரோடு
புறப்பட்டான். ஆரியன் கோவில், குளத்துப்புளி, சவரிமலை, ஆகிய
ஊர்களைக் கடந்து பொதிகை மலை வழியே நடந்தார்கள். சொரிமுத்துப்
பாதை வழியாகத் தளவாய்க் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே
சுமையிறக்கி வைத்துவிட்டு மாலை அனுஷ்டானங்களை முடித்துக்
கொண்டார்கள். இரவு கழிந்த பின் மறுபடியும் புறப்பட்டார்கள். சில
நாழிகைகளுக்குப் பின் முத்துப்பட்டனுக்குத் தாக முண்டாயிற்று. அரசடித்
துறையில் நீர் குடிக்க இறங்கினான். பூசையில் மூழ்கியிருக்கும் போது
அவனுக்குப் பின்னாலிருந்து இனிய நாட்டுப் பாட்டின் ஒலி காற்றில் ஏறி
வந்து, அவன் செவி வழியாக உள்ளத்தில் நுழைந்தது. திரும்பிப் பார்த்தான்
அவன் கண்டதென்ன?

“பட்டனும் பூசை செய்யப், பாவையர் ரெண்டுபேர்கள்
பெட்டியில் சோறும் கொண்டு பூச்சிநாய்தனைப் பிடித்து
பட்டணந்தனை விட்டு பசுக்கிடைக் கேகும் நேரம்
மட்டிலா தாகமுண்டாய் வந்தனர் தண்ணீர் தன்னில்”
 
“குனிந்தவர் தண்ணீர் கோரிக் குடித்துமே தாகம் தீர்ந்து
பணிந்துமே கிடைக்குப் போக பாவையர் பாடுமோசை
இனந் தெரியாமல் கேட்டு ஏங்கியே முத்துப்பட்டன்
வனந்தனில் சுத்தி ஓடி மறித்திட்டான் பெண்கள் தன்னை”

     அவர்களை மறித்து அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளும் படி
முத்துப்பட்டன் கேட்கிறான். அவர்கள் மறுத்துப் பேசுகிறார்கள்.