அவர்கள் போன பின்பு,
முத்துப்பட்டன் தந்திரமாகக் கல்லறையிலிருந்து
தப்பி வந்தான். வரும் வழியில் குடுமியை அறுத்தெறிந்தான். பூணூலைக்
களைந்தான். தோல் வாங்கிச் செருப்புத் தைத்துத் தோளில் மாட்டிக்கொண்டு
சேரிக்கு வந்து சேர்ந்தான். மாட்டுக்கிடையை விட்டு ஊர் திரும்பிய
வாலப்பகடை குடிசை வாசலில் இருந்த செருப்பைக் கண்டு திகைத்தான்.
பட்டனைக்கண்டதும் திகைப்பு மகிழ்ச்சியாக மாறிற்று. உடனே திருமணம்
நிச்சயித்தான். உறவு முறையாரை அழைத்தான். இந்த அதிசயமான திருமண
வைபவத்தைப் பாடகன் வாய் மொழியாகவே கேட்போம்.
“இனசாதிக்காரர்
வள்ளுவனும், வந்து ஏற்ற முகூர்த்தமிட்டு,
இட்டாரே அத்திமரம் நாட்டி, ஆவரம்பூக் கொண்டு பந்தலிட்டு
மணவறையிட்டுப் பகடைகள்கூடி, வாய்த்த நல்ல பெண்களுக்கு
வளையுடன், பாசியும், காதில் பொன்னோலையும் மஞ்சள்
பருக்கை பூசி
நெற்றியில் பொட்டு மையிட்டு மூக்குத்தி நத்தும் பொருந்தவிட்டு
வேடிக்கையாக இருபெண்கள் தன்னையும் நேசமாய்க் கூட்டிவந்து
வந்த பட்டனும் பெண்களையும் அந்த மணவறை தன்னில்வைத்து
மங்கிலியம் நிறைநாழியும் வைத்துக் கணபதி கொண்டுவைத்து
சந்திரன் சூரியன் தேவர்கள் சாட்சியாக முத்துப்பட்டன்
தாலியைப் பூட்டினான் பொம்மக்கா, திம்மக் காதம் கழுத்தில்
கழுத்தில் மாலையிட, பகடைகள் கலந்து குலவையிட
காப்புக் கையோடந்த மாப்பிள்ளைக்குப் பெண்கள் சாப்பாடு கொண்டுவைக்க,
உறவுமுறையாகும் சடங்கு கழிந்தவுடனே விருந்தளிக்க
உற்ற நல்லபகடை யெல்லாம் மொத்தமாய்த் தாரைவார்த்தார்
தாரை வார்த்தவுடன் சக்கிலியப் பெண்கள் சகலரும்கூடி
சாதி முறைப்படி கும்மியடிக்கிற சத்தத்தைக் கேளுங்கள்.” |
அன்றிரவு பட்டன், திம்மக்கா மடியில் தலையும்,
பொம்மக்கா மடியில்
காலும் வைத்துச் சற்றே கண்ணயர்ந்தான். பொல்லாத சொப்பனங்கள்
கண்டான். கையில் கட்டிய காப்பு நாணை கரையான் அரித்ததாகவும்,
கோழிக் குஞ்சை வெருகுப்பூனை பிடித்து ஓடவும் கனவு கண்டான். கதவு
தட்டிய ஓசை கேட்டுக் கண் திறந்தான். பகடைச் சிறுவனொருவன் வீட்டினுள்
நுழைந்து வாலப்பகடையின் மாடுகளை, ஊத்துமலை வன்னியரும்,
உக்கிரங்கோட்டை வன்னியரும் களவு கொண்டு போனதாகவும்
மறித்தவர்களை விரட்டி விட்டதாகவும் சொன்னான்.
சட்டென
எழுந்து பட்டன், வல்லயத்தையும் தடியையும் எடுத்துக்
கொண்டு, நாயையும் அவிழ்த்து விட்டுப் புறப்பட்டான்.
|