செத்த மாடறுக்க வேணும் ஓ நயினாரே
சேரிக் கெல்லாம் பங்கிட வேணும் ஓ நயினாரே, |
|
ஆட்டுத் தோலும் மாட்டுத் தோலும்
அழுக வைப்போமே,
அதை யெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போமே,
அடியறுப்போம், சுவடு தைப்போம், வாரறுப்போமே
அதை எடுத்துக் கடைக்குக் கடை கொண்டு விற்போமே
சாராயம், கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியன் நான் நயினாரே. |
என்று வாலப்பகடை கூறினான். அதைக் கேட்டபட்டன்
உறுதியோடு
சொல்லுகிறான்.
கோபம் வேண்டாம் மாமனாரே சொல்லக்கேளும்
நீர்
கோடி கோடி தர்மமுண்டு உமது மக்களை
சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால்
தாய் தகப்பன் நீரல்லவோ இன்று முதலுக்கு
சாதி சனம் போல் நின்று வாரேன் குடிலுக்கு. |
என்று முத்துப்பட்டன் பதில் சொன்னான்.
அதைக் கேட்ட வாலப்பகடைக்கு முற்றிலும் ஐயம் நீங்கவில்லை.
ஆகையால் அவன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். குடுமியையும், பூணுலையும்
களைந்து விட்டு, நாற்பது நாட்கள் சக்கிலியத் தொழில் செய்து செருப்பு
விற்று வந்தால் தனது மக்களை அவனுக்கு மணம் செய்து வைப்பதாகக்
கூறுகிறான். பட்டன் சம்மதியாமல் ஓடிவிடுவான் என்பதை அவன் எண்ணம்.
ஆனால் பட்டன் சம்மதிக்கிறான். அண்ணன்மாரிடம் சொல்லிவிட்டு அன்றே
திரும்புவதாகக் கூறிச் செல்லுகிறான்.
பட்டன்
தனது சகோதரர்களிடம் உண்மையைச் சொல்லுகிறான்.
அவர்கள் அவனுக்குப் புத்தி சொல்லுகிறார்கள். செத்த மாட்டைத் தின்னும்
புலையன் வீட்டுப் பெண்ணை பிராம்மணன் மணம் செய்து கொள்ளலாமா?
என்று கேட்கிறார்கள். மேல். சாதிக்காரர், பசு உயிரோடிருக்கும் வரை
பாலை உறிஞ்சிவிட்டு செத்தமாட்டைத்தான் புலையருக்கு மிஞ்ச
விடுகிறார்கள் என்று எதிர்த்துத் தாக்குகிறான் பட்டன். புழு பூச்சிகளையும்,
நண்டையும் தின்னும் சக்கிலியன் வீட்டுப் பெண்ணைப் பார்ப்பான்
மணக்கலாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள். வயலில் விளையும் பயிரின்
பயனை யெல்லாம் மேல் சாதிக்காரர்கள் அள்ளிச் சென்று விடுவதால்
வயலில் மிஞ்சும், புழு பூச்சியும், நண்டும்தான் புலையருக்கு மிஞ்சுகின்றன,
என்று பட்டன் குத்திக் காட்டுகிறான். விவாதிப்பதில் பயனில்லை யென்று
கண்ட சகோதரர்கள் அவனை ஒரு கல்லறைக்குள் தள்ளி அடைத்து
விடுகிறார்கள்.
|