ஆடுகொள்ளை மாடுகொள்ளை அவசூறை கொள்ளை செய்து கொள்ளை செய்துவருகிற குறை சொல்ல வந்தோமைய்யா அப்போது கணக்கன் அதற்கு வகை சொல்லுகிறான் நீங்கள் இப்படியேதான் ராஜா சமூகம் அறிய இனிப்போகாது அவர் ஆராய்ச்சி மணிகட்டி அசையாமல் தானிருப்பார் அந்த ஆராய்ச்சி மணியை அடித்தீரேயானால் அந்த சத்தம் கேட்டு அரசருமே ஆளனுப்பி உங்களைத் தானழைத்து உங்கள் குறை என்ன வென்பார் அந்த மொழி சொல்ல குடியானவர் அப்படியே ஆகுதென்று ஆராய்ச்சிமணி மண்டபத்தில் எல்லோரும் வந்திறங்கி ஆராய்ச்சி மணியை அசைத்து விட்டாரப்போது அந்த நல்ல சத்தம் ராஜாவுக்கு அனந்தலிலே கேட்குதப்போ எண்ணாது மெண்ணி எண்ணி ராஜா எழுந்திருந்து அந்நேரம் ஆராய்ச்சி மணிகட்டி நாம் அசையாமல் பதியிருக்க ஆராய்ச்சி மணியுமிப்போ அசைய வந்த காரியமேன்? எந்தவூர் அழிந்ததோ? எத்தேசம் பாழாச்சோ? என்று மனங் கலங்கி எழுந்திருந்து அந்நேரம் வெள்ளித் தடிக்காரர் விருதுமன்னரைத் தானழைத்து ஆராய்ச்சி மணியுமிப்போ அசையவரக் காரணமேன்? அதை ஆராய்ந்து பார்த்து அரைநொடியில் வரவேணும் அப்போது தூதர் அதிதுரிதாய் ஓடிவந்து குடியான பேரையுந்தான் கூப்பிட்டாரந்நேரம் வந்து குடியானவர் வணக்கமுடன் நிற்கையிலே ஆராய்ச்சி மணியை இப்போ அசைத்துவிட்ட காரியமேன்? அந்த மொழி கேட்க குடியானவர் அப்போது ஏதுசொல்வார் ரெத்னாசலமூத்தி கோவில் கிராமம் நாங்கள் கொள்ளை கொடுத்து நாங்கள் குடித்தனம் செய்ய முடியாமல் ராஜா சிவசோழர் பாதம் அறிய வந்தோம்! | | |
|
|