பக்கம் எண் :

334அண்ணன்மார் சுவாமி கதை

என்று சொல்லிப் பேசி இதமாக அப்போது
உறையூர் பட்டணத்து வீதியிலே அண்ணர் பவனி வருகையிலே
மல்லர் தெருவீதியிலே அண்ணர் வாரார் பவனிவலம்
மல்லர்களும் சித்தர்களும் வழியை மறித்துமப்போ
வழியை மறித்துமப்போ மல்லர்கள் வந்தெதிர்த்து நிற்கையிலே

அப்போது சின்னாண்டர் அவர்களுக்கு ஏதுசொல்வார்
ஆயிரம்பேர் மல்லர்களும் அனைவோரும் வாங்களென்றார்
உங்களுட சமர்த்தை நான் இனிப்பார்க்க வேணுமென்று
மத்தகத்து வெள்ளானை மதகரியை விட்டிறங்கி
அட்டமிட்டு பவனிகொண்டு அறுபதடி பின்குதித்து

வட்டமிட்டு விளையாடி வந்து புகுந்தார் மல்லர் பெருஞ்சேனையில்
தண்டை மிதிமிதித்து குமாரசங்கு தாண்டிக்குதிக்கையிலே
காலில் மிதிபட்டு மல்லர் களைப்போடு வீழ்வாரும்
முன்குதிக்க பின்குதிக்க மிதிபட்டு மூர்ச்சை போய் வீழ்வாரும்
ஐயா சரணமென்று அடிவணங்கி நிற்பாரும்

சுவாமி சரணமென்று சாஷ்டாங்கம் செய்வாரும்
அப்போ குமாரசங்கு அனைவரையும் போங்களென்றார்
மல்லர் தெருவீதியிலே வந்தார் நகரில் வலம்
உறையூருப்பட்டணத்தில் பவனி வலம் வந்துமப்போ
சிவசோழரைப் பார்த்து ஏதுசொல்வார் நல்லபொன்னு

என்பேரு சொல்லி என் சீமை இரு கையிலும் பொன்னேந்தி
பொன்னாண்டர் பேரு சொல்லி போகலாம் எந்தமட்டும்
உங்கள் சீமையிலே செப்பூசி போனாலும் பொன்னூசி நான் தருவேன்