பக்கம் எண் :

மதுரை வீரன் கதை17

  
     வேகமாக பொம்மி அறியா வண்ணம் புறப்பட்டுச் சென்றான். வெள்ளையம்மாள்
மீனாட்சி சன்னதிக்கு முன்னால் குடியிருந்தாள். அவ்வேளையில் அவள் படுக்கையில்
புரண்டு கொண்டிருந்தாள். மதில் ஏறி குதித்த வீரன் மாளிகையுள் புகுந்தான். அருகில்
சென்று அணைத்தான். அலறுவாள் என்று எண்ணி வாயைக் கட்டி, மூட்டையாக்கி
தூக்கிச் சென்றான். கோட்டையினை தாண்டி குதிக்கும்போது ஒற்றர்கள் கண்டனர்.

     வீரனை விசாரித்தனர். வீரனோ இருட்டில் நின்றதால் ஒற்றர்களும் அறியவில்லை.
வீரனும் ஊமையாய் இருந்தான். மன்னனுக்குச் செய்தி சென்றது. மன்னன் வீரனைக்
கள்ளன் என எண்ணி விசாரித்தான். வீரன் மௌனமானான். கள்ளன் மாறுகால் மாறு
கை வாங்குமாறு ஆணையிட்டான். கொலைகாரர்கள் அவ்வாறே செய்தனர். வீரன்
தன்னுடைய விதியை எண்ணி அமைதியாக இருந்தான்.

     வெள்ளையம்மாள் மூட்டையை விட்டு வெளியே வந்த போது வீரனைக்
கண்டாள். தன்னைத் தொட்டுதூக்கியவனே தன் கணவன் எனக்கருதி வீரனோடு
இறப்பேன் என்று எண்ணினாள்.

     காவலர்கள் வீரனை அடையாளம் கண்டுகொண்டனர். தவறு நடந்து விட்டதே
என்று கலங்கினர். பொம்மி கணவனுக்கு உற்றது கேட்டு கலங்கி கண்ணீர் வடித்தாள்.
வீரன் அவளைத் தேற்றினான். தன் விதி, வரலாற்றை விரித்துரைத்தான். பொம்மியும்
உடன்கட்டை ஏறிட வைகையில் குளித்து திருநீறு பூசி வந்தாள்.

     வெள்ளையம்மாள் மன்னனிடம் சென்று செய்தியைச் சொன்னாள். நாயக்கன்
கலங்கினான்; கண்ணீர் சொரிந்தான் வீரனைப் பார்க்க விரைந்து வந்தான் ‘என்
பெண்ணைக் கேட்டாலும் தந்திருப்பேனே ஏன் இவ்வாறு செய்தாய்!’ என்று
புலம்பினான்.

     நாயக்கன், மீனாட்சி அம்மனிடம் சென்றான். வீரனின் வேதனையைத் தீர்க்குமாறு
வேண்டினான். அம்மை அருள் செய்தாள். வீரனுக்கு கை கால் வளர்ந்தது. நாயக்கனிடம்
தன் வரலாற்றைக் கூறினான் வீரன். மன்னனும் ஒப்புக் கொண்டான். பொம்மியும்
வெள்ளையம்மாளும் உடன் கட்டை ஏறினர். மன்னன் தானம் பல செய்தான்.

ம-க 2