பக்கம் எண் :

18மதுரை வீரன் கதை

  
     வீரன் மனைவியற்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சடங்குகளையும் செய்து
முடித்தான். குளித்தெழுந்தான்; திருநீறுபூசினான், மீனாட்சிமுன்வந்து வணங்கி
வழிபட்டான். கம்பத்தடியில் இருக்குமாறு அன்னை அருள் புரிந்தாள். வீரன்
கம்பத்தடிக்கு வந்து சூரிக்கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டான். வீரன் தலை
அம்மாளின் காலடியில் உருண்டது. அனைவரும் வியந்தனர்.

     நாயக்கன் அம்மனிடம் விடைபெற்றுச் சென்றான். அன்று முதல் மூன்று நாள்
வீரனுக்குப் பூஜை எதுவும் இல்லை. வீரனுக்குக் கோபம் வந்தது. வீரன் அம்மையிடம்
முறையிட்டான். கொள்ளையடிக்க அனுமதி கேட்டான். அம்மை அனுமதித்தாள்.

     வீரன் நாயக்கன் கனவில் தோன்றி அவனைப் பயமுறுத்தினான். நாயக்கனும்
அச்சப்பட்டு மறுநாள் காலையில் மீனாட்சியிடம் முறையிட்டான். முந்தைய இரவில்
வீரன் குதிரைகளையும், மாடுகளையும் கொன்றான். வீரர்களை அழித்தான், கன்னிப்
பெண்களைத் துன்புறுத்தினான். நாயக்கனிடம் அம்மை வீரனின் நிலையை
விளக்கினாள். அவனுக்குப் பூசை செய்யுமாறு கூறினாள். நகரில் தெருவுக்கு தெரு
அவனை வழிபடுமாறு வேண்டினாள். மன்னன் அவ்வாறேசெய்தான்.

     ஐந்நூறு பொன்னால் அபிசேகம் செய்தான் வீரனுக்கு. வீதிதோறும் கோவில்
கட்டினான். மக்கள் வீரனுக்குப் பூசை செய்தனர். கோட்டைக் குறிகாரன் குமரமுத்து
நாயக்கன் மேல் வீரன் ஆவேசம் கொண்டான். ‘என் பெயரால் திருநீறு கொடுத்தால்
பிணிதீரும்; என்றான். தான் அழித்த படைகளுக்கு உயிர்கொடுத்தான். நாயக்கன்
மகிழ்ந்தான். குழந்தை பிறந்தால் வீரன் பெயர் இடுவதாக எண்ணினன். மனைவி திருநீறு
பெற்றதும் குழந்தையுண்டானது. பத்தாம் மாதத்தில் பாலகனைப் பெற்றதும் வீரன் என்று
பெயரிட்டனர். ஐந்நூறு வண்டிகளில் சக்கரை எடுத்து மக்களுக்குத் தானம் கொடுத்தான்.
வேதியர்க்கும் வேண்டிய தானங்கள் கொடுக்கப்பட்டது. வீரனுக்குப் பூசை செய்யப்பட்டது.
தன்னையும் நாட்டையும் காத்து அருள் புரியுமாறு வேண்டினான்.