இப்போது சென்னையில் பிரபலமாயிருக்கும் ஸ்பென்ஸர் கம்பெனியில் அவருக்குக் குமாஸ்தா வேலை கிடைத்தது.
அந்த வேலையில் இருக்கும்போதே அவர் ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களைப் படித்து வந்தார். தினமும் செய்தித்தாள் படிக்காமல் இருக்கமாட்டார். காலையில் படித்த செய்திகளை, பகல் நேரத்தில், இடைவேளையில் ஸ்பென்ஸர் கம்பெனித் தொழிலாளர்களிடம் விவரமாக எடுத்துக் கூறுவார். சில சமயங்களில், செய்தித் தாளில் உள்ள முக்கிய பகுதிகளை அவர்களிடம் படித்துக் காட்டுவதும் உண்டு.
அந்தக் காலத்தில், திலகர் ஆங்கிலேயரை எதிர்த்துப் பல இடங்களில் கிளர்ச்சி செய்து வந்தார். அதைப் பற்றிய செய்திகளைத் திரு.வி.க. உணர்ச்சியோடு தொழிலாளரிடம் படித்துக்காட்டுவார். அவர்களுக்கும் நம் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.
தினந்தோறும் இடைவேளையில், திரு.வி.க. பத்திரிகை படித்து வருவதை அங்கிருந்த ஓர் ஐரோப்பியர் கேள்விப்பட்டார். உடனே, அவர் திரு.வி.க.வை அழைத்து, “இங்கு நீர் தொழிலாளருக்குப் பத்திரிகைச் செய்திகளைச் சொல்லி வருவதாக அறிந்தேன். இது பெரிய குற்றம். இன்று முதல் நீர் இந்த வழக்கத்தை விட்டுவிட வேண்டும்” என்றார்.
“வேலை நேரத்தில் பத்திரிகைச் செய்திகளைச் சொல்லவில்லையே ! ஓய்வு நேரத்தில்தானே சொல்லுகிறேன்?” என்றார் திரு.வி.க.
|