“எந்த நேரமாயினும் சரி, இந்தக் கம்பெனிக்குள் இருக்கும்போது, பத்திரிகை படிப்பதோ, பத்திரிகைச் செய்திகளைச் சொல்லுவதோ கூடாது. இது என் கண்டிப்பான உத்தரவு” என்றார் ஐரோப்பியர்.
திரு.வி.க. அவருக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அன்று பிற்பகலே அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார். * * *
திரு.வி.க. குமாஸ்தா வேலையை விட்ட பிறகு சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவருக்கு நல்ல பெயர். விரைவிலே தலைமைத் தமிழாசிரியரானார்.
ஒருநாள், நகரிலே பெரிய அரசியல் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்திலே பேசும்படியாக திரு.வி.க.வைக் கேட்டுக்கொண்டார்கள். திரு.வி.க. அதற்கு முன்பு பல சங்கங்களில் இலக்கிய சம்பந்தமாகப் பேசியிருக்கிறார். ஆனாலும், அரசியல் கூட்டத்தில் அவர் பேசியதில்லை. அதுதான் முதல் முதலாக அவர் பேசிய அரசியல் கூட்டம். அவர் பேசியதைக் கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் வியப்படைந்தார்கள் ; மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம், அந்தக் காலத்தில் அரசியல் மேடையில் பேசுவோரெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலே பேசி வந்தார்கள். ஒரு சிலர்தான் தமிழில் பேசுவார்கள். அவர்களும் திரு.வி.க.வைப் போல் அவ்வளவு அழகாகவும், தெளிவாகவும், நல்ல தமிழில், உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறியதில்லை. அதனால், அவர் பேச்சை அன்று கேட்டவர்கள், |