பக்கம் எண் :

32காளித்தம்பியின் கதை

     “அனுமதி தருவீர்கள் என்று நம்புகிறேன். என் மீது உங்களுக்கு
நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான் பழனி.


     சுந்தரேசர் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “சரி பழனி, உன்
விருப்பப்படியே போய் வா! சரியாக ஒரே வருடம்! அடுத்த மே மாதத்தில்
இங்கே வந்துவிட வேண்டும். பழனி நீ எந்த ஊருக்குப் போவதாகத் திட்டம்
போட்டிருக்கிறாய்?” என்று கேட்டார் அப்பா.


     “எந்த ஊரைப் பற்றியும் இன்னும் நான் நினைக்கவில்லை.
பள்ளிக்கூடங்கள் நிறைய இருக்கும் ஏதாவது ஒரு ஊருக்குப் போகலாம்
என்று நினைக்கிறேன்” என்றான் பழனி.


     “கோயமுத்தூருக்குப் போனால் என்ன? அங்குப் பள்ளிகள் நிறைய
இருக்கின்றன. அந்த ஊருக்குப் போய் உன் இலட்சியத்தை நிறைவேற்றிக்
கொள்கிறாயா?” என்று கேட்டார் தந்தை.


     பழனி “சரி” என்று சம்மதித்தான். இது நடந்த ஐந்தாம் நாள் மதுரையை
விட்டுக் கோவைக்குச் செல்லத்தயாரானான்.


     முதலில் பழனியின் அம்மா இதற்குச் சம்மதிக்கவில்லை. “யாரோ
எதுவோ சொன்னால் அதற்காக என் மகன் என்னை விட்டுச் செல்வதா?”
என்று கூறி மறுத்துவிட்டாள்.


     சுந்தரேசர் தனியாக மனைவியிடம் பேசினார். “பழனி ஒன்றை
நினைத்தால் அதை எப்படியும் முடித்தே தீருவான். நீயும் நானும் அனுமதி
தராவிட்டால் அவன் நம்மிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது
போனாலும் போவான். நீ அதை விரும்புகிறாயா?” என்று கேட்டார்.


     பழனியின் அம்மா அப்படி நடப்பதை விரும்பவில்லை. “கோயமுத்தூர்
அவனுக்குப் புது இடம். அவன் எங்கே தங்குவான்? யார் அவனுக்கு எது
பிடிக்கும் என்று அறிந்து உணவு அளிப்பார்கள்?” என்று கூறிக் கண்
கலங்கினாள்.