பழனியின் வீட்டுக்குத் தினமும் காலையில் ஆங்கிலச் செய்தித்தாளும், மாலையில் தமிழ்ச் செய்தித்தாளும் வரும். பழனி காலையில் செய்தித்தாள் படித்துப் பழகியவன். அதனால் “பேப்பர்” என்று அழைத்தான். பேப்பர் விற்பவன் நொடியில் ஓடிவந்தான். ஒரு செய்தித்தாளைக் கொடுத்தான். பழனி அதை வாங்கிக் கொண்டான். அதற்குப் பணம் தரவேண்டுமே? எங்கிருந்து தருவது? அப்பாவின் பணத்தை இதற்கு மட்டும் பயன்படுத்தலாமா? பழனி யோசிக்கும்வரை பேப்பர்காரன் சும்மாயிருக்கவில்லை. “சீக்கிரம் துட்டு கொடுப்பா” என்று அவசரப்படுத்தினான். பழனி பையில் கையை விட்டான். என்ன ஆச்சர்யம்! பர்ஸைக் காணோம்! பழனி மீண்டும் ஒரு முறை பையைத் துழாவினான். பர்ஸ் இல்லை. பர்ஸ் எங்கே போனது? கால் சட்டையில் சற்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது பர்ஸ். அதைப் பார்த்த ஒருவன்தான் அவன் மீது மோதி, அதே நேரத்தில் பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றான். பாவம், பழனிக்கு இது புரியவில்லை. “துட்டு கொடுப்பா” பேப்பர்காரன் மீண்டும் அவசரப்படுத்தினான். பழனியிடம் பணம் ஏது? “மன்னிக்கவேண்டும். என் பர்ஸ் தொலைந்து விட்டது” என்று சொல்லி வாங்கிய பேப்பரை அவனிடம் நீட்டினான். “என்னப்பா, பிக்பாக்கெட்டா? இது பட்ணம்! இங்கே உஷாரா இருக்க வேண்டும்” என்று சொன்னான் பேப்பர்காரன் இதற்குள் யாரோ “ஏய் பேப்பர்” என்று அழைத்தனர். உடனே பழனி நீட்டிய பேப்பரைப் பறித்துக்கொண்டு அவரிடம் ஓடினான் பேப்பர்காரன். பழனி சிரித்தான். அப்பாவின் பணம் தனக்கு வேண்டாம் என்று நினைத்தான். அவன் எண்ணத்தை அறிந்தவர்கள் போல |