“ஓ, போடுவார்கள். ஒரு சாப்பாடு இரண்டு ரூபாய். ஆனால் அந்தச் சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்காதே” என்றான் காளி. பழனி “பரவாயில்லை. அங்கேயே போகலாம்” என்றான். காளி பழனியை அழைத்துக் கொண்டு தான் சாப்பிடும் வீட்டுக்குச் சென்றான். அங்கே போட்ட சாப்பாட்டைப் பழனியால் சாப்பிட முடியவில்லை. பசியைப் போக்க எப்படியோ சாப்பிட்டு முடித்தான். காளி பழனியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சூளையில் இருந்த சந்தில் ஒரு பழைய வீட்டின் முன் புறம் எட்டடி நீளமும் நாலடி அகலமும் உள்ள சின்ன அறையில்தான் காளி இருந்தான். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரின் கடையில் தான் காளி வேலை செய்து வந்தான். அதனால் முப்பது ரூபாய் வாடகைக்கு அந்த அறையை விட்டிருந்தார். இல்லையென்றால் அதற்கே நூறு ரூபாய் வாடகை தரவேண்டும். அறையில் இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர். காளியே அமைதியைக் கலைத்தான். “பழனி, உன் பெயர்தான் எனக்குத் தெரியும். மற்ற விவரங்களைச் சொல்கிறாயா?” என்று கேட்டான் காளி. “காளி, உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன் உதவியுடன் என் லட்சியத்தை முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஆனால் தயவு செய்து என் ஊர் எது, தாய் தந்தை யார் என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்காதே. நான் தனியே இருந்து படித்துப் புகழ் பெற முடியும் என்பதை நிரூபிக்க இங்கே வந்திருக்கிறேன். அதை மட்டும் சொல்கிறேன்” என்றான் பழனி. “சரி பழனி, நான் மேற்கொண்டு உன்னை வற்புறுத்தவில்லை. இனி நீ என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல்லு” என்று கேட்டான். |