படி! பட்டணத்தில் வேலை கிடைக்கும். வேலைக்கு நல்ல சம்பளமும் கிடைக்கும்” என்று சொன்னார். அந்த ஆசிரியர் பெயர் முத்தையா! அவர்தான் எனக்கு அறிவு கொடுத்தார். அவர் எத்தனையோ விஷயங்களைச் சொல்லித் தந்தார். எத்தனையோ பேருடைய வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லி என்னை மகிழ்வித்தார். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு இந்தச் சென்னைக்கு வந்தேன். பள்ளியில் சம்பளம் இல்லாமல் கற்றுத் தருவார்கள் என்பது தெரிந்தது. ஆனால் எங்கே தங்குவது? எப்படிச் சாப்பிடுவது? படிக்கவேண்டும் என்ற ஆசையைப் பலரிடம் சொன்னேன். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் செய்ய வேலை கேட்டேன். கிடைக்கவில்லை. முழுநேர வேலையே கிடைக்காதபோது ஓய்வு நேரத்தில் செய்ய வேலை கிடைக்குமா? படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். உயிரோடு இருக்க உணவு? அதுவே கிடைக்கவில்லை. சில நாள் பட்டினி இருந்தேன். கடைசியில் பிச்சை எடுத்தேன். பழனி, பிச்சை எடுப்பது எவ்வளவு இழிவு தெரியுமா? அது அனுபவித்தவனுக்குத்தான் தெரியும். ஒரு நாள் பிச்சை கேட்ட என்னை ஒருவன் ‘சீ குறுக்கே நிற்காதே” என்று பிடித்துத் தள்ளினான். பட்டினியோடு இருந்த நான் அருகே இருந்த சாக்கடையில விழுந்தேன். அந்தச் சாக்கடையில்தான் என் முதல் லட்சியம் தோன்றியது. உயிரே போனாலும் சரி இனிப் பிச்சை எடுக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். பிச்சை எடுப்பதில்லை என்று சபதம் செய்தேன். பிச்சை புகினும் கற்றல் நன்று என்கிறார்கள். பழனி கற்பதற்காகக்கூடப் பிச்சை எடுக்கக்கூடாது என்பது என் எண்ணம். பெரிய வீரனைப்போலச் சபதம் செய்துவிட்டுச் சாக்கடையிலிருந்து எழுந்துவிட்டேன். ஆனால் பசியைப் போக்க என்ன செய்வது? ஒன்றும் புரியாமல் ஒரு ஓட்டலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். எனக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக சைக்கிள்கள் இருந்தன. அவை ஓட்டலுக்குள் சென்றவர்கள் விட்டுவிட்டுப் போன சைக்கிள்கள். அவற்றில் பல புழுதி படிந்திருப்பதைப் பார்த்தேன். |