பழனியோ “தேர்வெல்லாம் நன்றாகத்தான் எழுதியிருக்கிறேன்” என்று உற்சாகமில்லாமல் சொன்னான். காளி திடுக்கிட்டான். “என்ன பழனி ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? தேர்வு சரியாக எழுதவில்லையா?” என்று கேட்டான். “மூன்று தேர்வுகளையும் நன்றாக எழுதியிருக்கிறேன். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறேன். அவை சரியாக இருக்கும் என்றும் நம்புகிறேன்” என்றான் பழனி. “பின் ஏன் உன் முகம் இப்படி இருக்கிறது?” என்று கேட்டான் காளி. “நான் நன்றாக எழுதியிருக்கிறேன். என்னுடன் இருபத்திரண்டு பேர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்களில் என்னை விட கெட்டிக்காரர்கள் இருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பானே! என்னைக் காட்டிலும் நன்றாக எழுதியவன் ஒருவன் அல்லது இருவராக இருந்தால் பரவாயில்லை. மூன்றாவது இடமாவது எனக்குக் கிடைக்கும். அப்படியில்லாமல் மூன்று பேர் என்னைக் காட்டிலும் நன்றாக எழுதியிருந்தாலும் எனக்கு இடம் கிடைக்காதே” என்றான் பழனி. “பழனி சொல்வதும் உண்மைதான். இருப்பதோ மூன்று இடம். மொத்தம் இருபத்து மூன்று பேரல்லவா பரீட்சை எழுதியிருக்கிறார்கள்?” என்று ஒரு நிமிடம் நினைத்தான் காளி. “பழனி கெட்டிக்காரன். நிச்சயம் அவனுக்கு இடம் கிடைக்கும்” என்று நம்பிக்கையும் உடனே எழுந்தது. பழனியின் சோர்ந்த முகம் காளியை வருத்தியது. “சே...சே...இதென்ன பழனி, இப்படி உன் முகம் அழுதுவடிகிறது. உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவலையை விடு. உனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். வேண்டுமானால் பாரேன்” என்று காளி பழனியைத் தேற்றி அவனைச் சாப்பிட அழைத்துச் சென்றான். |