ஒருமகளே! நுண்ணியநின் இடையில் சுற்ற ஒப்பரிய நன்மணிமே கலையைக் கூடற் பெருவணிகன் சீத்தலையூர்ச் சாத்தன் றன்பால் பெற்றுனக்குப் பெருமையுடன் அணிவித் தார்கள்; திருவுயர்ந்த மார்பகத்தில் கலையால் வல்லான் திருத்தக்கன் தருசிந்தா மணியை வைத்தார்; அரசியென நீவிளங்க உன்வீட் டார்கள் அணிவித்த பொற்கலன்கள் நூறு நூறாம் இளையவளே! உயிரே!நின் காதல் வேண்டி ஏங்குகிறேன் கைகொடுப்பாய்! கையிற் கோல வளையெங்கே? நலங்காணத் துடித்தே நின்றேன் வாயிதழைத் தாராயோ? என்மெய்க் காதல் தளையவிழ உதவாயோ? குண்ட லந்தான் தயங்குசெவி வெறுஞ்செவியாய் இருத்தல் ஏனோ? ஒளிமிகுந்த நின்னெழிற்குக் களங்க மென்ன உணர்கின்றேன் அவைஎங்கே? அவைதாம் எங்கே? தென்னாட்டுத் திறன்முழுதும் பொருந்தக் கண்டு திருடினரோ வடக்கத்தித் திருடர் தாமும்! நின்வீட்டுப் புறக்கணிப்பால் இங்கு வந்தோர் நிகழ்த்தியபொய்ச் சதியோஎன் அகத்து வாழ்வாய்! என்பாட்டுக் குரியவளே! கவலை கொள்ளேல் எழில்மிகுத்துக் காண்பதற்கு நான்மு யன்று பொன்காட்டும் அப்பணிபோல் பலவும் செய்து பூட்டுகிறேன் பூட்டுகிறேன் காதல் நல்லாய்! 6 |