பக்கம் எண் :

130கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

தமிழ்தான் என்பேர்

அறுசீர் விருத்தம்

தேனினும் இனிய என்றன்
    தெளிதமிழ் தாழ்ந்த தேனோ?
மீன்புலி வில்லால் காத்த
    வேந்தர்தம் மரபில் வந்தோர்
ஊனின்நல் உயிரின் மானம்
    உயர்வெனுங் குறிக்கோள் கொண்டோர்
ஏனினும் ஊமை போல
    இருக்கின்றார் என்ற எண்ணம்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ள
    உடலினை நீவி இன்ப
வெள்ளத்தில் தென்றல் தள்ளி
    மெல்லெனச் செல்லத் திங்கள்
கள்ளனை நிகர்த்து மேகக்
    காவினுள் நுழைந்து செல்ல
நள்ளிராப் போதில் தூக்கம்
    நண்ணிடக் கனவிற் சென்றேன்

சென்றஎன் முன்ஓர் நங்கை
    செயல்மறந் தழுதல் கண்டு
கன்றின முகத்தாய்! ஏனோ
    கலங்கிய விழியோ டிங்கே
நின்றிடு கின்றாய்? அம்மா!
    நிலைஎனக் குரைப்பாய் நீயார்?
என்றலும் அவளும் ஒப்பி
    இயம்பினள் கண்ணீர் வார