பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்131

“வேங்கடம் குமரி நாப்பண்
    வெற்றியின் கொடிப றக்க
யாங்கணும் பகையே யின்றி
    யான்அர சோச்சி வந்தேன்
தீங்கென எவருஞ் செய்யின்
    தீயென வெகுண்டெ ழுந்து
பாங்குடன் வேந்தர் காக்கப்
    புலவர்கள் பாட வாழ்ந்தேன்

மலைகடல் ஆறு வானம்
    மாலையில் கதிரோன் காட்சி
அலைவுறும் மேகம் காதல்
    அகப்பொருள் அஞ்சா வீரம்
கலைமதி என்னும் இன்ன
    காசினி இயற்கை எல்லாம்
நிலைபுகழ்ப் பாட லாக்கி
    நின்றடி பணிய வாழ்ந்தேன்

இவ்வணம் வாழ்ந்த என்னை
    ஏளனப் பொருளா வைத்தார்
உய்வகை உண்டோ என்ற
    நினைவெனை உறுத்த லாலே
செய்வகை யின்றிக் கண்ணீர்
    சிந்தினேன் தமிழ்தான் என்பேர்
வெவ்வினை மாக்கள் என்ன
    விளைப்பரோ அறியேன்” என்றாள்

“அரசியல் மன்றில் ஏற,
    ஆண்டவன் திருமுன் நிற்க
உரிமையோ சற்று மில்லேன்
    உணர்வொரு சிறிது மின்றி
வருபவள் தனக்கே வாழ்வு
    வழங்கினர் என்றன் மக்கள்
எரிஎனக் குமுற நெஞ்சம்
    ஏங்கினேன்” என்றாள் அன்னை 7