பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்15

ஓர் ஆங்கிலப் பேரறிஞர், “மனிதனின் உணர்ச்சிகளை ஆட்சி செய்யும் அரசர்கள்,” என்று கவிஞர்களைக் குறிப்பிடுகிறார். (Poets are the rulers of ment’s spirits” - J.C. Shairp.) தமிழ் முடிசூடிப் படிப்பவர்தம் மன அரியணை ஏறி உணர்ச்சிகளை ஆளும் பாட்டுத் திறத்தாலும், அதைக்கொண்டு `வையகத்தைப் பாலிக்கும்’ திறத்தாலும் இவரும் முடியரசராகவே திகழ்கின்றார்.

ஆம், காதலியைப் பற்றிய கவிதையைப் படிப்பவனைக் காதலனாக, குழந்தையைப் பற்றிய பாவை இசைப்பவனைத் தந்தையாக, மொழி பற்றிய பாடல்களில் ஈடுபடுபவனைத் தமிழனாக, பண்புதரும் பாட்டுக்களை ஓதுபவனை மனிதனாக உயர்த்தி நல்லாட்சி புரிகின்றார்.

இப்பேரிலக்கியத்தால் நாம் பெறும் பயன்கள் இத்தனை யென்றால், இவை போதாவா?

இந்நூல் அச்சேறுங்கால் மெய்ப்பு நோக்கிச் செப்பம் செய்த கவிதைச் செல்வர் கல்லாடனுக்கும், எழுச்சிப் பாவலர் இலக்கி யனுக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருபத்தெட்டாண்டுகளுக்குப் பின் மூன்றாம் பதிப்பாக இந்நூலை வெளிக் கொணர்ந்த முத்துப் பதிப்பகத்தாரை வியந்து பாராட்டும் முகத்தான் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன்.

தமிழண்ணல்