18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
1. காவிய உலகம் காதற் சிலை நிலைமண்டில ஆசிரியப்பா தண்மலைச் சாரல் சார்தரும் சிற்றூர் கண்கவர் பொழில்சூழ் கருமலைக் குறிஞ்சி எனும்பெயர் கொண்டெழில் இலங்கிய தவ்வுழி இனமயில் அகவ இருந்ததோர் குன்றம்; கலைஞன் கோட்டம் குன்றின் அடியில் சிற்பக் கோட்டம் ஒன்றினை நிறுவி உலகோர் வியக்க வாழ்ந்தனன் சிற்பம் வல்லான் ஒருவன்; போழ்ந்தகற் பாறையிற் புகுத்திய புதுமை கண்டார் அவனைக் கடவுளே என்பர்; கற்பனைத் திறனும் கைச்சிற் றுளியும் பொற்புடன் படைத்த அற்புதப் பொருளெலாம் தொடாஅது நின்று தொலைவில் காண்போர் விடாஅது நோக்கி வியப்புற் றவையெலாம் உயிர்ப்பொரு ளென்றே உரைப்பர்; அவர்தாம் அயிர்ப்பொரு சிறிதும் அடையார்; அருகில் தொட்டுப் பயின்றபின் துணிகுவர் சிலையென; எட்டுத் திசையும் நிகரிலை எனமனம் விட்டுப் புகழ்வர்; விளைபுகழ் மொழிகள் கொட்டும் பொருள்கள் குறியாக் கொள்ளான் கலைவளர் நோக்கம் ஒன்றே கருத்தில் நிலையாக் கொண்டான் நினையான் பிறிதை; |