பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கலைபயில் சிறுவர் கல்வியைப் பெறஎன்
    காலடி நின்றே தவமிருப் பார்தெருவில்
விலைதர முடியாக் கலையினைக் கற்றே
    மேன்மைகள் எய்தினர்; நூல்களிற் பேர்தெரியும்

வறியவர் உரியவர் எனும்நிலை யின்றி
    வளரொளி எவர்க்கும் வழங்கிடும் முறைகொண்டேன்
சிறியவர் எறியும் கல்லடி பட்டுச்
    சிதறிட என்முகம் சீர்கெடும் நிலைகண்டேன்

என்னருள் ஒளியால் இருளது நீங்கி
    எழில்பெறும் உலகம் இனிமையில் திளைத்திருக்கும்
பன்னரும் நலங்கள் பாலித் திடுமெனைப்
    பழுதுறச் செய்தால் பண்பா நிலைத்திருக்கும்?