பன்மொழிகள் கற்றுணர்ந்த பண்புடையார் வாழ்வதனால் புன்மையிங்கு நேராது பூஞ்சிட்டே கண்வளராய் நம்நாட்டைச் சீரழிக்கும் நாலுவகைச் சாதிகளை வெந்காட்டச் செய்த விறலோனே கண்வளராய் ஆளும் மொழிஒன்றே அதுவும் தமிழென்றே நாளும் சொலும்என்றன் நாயகன்றன் மார்பகமும் பாட்டன் தடந்தோளும் பாய்ந்து விளையாடி வேட்டைக் களமாக்கும் வீரனே கண்வளராய் நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சப் போக்குக்குச் சாட்டை அடிகொடுக்கச் சார்ந்தவனே கண்வளராய் செஞ்சொற் சிலம்பிருக்கச் செம்மைக் குறளிருக்க அஞ்சற் கிடமில்லை ஐயன்மார் தேடிவைத்த சங்கத்துச் செல்வங்கள் சாந்துணையும் போதுமடா வங்கத்துச் சென்றோடி வாணிகம் செய்வதுபோல் பாரெல்லாம் சென்று பரப்பிடுவாய் நின்மொழியை ஊரெல்லாம் ஓடி ஒலிஎழுப்ப வேண்டுமடா ஆண்ட இனத்தாரை ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டு மெனக்கருதும் விழைவுடனே நீவாழ்வாய் அறம்நாட்ட வந்தவனே ஆணவம்சேர் மாற்றார்க்கு மறம்காட்ட வந்தவனே மாமணியே கண்வளராய் |