பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

“பாரதியின் காதற் பசுங்குயிலி நானேதான்”
என்றுரைக்க “நற்குயிலே எங்கள்கவி பாரதியை
நன்று விரும்பியபின் நாற்காலி மாடனையும் 80
நீள்வால் குரங்கனையும் நெஞ்சில் விருப்போடு
தாழ்காதற் பேச்சு மொழிந்தாய் சரிதானோ?
நல்ல செயலிதுவோ? நானறியச் செப்”பென்றேன்;
“புல்லும் மனத்தாற் புகுந்த எதிரிகளை
வெல்லும் வகையறியேன் வெற்றுக்குப் பொய்ம்மொழிகள்
சொல்லிக் கழித்ததன்றிச் சூதொன்றும் நானறியேன்”
என்றுவிடை கூறி இனிதிருக்க நானமர்ந்து
“நன்று குயிலே நமக்குகந்த பாரதிதான்
வேதாந்த மாக விரித்த பொருளுரைகள்
ஏதேனும் உண்டோ? எனக்கதனைக் கூறாயோ?”90
என்று நான் கேட்டேன்; இனியகுயில் வாய்திறக்க,
கொன்று தொலைக்கக் கொடும்பாவி ஓர்கயவன்
கல்லை எடுத்துக் கவண்வைத் தெறிந்தானே!
தொல்லை மிகவாய்த் துடித்து விழுந்தேன்நான்;
பஞ்சு பிதுங்கும் பழைய தலையணையைத்
தஞ்சம் புகுந்த தளிர்மேனி மூட்டைகள்தாம்
கொஞ்சி விளையாடக் கூம்புமிரு கண்மலர்ந்தேன்
நெஞ்சத் தவிப்பு நெடுங்கனவாய்ப் போனதந்தோ!
பாரதியார் நற்குயிலின் பாட்டுக்குள் வேதாந்தம்
யாரறியச் சொல்லிடுவார் இங்கு.100

இந்து மதாபிமான சங்கம்,

காரைக்குடி

11.9.1961