180 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
மூடுபனி சூழ முனைகின்றார் இக்கொடியர்; கேடுதருங் கொள்ளையரைக் கேட்பதற்கோர் ஆளில்லை; ஏனில்லை? செங்கதிரோன் இங்கே எழுவதற்கு நானுண் டெனச்சொல்லி நல்ல விடிவெள்ளி தோன்றிவரக் காண்கின்றோம்; துய்ய கதிரோனும் வான்றிகழ வந்துவிடின் வாட்டி வதைக்குமிந்த மூடுபனி சேர்ந்துருகி ஓடுபனி யாகாதோ? நாடுநலம் பெற்றிலங்கும் நாளிங்கு வாராதோ? வந்துவிடும்; வந்துவிடின் வாழ்விற் படுகின்ற வெந்துயரம் அத்தனையும் வீழ்ந்துநிலா வாகுமன்றே;30 மண்ணிற் குடும்பங்கள் மாண்புற்று முன்னேற எண்ணுகதிர் வாழ்த்தி இனிக்காண்போம் விண்குடும்பம்; நாட்டிற் குடும்பமெனில் நற்றலைவன் வேண்டுமன்றோ? காட்டுமிவ் விண்குடும்பங் காக்குந் தலைவன்யார்? வாழுங் கதிரவன்றான் வானிற் றலைமகனாம்; ஏழு கிழமையென எண்ணும் பொழுதில்நாம் முன்னையிடந் தந்து மொழிவது ஞாயிறெனும் முன்னவனை யன்றோ? முதன்மை அவற்களித்த காரணத்தால், விண்குடும்பங் காக்குந் தலைமையினால் தாரணிந்த நல்ல தலைமகனாக் கொண்டிடுவோம்;40 காக்குந் தலைவன் கதிரோன் எனப்படுமேல் ஆக்குந் தலைமகள்யார்? அந்தத் திருமடந்தை தண்மைக்கும் மென்மைக்கும் தங்கும் இடமாவாள் பெண்மைக்கோர் காட்டாகப் பேசும் இயல்புடையாள், நாணத்தாற் கார்முகிலாம் நற்றுகிலைப் போர்த்திவரும் வானத்தாள், தேனொத்தாள், வட்ட ஒளிமுகத்தாள்; இத்தனையுங் கொண்டாளை ஏத்தி நிலவணங்கென் றித்தரையோர் போற்றி இசைத்து மகிழ்வார்கள்; |