10. விண் குடும்பம் கலிவெண்பா உப்புமுதல் எல்லா உணவுப் பொருள்விலைகள் செப்பரிய ஏற்றத்தாற் செய்வ தறியாமல் மண்ணிற் குடும்பம் மதிமயங்கி நிற்குங்கால் விண்ணிற் குடும்பம் விரும்பிப் படைப்பதற்கு முன்வந்தார் இவ்வரங்கில் முத்தமிழில் வல்லவர்தாம்; என்சொல்லி வாழ்த்துவேன் இந்தத் துணிவுளத்தை! பேராசைக் காரர்களின் பேயாட்டப் போர்முகில்கள் தீராமற் சூழ்ந்து திகைக்கும் படியாக மின்வெட்டும் போழ்தத்து மேவாச் செயல்செய்து, கண்கட்டு வித்தையெனக் கள்ளத் தனம்புரிந்து.10 பண்டங்கள் யாவும் பதுக்கி மறைக்கின்ற முண்டங்கள், தாங்க முடியா விலைச்சுமையை நந்தலையில் ஏற்றுகின்றார்; நாடோறும் ஏற்றுவதால் வெந்துழன்று நொந்துமனம் வில்லாய் வளைகின்றோம்; வில்லாய் வளைந்தவர் வீறுற் றெழுவாரேல் சொல்லால் அதன்விளைவைச் சொல்ல முடிந்திடுமோ? தாழ்ந்து நிமிர்கின்ற வில்லின் நுனிபட்டுப் போழ்ந்துமுகம் செங்குருதி பொங்கி வழியாதோ? பற்றாக் குறையினைப் பாவியிவர் காசுபணப் பற்றால் விளைக்கின்றார்; பாரகத்தில் பஞ்சமெனும்20 |