பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கொஞ்சமோ பிரிவினைகள்?’ என்று கண்ணீர்
    கொட்டுதமிழ் மழைபொழிந்தும் ஒற்று மைக்கு
நஞ்சையிலே இடமில்லை; கள்ளி காளான்
    நன்றாக வளர்ந்துவரக் காணு கின்றோம்.13

‘தண்ணீரை விட்டோநாம் இந்த நாட்டில்
    தன்னுரிமைப் பயிர்வளர்த்தோம்? நாளும் நாளும்
கண்ணீரும் செந்நீரும் சிந்திச் சிந்திக்
    காத்திருந்தோம்; கருகாமல் வளர்ப்பீர்’ என்று
புண்ணான தனதுமனம் பொங்கிப் பொங்கிப்
    பொழிந்தானே வானமழை! அதனைச் சற்றும்
எண்ணாமல் திரிகின்றோம்; நெஞ்சில் ஈரம்
    ஏறாமல் இருக்கின்றோம் பாறை யாக.14

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக <
    வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
    களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாரதியின் எண்ண மெல்லாம்,
    வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
    நொந்தழிந்து போகானோ? நன்றோ சொல்வீர்?15

முன்பிருந்தோர் எழுதியநூற் கடலுள் மூழ்கி
    முகந்துவரும் பாரதியாம் மேகம் இங்கே
அன்பளைந்து தமிழ்மழையைப் பொழிந்த தாலே
    ஆறுபல தமிழகத்தே பாயக் கண்டோம்;
என்பொடிந்த தேகத்தும் எழுச்சி யூட்டும்
    எம்கவிபா ரதிதாசன் ஓரா றாவர்;
என்பினையும் உருக்குமணிக் கவிதை சொன்ன
    எங்கள்கவி மணியாரும் ஓரா றாவர்.16