பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 3

1. தமிழ் வாழ்வு

எண்சீர் விருத்தம்

தமிழ்பழுத்த சான்றோரும் மன்னர் தாமும்
      சங்கத்தால் தமிழாய்ந்த கூடல் தன்னில்
தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் மன்றத் துள்ளோர்,
       சாற்றினிமைக் கவிபுனையும் கவிஞர் கூட்டம்,
தமிழ்த்துணையே கடவுள்துணை என்றி றைஞ்சும்
      *தவமுனிவர், **நாவலராம் எங்கள் தோழர்,
தமிழ்திளைக்கும் மதுரைநகர்ச் சான்றோர் மாதர்
    அனைவர்க்குந் தலைதாழ்த்தி வணங்கு கின்றேன்(1)

நம்நாடு

தென்பொதிய மலைப்பிறந்து முல்லை தோய்ந்து
    தெருவெல்லாம் மணம்பரப்பும் தென்றல் நாடு;
தொன்மைமிகு கடல்மூழ்கிக் குளித்தெ டுத்துத்
    தூயமணி முத்தாரம் அணியும் நாடு;
வன்மைகொடு எவர்வரினும் போர்வாள் தாங்கி
    வாகையுடன் முரசொலியை முழக்கும் நாடு;
மென்மைமிகு தமிழ்எழிலை வளர்க்கும் மன்றம்
    மேலோங்கும் நம்நாடு தமிழநாடு(2)


*தவ முனிவர் - அரங்கில் இருந்த குன்றக்குடி அடிகளார்
**நாவலர் - அரங்கில் இருந்த திரு. நெடுஞ்செழியன்
முல்லை, தென்றல் முத்தாரம், போர்வாள், முரசொலி, எழில், மன்றம், நம்நாடு, தமிழ்நாடு என்னும் இதழ்களின் பெயர்களும் தோன்றப் பாடியது.