எனக்குப் பாட்டன் இசைதரு கவிதை இயம்பிய பாரதி(20) பாட்டைப் பண்ணொடு கேட்ட பட்டிக் காட்டான் பகர்ந்ததாக் கவிமணி இசைத்தபின் யானுங் கூறல் நாணுந் தகைத்தே இருப்பினும் உரிமை எனக்கும் உண்டு; பாரதி தாசன் பரம்பரை வந்தோர்(25) பலர்பலர் ஆவர்; பாப்புனை தொழிலால் யானுமம் மரபே யாவரும் அறிகுவர்; பாரதி தாசனைத் தந்தோன் பாரதி அத்தகு முறையால் அவன்என் பாட்டன் பாட்டன் பாட்டினைப் பாடுவன் கேண்மோ!(30) அவன்தரும் நன்னூல் கதிரோன் மறைதல் காணா நாட்டிற்* காரிருள் நுழையக் கண்டதப் பாட்டு; வீட்டில் நாட்டில் வெறுத்தோம் தமிழைக் கண்ணயர்ந் திருந்தோம் கண்டனன் துடித்துப் பாரெலாம் தமிழொலி பரப்புக என்றே(35) ஆணை தந்த(து) அவன்நூ லன்றோ? நெஞ்சில் உரமிலார் நிமிர்ந்து நடந்திட வஞ்சனை போக்கி வாழ்வு மலர்ந்திட உடலும் உளமும் உரம்பெறப் பாடிச் சோதிடம் இகழ்எனச் சொல்லும் அந்நூல்;(40)
*கதிரோன் மறைதல் காணா நாட்டிற், காரிருள் நுழையக் கண்டது அப்பாட்டு - என்பது, ஆங்கிலப் பேரரசில் கதிரவன் மறைவதில்லை என்று சொல்லி வந்ததையும் நம் நாட்டை விட்டு ஆங்கிலேயரை அகற்றி விட்டமையால் அவ்வாட்சியில் கதிரவன் மறைதல் கண்டமையையும் குறிக்கிறது. |