பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 33

எழுதுகோல் தெய்வமென் எழுத்துந் தெய்வம்
குழந்தையுங் கூளமுந் தெய்வ மென்றே
கடவுட் கொள்கை கழறும் மறைநூல்;

புரட்சிச் சின்னம்

சத்திரம் சாவடி தண்ணீர்ப் பந்தர்
வைத்தன போதும்! வாழ்வில் ஒளிதர(70)
ஏழை மாந்தருக் கெழுத்தறி வித்து
வீடுகள் தோறும் கலைவிளக் கேற்றுக
வீதிகள் எங்கணும் வேண்டுக பள்ளி
கல்வி இலாததோர் ஊரினைக் காணின்
ஒளிநெருப் புண்ண ஊட்டுக என்று(75)
பொங்கி எழுந்த புரட்சிச் சின்னம்;

விடுதலை முரசம்

பறையர் குறவர் பரவர் மறவர்
திறமை மிகுத்திடும் தீதறு தொழிலைப்
புரிந்தன ராகிப் புகழ்தரு கல்வி
அறிவால் உயர்ந்திட அகிலம் எல்லாம்(80)
வீறிட் டெழுந்த விடுதலை முரசம்;

போர்ப்படை வரிசை

வேதனை தந்திட வேற்படை வரினும்
தலையில் வானம் தகர்ந்து வீழினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லைஎன்
றார்த்தெழுங் கவிதை போர்ப்படை வரிசை;(85)

புதுமைக் கருவூலம்

செத்தபின் செல்லும் உலகம் உளஎனல்
பித்துரை பேயுரைஎன் றூதிய சங்கம்;
சுதந்திர தாகம் தணிக்கும் சுனைநீர்;