100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
எதைச் செய்தேனும் எப்படியேனும் வாழ்ந்து தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டனர். அதனால் பொருள் ஒன்றுதான் குறிக்கோளே தவிர அது வரும் வழியைப் பற்றி அக்கறை கொள்ளவோ சிந்திக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. ஆகவே பண்பாடு பற்றிக் கவலைப்படாமல், நாடோறும் மக்களைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் குமுகாயம், கண்ணை மூடிக்கொண்டுதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது, பயணஞ் செய்யும் வழியில் ஆழங்காண இயலாத பெரும்பள்ளம் இருப்பதை உணர்ந்தோர் சிவப்பு விளக்கைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனினும் விழித்துப் பார்க்காமல் வேகமாக நடைபோட்டுக் கொண்டுதான் செல்கிறது குமுகாயம். என்று விழிக்குமோ தெரியவில்லை! பண்பாட்டை ஓர் ஏளனப் பொருளாகக் கருதிப் புறக்கணித்து விட்டு, மக்கள் நடந்து செல்வதைக் காணுந்தொறும் மனம் வருந்தி உருகுவதுண்டு. மக்களின் தவறான போக்கு, என் நெஞ்சத்தில் அழுத்திக் கொண்டேயிருக்கும். வாய்ப்பு நேரும் போதெல்லாம் அவ்வழுத்தத்தால் ஏற்பட்ட வேதனைகளை வெளிப்படுத்துவதுண்டு. அதனை என் கடமையாகவே ஏற்றுள்ளேன். “கவிதை என் கைவாள்” என்று கவிஞர் ஒருவர் கூறியதை அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. குமுகாயக் குறைகளை - தீமைகளை - கொடுமைகளை எதிர்க்க அக்கைவாளைப் பயன்படுத்தி வருகிறேன். இவ்வாறு பாடுவதனால் குறைகள் தீர்ந்து. தீமைகள் மடிந்து, நன்மைகள் வளர்ந்து, குமுகாயம் நல்லதோர் மலர்ச்சி பெற்றுவிடுமா? கருதிய வெற்றி கைகூடுமா? என்று வினவலாம். வெற்றி தோல்வி யைப் பற்றிக்கவலை கொள்ளாமல், எதற்கும் அஞ்சாமல், துணிவொன்றையே அடிப்படையாகக் கொண்டு, போராடுவது தான் உண்மையான போர் வீரனுடைய கடமையாகும். அதே கடமை உணர்வுடன்தான் என் கைவாள் சுழல்கிறது. கோழி கூவியா பொழுது விடிகிறது என்பர். அது கூவுவதால் விடிகிறதோ இல்லையோ அதற்காகக் கோழி கூவாமல் இருப்பதில்லை. விடியும் பொழுது விடியட்டும், மக்கள் விழிக்கும் போது விழிக்கட்டும். அன்பன் முடியரசன் |