பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்99

மனிதனைத் தேடுகிறேன்

பொழுது புலரட்டும்

மக்கள், எண்ணிக்கையில் பெருகினர். பண்பாட்டில் அருகினர். உருவத்தாற் பொலிவு பெற்றனர்; உள்ளத்தால் நலிவு பெற்றுள்ளனர் உருவமும் உறுப்புகளும் வலிவும் பொலிவும் பெற்று விளங்குவதால் மட்டும் மக்கள் என்னும் பெயர் வாய்த்துவிடுவ தில்லை. உள்ளத்தால்- உயரிய பண்பால்-ஒழுகும் நெறியால் மக்கள் என்று சான்றோரால் அழைக்கப் பெறுவர். “உயர்திணை என்மனார் மக்கட் கட்டே”என்றுதான் தொல் காப்பியம் பேசுகிறது.

இன்றைய உலகில். அரசியலாயினும் சரி, ஆலயம் ஆயினும் சரி. கல்வி நிலைமாயினும் சரி, கடைத்தெருவாயினும் சரி-எதனை நோக்கினும் துறைதோறும் துறை தோறும் பண்பாடு குறைந்து வருகிறது. நல்லவர் உள்ளம் எலாம் நலிந்துருகும் வண்ணம் தீமைகள் மலிந்துவிட்டன. பண்பாட்டுக் குறைவு ஒரு நாகரிக மாகவே மாறி வருகிறது. ஆடவராயினும் மகளிராயினும். சிறியராயினும் பெரியராயினும், கற்றாராயினும் கல்லாராயினும், எவராயினும், விதிவிலக்கின்றி எவர்மாட்டும் இக்குறைபாடு இரண்டறக் கலந்து பரவி நிற்கிறது. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்று புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இந்நிலை குலைவிற்குப் பலப்பல கரணியங்கள் இருப்பினும் நாம் சிறிதுங் கவலை கொள்ளாது மக்களைப் பெருக்கி வருவதும் ஒரு தலையாய கரணியமாகும். மக்கட் பெருக்கமே பண்பாடு குன்றுவதற்கு அடிப்படைக் கரணியமாகும் என்பது என் எண்ணம். பெருகிவரும் மக்களுக்கேற்பப் பொருட் பெருக்கம் ஏற்படவில்லை, அப்பெருந்தொகையினர் வாழ்ந்தாகவேண்டும்.