இடருறல் கண்டேம் *இனைந்ததெம் மனனே; விளக்கொன் றிருந்தும் விளங்கா மாந்தர் கிணற்றில் வீழும் கெடுநிலை யுற்றார்; காலைக் கதிரவன் தோன்றிய பிறகும் நீளத் துயிலுதல் நெறியோ? முறையோ? அறியாப் பேரிருள் அகற்றிட எழுந்தான் நெறியால் முறையால் நீள்கதிர்ச் செல்வன்; எழுக எழுக என்றினிப் பாடுதும் தொழுக தொழுக சுடரெனப் பாடுதும்; தூண்டும் விளக்கெனத் துலங்கிடும்; மணிகாள் வேண்டும் வேண்டும் விழிப்பினி வேண்டும் நும்பா லமைந்துள நுண்ணறி வொளியைக் கண்போற் காக்கக் கருதும்=நும் ஆசான் தூண்டத் தூண்டத் துலங்கிடும்; ஆதலின் தூண்டும் விளக்கெனச் சொல்லினம் நும்மை; அத்தகு விளக்கினை அனுகிய யாமும் ஒத்தநன் முறையால் தூண்டுதல் உரியேம்; அயன்மொழிப் பற்றெனும் ஆரிருள் நீங்கிட உயர்மொழி தாய்மொழி ஒன்றே விளங்கிட அணையா விளக்கென ஆக்குதல் எங்கடன் துணையாய் வருகெனத் தூண்டுதும் யாமே; எம்மொழி யாயினும் அம்மொழிக் கடிமை செய்ம்முறை வேண்டேல், செந்தமிழ் வேண்டி எழுக எழுக என்றுமைத் தூண்டித் தொழுக தொழுக சுடரென மொழிவதே எங்கடன் முயலல்நும் கடனே.. அழகப்பர் கலைக்கல்லூரி - காரைக்குடி
*இனைந்தது - வருந்தியது. மனிதரைக் கண்டு கொண்டேன் |