பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

றாடிய காலுடன் ஒடிட முயல்வான்
ஒடிட முடியா துடலெலாம் வியர்ப்பான்;
உயிர்ப்பும் அடங்கி ஒடுங்கிய தோவென
அயிர்க்கும் வகையி லமைந்து கிடப்பான்;
வழியிடை மேவும் குழியும் மேடும்
தெளிவுற அறியாது திணறுவன் கலங்கி;
ஏறியும் இறங்கியும் இடறியும் நெறிதடு
மாறியும் மயங்கியும் மனத்துய ரெய்தி,
அழிது ருற்றே அலமந் தேகுவன்,
விழியொளி பெறாற்கு விளைவன இவையாம்.
மதியொளி பெறானும் மடமையிற் சென்று
கதியொன் றறியாது கலங்குவன் இவ்வணம்;
எதிர்நாள் வருவதை இன்னதென் றுணரான்;
ஒன்றைமற் றொன்றாப் பிறழ்ந்திட வுணர்ந்து
பொன்றுவன்; ஒன்றும் புரியா தொழுகுவன்;
தீதும் நன்றுந் தெரியா திறங்கி
வேதனைக் குழியில் வீழ்ந்து மயங்குவன்;
ஆதலின் வாழ்வில் ஆய்ந்து நன்னெறி
ஈதென வுணர்ந்தே இன்ப மெய்திட,
நல்லன தீயன நாடி யறிந்து
செல்வழி நோக்கிச் சென்றிட உய்ந்திட
அறிவெனும் விளக்கினை அடைந்திடல் வேண்டும்;
உலக மாந்தர் நிலையினை நோக்கின்
விலகிய நெறியே விழைவது கண்டோம்;
அன்பும் பண்பும் ஆர்ந்துநம் மாந்தர்
இன்பவாழ்வின் இலங்கிட விழைந்தோம்;
அவர்தம் துன்ப வாழ்வே துணையெனக் கொண்டு
தொடர்வது கண்டு துவண்டதெம் முளமே;