பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

1
என்றும் வாழ்வர்

அள்ளிக் கொடுத்தவர் சாவதில்லை
அன்பு மனத்தவர் மாய்வதில்லை - அள்ளிக்

உள்ளம் மிகுத்தவர் வீழ்வதில்லை
ஓங்கு பெரும்புகழ் சாய்வதில்லை - அள்ளிக்

முல்லைக் கொடிக்கொரு தேர்கொடுத்தான் - பாரி
முத்தமிழ் வாணர்க்கோ ஊர்கொடுத்தான் - அள்ளிக்

சொல்லுந் தமிழ்க்குயர் வாழ்வளிக்கக் குமணன்
தூய தலைகொள வாள்கொடுத்தான் - அள்ளிக்

நெல்லிக் கனிக்கொரு பேரளித்தான் அதியன்
நீள்புகழ் அவ்வைக்கு வாழ்வளித்தான் - அள்ளிக்

கல்விப் பணிக்கெனச் சீர்கொடுத்தான் - அழகன்
கைப்பொருள் யாவையு மேகொடுத்தான் - அள்ளிக்

வள்ளல்க ளாமென வாழ்பவரை
மாய்ந்தனர் என்றிங்கு யாருரைத்தார்?

உள்ளம் இருப்பவர் யாவருமே
உலக வரைப்பினில் வாழ்ந்திடுவார்.